ஆமிர் கான் நடித்த தங்கல் திரைப்படம் பார்த்துவிட்டு, கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூவரும் சாட் உணவகத்துக்கு வந்தனர்.
பானிபூரியை ஆர்டர் செய்த கனிஷ்கா, “படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மல்யுத்தப் போட்டியில் உலக அரங்கில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வச்சவங்க கீதா போகத். மல்யுத்த களத்தில் பெண்களுக்கு என்ன வேலைன்னு சிரிச்சவங்களோட வாயை பதக்கத்தால் அடைச்சாங்க ஹரியாணாவைச் சேர்ந்த இந்த கீதா. இவரோட அப்பா மகாவீர் போகத் மல்யுத்த வீரர். தன்னால் தேசத்துக்கு வாங்கிக் கொடுக்க முடியாமல் போன பதக்கத்தைத் தன் மகள்கள் மூலம் வாங்கித் தந்தவர். இப்படி மகாவீர் போகத்தின் கதையாக ஆரம்பித்து, கீதா போகத்தின் கதையா படம் முடியுது” என்று சிலாகித்தாள்.
“எல்லோரும் பார்க்க வேண்டிய படம். 51 வயசு அமிர் கானே நான்கு பெண் குழந்தைகளின் அப்பாவாக, ஹீரோயிசத்தைக் காட்டாதவராக நடிக்க ஆரம்பிச்சிட்டார். அறுபதுகளைக் கடந்த தமிழ் ஹீரோக்கள் எப்போ இப்படிப்பட்ட அழுத்தமான கதைகளில் நடிக்கப் போறாங்களோ!” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கமலா பாட்டி.
ஒரு பானிபூரியை விழுங்கிய கல்பனா ஆன்ட்டி, “விளையாட்டுல மட்டுமில்ல, இதுவரை ஆண்கள் மட்டும் செய்துவந்த சில வேலைகளை பெண்களும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஒளிப்படக்காரர் கிறிஸ் கிரிஸ்மன் உலகம் முழுவதும் அசாதாரண வேலைகளைச் செய்யும் பெண்களை ஒளிப்படம் எடுத்திருக்கார். நியூயார்க்கில் வசிக்கும் ஹெதர் மரோல்ட் தாம்சன் இறைச்சிக்கடை நடத்தி, தானே வெட்டியும் கொடுக்கிறார். கடலுக்குள் ராட்சத இறால்களைப் பிடிக்கும் பணியைச் செய்யறாங்க சடி சாமுவேல். பன்றிப் பண்ணையை நடத்துறதோட, அவற்றைப் பராமரிக்கற வேலையையும் செய்யறாங்க நான்சி போலி. மேரிகோல்ட் சுரங்க நிறுவனத்தில் ஆபரேட்டராக இருக்கற கரோல் வார்ன், தீயணைப்பு வீர்ர் மைன்டி கேப்ரியல், ட்ரக் டிரைவர் லீயன் ஜான்சன், விலங்குகளையும் பறவைகளையும் பாடம் செய்யும் பெத் பீவர்லி போல இன்னும் பல பெண்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கார்” என்றார்.
“அடடா! வேலைகளில் பாலினப் பாகுபாட்டை உடைச்ச இந்தப் பெண்களுக்கு சல்யூட்” என்ற கனிஷ்கா, “செர்பிய டென்னிஸ் வீராங்கனை அனா இவனோவிச் ஓய்வை அறிவிச்சிருக்காங்க. 2008-ம் ஆண்டில் தொடர்ச்சியாக 12 மாதங்கள் டென்னிஸ் தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தாங்க. “டென்னிஸ் உலகில் நான் கனவிலும் எதிர்பார்த்திராத உயரத்தைத் தொட்டுவிட்டேன்”னு நெகிழ்ந்திருக்காங்க அனா” என்று சொன்னவள், ஒரு ஹார்ன் சத்தம் கேட்டுக் காதை மூடிக்கொண்டாள்.
“மனிதர்களால் உண்டாகும் ஒலி மாசு பறவைகளை மிகவும் பாதிச்சிருக்கு. அளவுக்கு அதிகமான வாகன இரைச்சல்களால், வானில் பறந்து செல்லும் பறவைகளால் மற்ற பறவைகளிடம் தகவல் பரிமாறிக்கொள்ள முடியலை. அதாவது முன்னே செல்லும் ஒரு பறவை ஏதாவது ஆபத்து வந்தா, தன் குரல் மூலம் பிற பறவைகளுக்கு எச்சரிக்கை செய்யும். அந்த எச்சரிக்கை ஒலி, வாகன ஒலிகளால் மற்ற பறவைகளுக்குக் கேட்காமல் போயிடுதுங்கறதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. மனிதர்கள் சூழலையும் கெடுத்து, பிற உயிரினங்களுக்கும் தொந்தரவு கொடுக்கர்றாங்க” என்று வேதனையுடன் சொன்னார் கல்பனா ஆன்ட்டி.
“கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன் குடும்பப் படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். ஷமியின் மனைவி இஸ்லாம் முறைப்படி உடையணியாமல் கவர்ச்சியாக உடையணிந்திருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் வந்தன. இன்னமும் ஒரு பெண் எப்படி ஆடை அணியணுங்கறதை சமூகம்தான் தீர்மானிக்குது” என்றார் கமலா பாட்டி.
“முகமது ஷமி கொடுத்த பதிலடியைக் கவனிக்கலையா பாட்டி? என் மனைவியும் மகளும்தான் என் வாழ்க்கை. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எந்த அளவுக்கு மனிதர்களாக இருக்கிறோம் என்பதை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அப்படின்னு நச்சுனு பதில் கொடுத்திருக்கார்” என்ற கல்பனா ஆன்ட்டியிடம் தன் போனில் இருந்த படத்தைக் காட்டினாள் கனிஷ்கா.
“இந்த மணப்பெண் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர். ‘என்னை ஒருதலையாகக் காதலித்தவர் அமிலத்தை வீசினார். அழகு நிரந்தரமற்றது, முகத்தைப் பார்த்து வருவதல்ல காதல் என்கிறார் என் கணவர்’ என்று குறிப்பு எழுதி படத்தை வெளியிட்டிருக்காங்க. உலகிலேயே இந்தியாவில்தான் அமில வீச்சு தாக்குதல் அதிகளவில் நடக்குது. அதுவும் 85 சதவிகிதம் தாக்குதல்கள் பெண்கள் மீது நடத்தப்படுது. 2015-ல் 349 அமில வீச்சு சம்பவங்கள் நடந்துருக்கு” என்ற கனிஷ்காவின் குரல் வேதனையில் கரகரத்தது.
“மதுரை சாலை விபத்தில் உயிரிழந்தார் 21 வயது திருநங்கை ஆர்த்தி. இவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை ஒருவரின் கண்கள் தானம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை. கண் தான விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதை இது காட்டுது.”
“நாம வந்து ரொம்ப நேரமாச்சு… நம்ம வீட்டு ஆண்களையும் தங்கல் பார்க்கச் சொல்லணும். பை” என்றபடி வண்டியைக் கிளம்பினார் கமலா பாட்டி.