பெண் இன்று

போகிற போக்கில்: புதுமையும் பொறுமையும் வெற்றி தரும்

அன்பு

செய்யும் வேலையில் முழுமையான ஈடுபாடு இருந்தால், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் நிச்சயமாகச் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் லாவண்யா.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யாவுக்கு எப்போதும் புதுமையான விஷயங்களைச் செய்து பார்க்கவே ஆர்வம். தற்போது தங்க நகைகள் மீது பலருக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உடைக்கு ஏற்ப விதவிதமாக, புதுப் புது டிசைன்களில் செயற்கை நகைகளை அணிந்து செல்லவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இதையே தன் வியாபாரத்துக்கு அடித்தளமாக மாற்றியிருக்கிறார் லாவண்யா.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தன் கலைத் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறு வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தார் லாவண்யா. சூழ்நிலை அறிந்து அவர் அப்பா செய்த பொருளாதார உதவி, லாவண்யாவின் தொழிலுக்கு வெற்றியாக அமைந்தது.

“எல்லோருக்கும் தங்களுக்கு விருப்பமான டிசைன்களில் நகைகள் அணிய ஆர்வமாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு டிசைன் கடைகளில் எளிதில் கிடைக்காது. உடைகளுக்கு ஏற்ற மாதிரி நகைகளை உருவாக்கினால், ஓரளவு எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். யாரிடமும் பயிற்சி பெறாமல் நானே ஒவ்வொரு டிசைனையும் பிரத்யேகமாகச் செய்தேன். முதலில் சின்னச் சின்ன ஆர்டர்கள்தான் கிடைத்தன. ஆனாலும் மனம் தளராமல் பொறுமையாகக் காத்திருந்தேன். அதன் பலனாக இப்போது சொந்தமாகக் கடை வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்” என்கிறார் லாவண்யா. இவரது கைவண்ணத்தில் மணப்பெண் ஜடை பூ அலங்காரம், நகை அலங்காரம், விழாக்களில் வைக்கப்படும் சீர் வரிசைத் தட்டுகள் போன்றவை கலை நயத்துடன் மிளிர்கின்றன.

“பெண்களை நகை விஷயத்தில் திருப்திப்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். ஆனால் வாடிக்கையாளர் நூறு சதவீதம் மனநிறைவு அடைந்தால்தான் எனக்குச் சந்தோஷமாக இருக்கும். பதினோரு ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்துவருகிறேன். ஆனால் எல்லா நிலையிலும் என்னைத் தொழிலாளியாகவே நினைத்துச் செயல்பட்டுவருகிறேன்” என்று சொல்லும் லாவண்யா, புதுமையும் பொறுமையும் தன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

SCROLL FOR NEXT