நூலகத் தந்தை சீர்காழி எஸ். ரங்கநாதனிடமிருந்து வரப்பெற்ற கடிதம் ஒன்று தனது பாட்டி சுப்புலட்சுமியின் பெட்டிக்குள் இன்னும் இருப்பதை FRAGMENTS OF A LIFE என்னும் நூலில் (தமிழில் ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’. மொழிபெயர்ப்பு: கி.ரமேஷ், பாரதி புத்தகாலயம்) குறிப்பிடுகிறார் ஜனநாயக மாதர் சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த மைதிலி சிவராமன்.
சனாதன அமைப்பில் தான் சிறைப்பட்டிருந்த குடும்ப வாழ்க்கைக்கு வெளியே நீண்டிருந்தன சுப்புலட்சுமியின் வாசிப்பு வேர்கள். தமக்குத் தேவையான நூல்கள் உள்ளனவா என்று கேட்டு அவர் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துக்கு எழுதிய கடிதத்துக்கான பதில் கடிதம் அது. சமையல் அறையில் எண்ணெய்க் கறை படிந்த வாசிப்பை எத்தனையோ பெண்கள் காலகாலமாக ரகசியமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
பழைய விகடன், கல்கி, குமுதம் தொடர்களை பைண்டு செய்துவைத்துப் படித்த பாட்டிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றனர். ஐந்து வயதில் மணமுடித்து ஆறரை வயதில் விதவையாகி, தொண்ணூறு வயது முடிய வாழ்ந்த பட்டம்மாள் என்னும் எங்கள் பாட்டி ஒருவர், கையில் கிடைப்பதையெல்லாம் வாசித்தபடி எத்தனையோ உறவுக்காரப் பெண்களுக்குப் பேறு காலத்தில் உடனிருந்து உதவி செய்து மறைந்தவர்.
வீட்டுக்குள் உழன்றபடியும், வெளியே எண்ணற்ற அலுவல்களோடு ஓடிக்கொண்டும், சமூகத்தில் பெரும் பொறுப்பை வகிப்பவர்களாகவும் உள்ள ஏராளமான பெண்கள் அதிகம் பேசப்படாத மகத்தான வாசகர்களாக இருக்கின்றனர். காற்றில் மிதக்கும் இசைபோல, இசை ஏந்திவரும் பாடல்போல, பாடல்வழி ஊடுருவும் எண்ணங்களைப் போல வாசிப்பு இவர்களோடு இணைந்து இயங்கிக்கொண்டிருக்கவும், தேவையானபோது இயக்கவும் செய்கிறது.
வாசிப்பை முன்னிறுத்தும்போது மனித வாழ்க்கைத் தரமும், பண்பாக்கங்களும், பகிர்வின் தளங்களும் மேலதிக உயரத்தை எட்ட முடியும். வாசகக் குடும்பம் உருவாவதில் பெண்களின் பங்களிப்பு உன்னதமாக அமையும் தன்மையும் சேர்ந்திருக்கிறது.
புத்தகப் பரிசைக் குழந்தைகள் மிகவும் துள்ளாட்டம் போட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வாசிப்பைத் தக்கவைத்துக் கொண்டால் எத்தனை உரம்பெற்ற வாழ்க்கையை, உயரங்களைத் தொடும் அனுபவங்களை அவர்கள் பெறுவார்கள், அதிலும் பெண் குழந்தைகள்!
எத்தனை முற்போக்காகப் பேசிக் கொண்டாலும், நவீன சமூகம் பாலின வேறுபாட்டை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறுவிக்கொண்டேயிருக்கிறது. அதை உடைப்பதற்கான முயற்சிகளைத் தூண்டவும், துலங்க வைக்கவும் வாசிப்பு மிகப் பெரிய ஆயுதமாக அமைய முடியும்!