ஓய்வெடுக்க வேண்டிய வயது என்று மற்றவர்கள் நினைக்கும் வயதில் ஓவியங்கள் வரைந்துவருகிறார் பிரபலகுமாரி. 75 வயதான இவர், திருக்குறள்களுக்கு ஓவியங்களை வரைந்து அசத்திவருகிறார். கரூர் சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த பிரபலகுமாரி, ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர்.
“நானும் என் கணவரும் ஓவிய ஆசிரியர்களாகப் பணிபுரிந்தோம். பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஓவிய ஆர்வத்துக்கு ஓய்வளிக்கவில்லை” என்று சொல்லும் இவர், ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்துவருகிறார். கைவினைப் பொருட்கள், குந்தன் வேலைகள், ஆபரணங்கள் போன்றவற்றைச் செய்து, விற்பனை செய்துவருகிறார்.
“என் கணவர் ஓவியம் கற்றுக்கொண்ட குரு தேவசகாயத்துக்கு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருக்குறள்களுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றிய என் கணவர், அனைத்துக் குறள்களுக்கும் ஓவியம் தீட்ட முடியாது என்றார். என்னால் முடியும் என்று சவாலாக எடுத்துக்கொண்டு, காமத்துப்பாலில் உள்ள குறள்களுக்கு வரைய ஆரம்பித்தேன்” என்று தான் குறள்களுக்கு வரைய ஆரம்பித்த காரணத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரபலகுமாரி.
டிசைன் ஃப்ரீ ஹாண்ட் ட்ராயிங் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். முதுமையிலும் புதுமையாக ஓவியங்கள் தீட்டுவதும் அவற்றைப் பல்வேறு கண்காட்சிகளில் இடம்பெற வைப்பதுமாக ரசனையாக வாழ்ந்துவருகிறார் பிரபலகுமாரி.