பொதுவாக அம்மாவிடம் இருந்துதான் பலர் பல கலைகளைக் கற்றுக்கொள்வது வழக்கம். சென்னையைச் சேர்ந்த சுமதி ராஜ், தன் மகளிடம் இருந்து கைவினைக் கலையைக் கற்றிருக்கிறார். அதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகம். ஃபேப்ரிக் பெயிண்டிங்கும் பிடிக்கும். அதெல்லாம் ஓரளவுக்குக் கத்துக்கிட்ட பிறகு ஃபேஷன் நகைகள் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நாள்ல அதுக்கு வரவேற்பு குறைஞ்சதால வேற ஏதாவது புதுசா செய்யலாமேன்னு யோசிச்சேன். அப்போதான் என் பொண்ணு எனக்கு ஆரத்தித் தட்டு செய்யறதை அறிமுகப்படுத்தினா.
அவ படிச்ச கவின்கலை அதுக்குக் கைகொடுத்துச்சு. அவகிட்டே அடிப்படை சங்கதிகளை மட்டும் கத்துக்கிட்டு, மத்ததை எல்லாம் இண்டர்நெட்ல தேடிப்பிடிச்சேன். இப்போ விதவிதமா, புதுப்புது வடிவங்கள்ல ஆரத்தி தட்டு செய்யறேன்” என்று சொல்கிறார் சுமதி.
ஆரத்தித் தட்டுக்களை விற்பனை செய்வதற்கு இவர் அதிக சிரமம் எடுத்துக் கொண்டதில்லை. காரணம் இவரிடம் ஆரத்தித் தட்டுக்கள் வாங்கியவர்களின் வாய்மொழி மூலமாகவே தகவல் பரவி, பலர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். விலையும் கட்டுப்படியாகிற அளவில் இருப்பதால் பலர் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள்.
“பொதுவா பெரிய கடைகளில் இந்த மாதிரி ஆரத்தித் தட்டுக்களை நானூறுல இருந்து ஐநூறு ரூபாய் வரைக்கும் விற்பனை செய்வாங்க. ஆனா என்கிட்டே நூறு ரூபாய்ல இருந்து ஆரத்தித் தட்டுக்கள் கிடைக்கின்றன” என்று சொல்லும் சுமதி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் பெண்களுக்கும் இலவசமாக கைவினை வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறார்.