பெண் இன்று

போகிற போக்கில் : கலையைக் கற்க கட்டணம் கட்டாயமில்லை!

அ.பார்வதி

கைவினைக் கலைகளைக் கற்றுத் தருகிற பயிற்சி வகுப்பு எப்படி இருக்கும்? ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட நேரமும் அதற்கேற்ற கட்டணமும் இருக்கும்தானே! ஆனால் செல்வி நடத்துகிற பயிற்சி வகுப்பில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. அவரவருக்கு விருப்பமான நேரத்தில் வந்து கற்றுக் கொள்ளலாம். கட்டணமும் இவ்வளவுதான் செலுத்த வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

சென்னை புரசைவாக்கத்தில் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கைவினைக் கலை பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார் செல்வி திலீப். கிட்டத்தட்ட அறுபது வகையான கைவினைக் கலைகளைக் கற்றுவைத்திருப்பதுடன் அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்.

எதையுமே கடமைக்காகச் செய்யாமல் விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் செல்வி. இவருக்குப் பள்ளி நாட்களில் படிப்பைவிட கலைப் பொருட்கள் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது.

“என் அத்தை, பெரியம்மா என்று வீட்டில் எல்லோரும் கலைப்பொருட்கள் செய்வதில் வல்லவர்கள்! ஸ்வெட்டர் பின்னுவது, பொம்மை செய்வது என ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டேஇருப்பார்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் கலைப் பொருட்கள் செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது” என்று சொல்லும் செல்வி, எங்கெல்லாம் பயிற்சி வகுப்பு நடந்ததோ அங்கெல்லாம் போய் கற்றுக்கொண்டிருக்கிறார். அப்படி கற்றுக்கொண்டதுதான் இன்று மாதம் 20,000 ரூபாய்வரை சம்பாதிக்கும் அளவுக்கு இவரை உயர்த்தியிருக்கிறது.

தோள்கொடுக்கும் குடும்பம்!

“சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டேன். அப்பாவும் என் இரண்டு சகோதரிகளும்தான் எனக்குக் கிடைத்த பெரும் நம்பிக்கை. அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் எனக்குத் தெரிந்த கலையை நம்பி களத்தில் இறங்கினேன். என் வெற்றியில் என் கணவருக்கும் மாமியாருக்கும் பங்குண்டு. காதல் திருமணம் செய்துகொண்ட எனக்கு, எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாகவே இருந்தது. அப்போது எனக்கு ஆறுதலாக இருந்து, என்னையும் என் திறமையையும் நம்பி என்னைச் சுதந்திரமாக செயல்படவிட்டார்கள்” என்று புன்னகைக்கிறார்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செல்வியிடம் கைவினைக் கலைகளைக் கற்றுச்சென்றுள்ளனர். செல்வியின் படைப்புகளில் கவனம் ஈர்ப்பவை குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித்தரும் குட்டித் தலையணைகள்! மதுரை, சேலம் போன்ற வெளியூர்களிலிருந்தும் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள வருகிறார்களாம்.

“சிலர் சிறுதொழில் தொடங்கவும் சிலர் வீட்டை அலங்கரிக்கவும் கைவினைக் கலைகளைக் கற்க வருவார்கள். அவரவர் விருப்பத்துக் ஏற்ப அவற்றைக் கற்றுத்தருவேன். கைவினைக் கலைகள் எனக்குப் பணம் தரும் தொழிலாக மட்டுமல்லாமல் மன நிறைவு தருகிற சக்தியாகவும் இருக்கின்றன” என்கிறார் செல்வி.

படங்கள்: நா. ரேணுகாதேவி

SCROLL FOR NEXT