பெண் இன்று

துரத்தப்படுபவர்களின் போர்க்குரல்

ஆதி வள்ளியப்பன்

நர்மதை அணைத் திட்டத்துக்காக சொந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்டவர்கள் என்றாலும் சரி, மும்பையை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்துவதானாலும் சரி, நாட்டில் எங்கெல்லாம் சாதாரண மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அவற்றுக்கு எதிரான போராட்டத்தில் முதல் ஆளாக நிற்பவர் மேதா பட்கர்.

பேரணைகள், பெரும் அடுக்குமாடிகள், பிரம்மாண்டம் போன்றவையே சிறப்பானவை என்று நம்பும் நமது தேசத்தில், பல்வேறு நுணுக்கமான முறைகளில் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிரான அறப் போராட்டத்தைத் தனது வாழ்க்கையாகக் கொண்டுள்ளார் மேதா.

தடியடிகளையும், உண்ணாவிரதத்தையும், சிறையிலடைப்பையும் தொடர்ச்சியாகச் சந்தித்துவருபவர். எந்த ஒரு பிரச்சினை, போராட்டம் என்றாலும் தனது கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்துபவர். ‘‘ஏழைகளும் இந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்டவர்களும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் வலுவை எனக்குத் தருகின்றனர்” என்கிறார்.

மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் (TISS) சமூகப் பணித் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காகப் பதிவு செய்துவிட்டு, பாதியிலேயே அதை கைவிட்டார். மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததால், அவர் அப்படிச் செய்தார்.

அவரது தந்தை வசந்த் கனோல்கர் தொழிற்சங்கவாதியாகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்ததன் காரணமாக, சோஷலிச ரீதியிலான உலகப் பார்வை அவருக்குக் கிடைத்திருந்தது. அவரது தாய் இந்து, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். இப்படி மேதா பட்கருக்கு அவரது பெற்றோரே ஆதர்சம். காந்தி, அம்பேத்கர், ஜோதிபா புலே, மார்க்ஸ் போன்றோரது தத்துவச் சிந்தனைகளில் இருந்துதான் மேதாவின் கொள்கைகள் உருவாகின.

1988ஆம் ஆண்டு நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தினார். 30 பெரிய அணைகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய நதி மேம்பாட்டுத் திட்டமான, நர்மதை நதி மீது கட்டப்பட இருந்த சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்தார்.

அந்த அணைக்கட்டுத் திட்டம் காரணமாக குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் 3,20,000 பழங்குடிகள் வீடிழந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் முழுமையான மறுவாழ்வு கிடைக்கவில்லை. 37,000 ஹெக்டேர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

1991ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி அம்மாத இறுதி வரை 22 நாள்களுக்கு நீண்டதொரு உண்ணாவிரதப் போராட்டத்தை, 6 பேருடன் இணைந்து மேற்கொண்டார் மேதா. இதையடுத்து நர்மதை அணையைக் கட்டுவதற்காக நிதி வழங்கியிருந்த உலக வங்கி, நிதியுதவியை மறுபரிசீலனை செய்வதற்காக மறுஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவின் முடிவுகள் கட்டுமானப் பணி குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து உலக வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

ஆனால், “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமல் மத்திய அரசு துடைத்துக்கொண்டதையே இது காட்டுகிறது” என்று மேதா விமர்சித்தார். 1995இல் நர்மதை அணைத் திட்டங்களில் இருந்து உலக வங்கியின் தொடர்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இது நர்மதை பாதுகாப்பு இயக்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

உலகமயமாக்கத்தின் வாசலில் மிகப் பெரிய வளர்ச்சித் திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்ற மத்திய அரசு துடித்துக் கொண்டிருந்த நேரத்தில், மிகப் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்படி எதிராக இருக்கின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கிய போராட்டம் நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினுடையதுதான்.

பிரம்மாண்ட வளர்ச்சி நிலையில்லாதது என்பதை அந்த இயக்கம் வலியுறுத்தியது. காடழிப்பு, விவசாயிகள், பழங்குடிகள் வெளியேற்றம் ஆகியவற்றைக் கவனப்படுத்தியது மட்டுமில்லாமல், ஒரு வளர்ச்சித் திட்டத்தால் வெளியேற்றப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடோ, நிவாரணமோ, மாற்றுஇடமோ தரப்படுவதில்லை என்பதையும் நிரூபித்தன நர்மதை பாதுகாப்பு இயக்கம் நடத்திய போராட்டங்கள். வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக வெளியேற்றப்படும் மக்களுக்கு, அத்துடன் வாழ்வு தொலைந்தது என்பதை அவர்களது போராட்டம் வெளிச்சமிட்டுக் காட்டியது.

இதுபோன்ற பேரணைத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களாக முன்னிறுத்தப்பட்ட நீர் மின்சக்தி, பாசனத்துக்கான நீர், குடிநீர் போன்ற எவையும் முன்மொழியப்பட்ட அளவு சாத்தியப்படவில்லை என்பதையும் இவர்களது போராட்டம் கவனப்படுத்தியது. சுருக்கமாக, இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் ‘துன்பியல் வளர்ச்சி’யாகவே அமைகின்றன என்றது.

வளர்ச்சி பற்றிய விவாதத்தை இவர்களது போராட்டம், நாடு தழுவிய அளவில் முன்னெடுத்ததுடன், பெருவளர்ச்சிக்கு மாற்றாக மக்களையும் சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்காத மையப்படுத்தப்படாத, ஜனநாயகமான, நிலைத்த வளர்ச்சி போன்றவை ஒன்றிணைந்த சிறிய வளர்ச்சித் திட்டங்களை முன்மொழிந்தது.

நர்மதை அணைப் போராட்டம் உச்சத்துக்குச் சென்ற 1991ஆம் ஆண்டில் மாற்று நோபல் பரிசு என்றழைக்கப்படும் ரைட் டு லைவ்லிஹுட் (Right to livelihood award) விருது மேதா பட்கர், பாபா ஆம்தே, நர்மதை பாதுகாப்பு இயக்கம் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டது.

இப்படி கடந்த 25 ஆண்டுகளாக நர்மதை பாதுகாப்பு இயக்கம் மூலம், நர்மதை நதியின் கரைகளில் இருந்து துரத்தப்பட்ட, வாழ்வு அழிக்கப்பட்ட மக்களின் குரலை உலகெங்கும் ஒலிக்க வைத்துவருகிறார் மேதா.

(1991இல் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரையிலான இதே காலத்தில்தான், மேதா பட்கரின் புகழ்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது)

SCROLL FOR NEXT