பெண் இன்று

போகிற போக்கில்: பட்டுக்கூட்டிலும் அள்ளலாம் பணம்!

வி.சீனிவாசன்

கற்பனை வளமும் கைத்திறனும் இருந்தால் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்பதற்கு ஆயிரம் உதாரணம் இருந்தாலும் பட்டுக்கூட்டில் தயாராகும் கலைப் பொருட்களுக்கு அந்தப் பட்டியலில் தனி இடம் உண்டு. பட்டுக்கூட்டை உடைத்துக்கொண்டு பட்டுப்புழுக்கள் வெளியேறியதும், பட்டுக்கூடுகளை மலிவு விலையில் விற்பனை செய்கின்றனர். அவற்றை வாங்கிச் செல்லும் பெண்கள் அந்தப் பட்டுக்கூடுகளை வண்ணமேற்றி, பலவகை பூக்கள், எழில்கொஞ்சும் தோரணங்கள், மனம்கவர் பொம்மைகள் என்று அருமையான கலைப்பொருட்களாக மாற்றுகின்றனர்.

காகிதம், களிமண், கிறிஸ்டல் ஆகியவற்றில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்துத் தெரிந்துகொள்ளப் பல இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையதளங்களும் ஓரளவு கைகொடுக்கின்றன. ஆனால் பட்டுக்கூட்டில் கலைப் பொருட்கள் செய்வது என்பது பலருக்கும் புதிது. இந்தக் கலையின் நுட்பம் தெரியாமல் தவிக்கும் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக சேலம் மண்டல பட்டு வளர்ச்சித் துறை ஆராய்ச்சி நிலையம் சார்பில் பட்டுக்கூடு கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ள பெண்களும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.

“இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் பலர், வீட்டில் இருந்தபடியே பட்டுக்கூட்டில் கலைப் பொருட்களைச் செய்து, பொருளாதார ரீதியாக முன்னேறிவருகின்றனர்” என்று சொல்கிறார்கள் பட்டு வளர்ச்சித் துறை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜ்குமார் மற்றும் சக்திவேல்.

தமிழகத்தில் எட்டு இடங்களில் பட்டு முட்டை வித்தகம் இயங்கிவருகிறது என்று சொல்லும் அவர்கள், பட்டு முட்டை வித்தகங்களில் பட்டுக்கூட்டில் இருந்து வெளியேறிடும் பட்டுக்கூட்டை கைவினைக் கலைஞர்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.

தலை நிமிர்ந்து நிற்கலாம்

சேலம், நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த கமலா சிதம்பரத்தின் வீட்டுக்குள் நுழைந்தால் பல வண்ண மலர்கள் வரவேற்கின்றன. பல்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும் கவனம் ஈர்க்கும் மலர்களுக்கு நடுவே அமர்ந்தபடி அவற்றை மாலையாகக் கோக்கிறார் கமலா. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகப் பட்டுக்கூடு கைவினைப் பொருள் தயாரிப்பு குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்திவருகின்றனர் கமலா சிதம்பரம் தம்பதி.

“எங்களிடம் இதுவரை 85 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். பட்டுப் புழுக்கள் வெளியேறிய பட்டுக்கூடு கிலோ ரூ.921 விலையில் வாங்குகிறோம். இதன் மீதுள்ள பஞ்சுகளை அகற்றி, அவற்றை பொம்மைகளுக்குள் அடைக்கப் பயன்படுத்துகிறோம். பிறகு மொழுமொழுவென இருக்கும் பட்டுக் கூடுகளுக்கு வண்ணமேற்றுவோம். நிறத்துக்கு ஏற்றபடி ரோஜா, சூரியகாந்தி, ஆஸ்டர், டேரி என்று பல வகை பூக்களாக உருமாற்றுகிறோம். பூங்கொத்து, பூமாலை, அலங்காரத் தோரணங்கள், உருவப் படங்களுக்குச் சூட்டும் மாலைகள், பூந்தொட்டி, வீட்டு அலங்காரப் பொருட்கள் என்று 265 வகையான கைவினைப் பொருட்களை இந்தப் பட்டுக் கூடுகளைப் பயன்படுத்தி செய்கிறோம்” என்று சொல்லும் கமலா, இந்தக் கைவினைப் பொருட்கள் மூலம் மாதம் கணிசமான வருவாய் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

“ஒரு கிலோ பட்டுக் கூடு போக்குவரத்துச் செலவுடன் ஆயிரம் ரூபாய் என்றாலும், மூலப் பொருட்கள், வண்ணப்பூச்சு, பானை, ஸ்டிக்கர், பிளாஸ்டிக் செடி வகைகள் என மொத்தம் ரூ.2,500 செலவாகும். ஐந்து நாட்களில் நாம் செய்து முடிக்கும் கைவினைப் பொருட்கள் மதிப்பு ரூ.6,000 என்று வைத்துக்கொண்டால் மாதம் ரூ.21 ஆயிரம்வரை வருவாய் தரும் தொழிலாக இது இருக்கிறது. கொஞ்சம் பணமும், நிறைய ஆர்வமும் இருந்தால் பட்டுக் கூடு கைவினைப் பொருள் தயாரிப்பில் சாதிக்கலாம். போதுமான வருமானத்துடன் தலை நிமிர்ந்து நிற்கலாம்” என்று நம்பிக்கை தருகிறார் கமலா.

படங்கள்: குருபிரசாத்

SCROLL FOR NEXT