வட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம், நீச்சல் போட்டிகளில் இதுவரை 41 தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்திருக்கும் ஜெயங்கொண்டம் சிவகாமிக்குப் பார்வை கிடையாது.
“பிறவியிலேயே எனக்குப் பார்வையில்லை. பத்தாம் வகுப்பு வரை படித்தேன். கணவர், இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறேன். 2012-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடனுதவி பெற்று, ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறேன்” என்ற சிவகாமிக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. குண்டு எரிதல், வட்டு எரிதல், ஓட்டப் பந்தயம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வாங்காமல் திரும்பியதில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் சிவகாமி, பெரும்பாலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுவிடுகிறார்.
”2012 முதல் 2016 வரை நான் கலந்துகொண்ட போட்டிகளில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறேன். இதுவரை 41 தங்கப் பதக்கம் உட்பட 45 பதக்கங்களைப் பெற்றுள்ளேன். மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். என் சமுதாயப் பணிக்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து பாராட்டுப் பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. இந்த ஆண்டு காரைக்காலில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், துபாயில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் தயாராகிவருகிறேன்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாரியப்பனால், மாற்றுத் திறனாளிகளுக்குப் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் மாரியப்பனும் நானும் ஒரே மைதானத்தில் பயிற்சி பெற்றோம். அவர் தங்கப் பதக்கம் வென்றதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி” என்கிறார் சிவகாமி.
தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றால் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதில்லை. எனவே விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்காக முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கிறார் சிவகாமி.