பெண் இன்று

முகங்கள்: சிறப்புக் குழந்தைகளுக்கும் நீதி வேண்டும்

வா.ரவிக்குமார்

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் களுக்கும் பலாத்காரங்களுக்கும் ஆளாகும் குழந்தைகளின் சார்பாக வழக்குகளை நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நக்ஷத்ரா. இதன் நிறுவனர்களில் ஒருவரான ஷெரீன் போஸ்கோ இதுபோன்ற வழக்குகளை நடத்துவதில் இருக்கும் சிரமங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். சில வழக்குகளில் காட்டப் படும் மெத்தனங்களால் சராசரியான மனநிலையில் இருப்பவர்களே தாங்க முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளின் நிலை எந்தளவுக்கு பரிதாபமாக இருக்கும்?

“மற்ற வழக்குகளைப் போன்றே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் நீதிமன்றத்தில் எல்லோரும் பார்க்கும் வகையில் கேள்விகள் கேட்டு விசாரிப்பார்கள் என்பதற்கு பயந்துதான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவே தயங்குகின்றனர். இந்த நிலையைக், காவல் நிலையங்களில் முறையாக பாக்ஸோ சட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளைப் பதிவதின் மூலம்தான் மாற்ற முடியும்” என்கிறார் ஷெரீன்.

பாக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவம்

பாலியல் பலாத்காரங்கள் நடப்பதற்கும் காவல் நிலையங்களில் அது தொடர்பான வழக்குகள் பதிவாவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் பதிவாவதே இல்லை. அதிலும் சில வழக்குகளை அதற்குரிய பாக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் நிலையங்கள் பதிவு செய்வதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தனிமையில் நீதிபதி விசாரணை செய்யும் (In Camera Trial) வசதி கிடைக்கும். இந்த விஷயங்கள் எல்லாம் சாமானியர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சில காவல் நிலையங்களில் பல வழக்குகளில் பாக்ஸோ சட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதியப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை.

சட்டத்தின் பேரால் அலைக்கழிப்பு

காஞ்சனா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) பார்வைக்குக் குமரி. ஆனால் புத்தியில் அவர் நான்கு வயதுக் குழந்தை. சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சையில் இருந்த இந்தக் குழந்தை, விடுமுறைக்காக அவருடைய அத்தையின் வீட்டுக்குக் கடந்த 2015 மே மாதம் சென்றாள். அத்தை வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் ஒரு நபரால் அந்தக் குழந்தை வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறாள். அந்த நபரை, அந்தக் குழந்தையின் அத்தை கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர், அடுத்து இரண்டு மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்படும் மகிளா நீதிமன்றத்தில் நடக்கிறது. சாதாரண வழக்காகப் பதியப்பட்ட இந்த வழக்கை, பாக்ஸோ சட்டத்தின் கீழ் பதியவேண்டும் என்னும் கோரிக்கையோடு வழக்கை நடத்திவருகிறது நக்ஷத்ரா.

இதற்கான (பாதிக்கப்பட்ட பெண்ணின் மூளைத் திறன் நான்கு வயதுக்கு உரியதுதான் என்னும்) சான்றிதழை இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் கடந்த ஆண்டே வழங்கியிருக்கிறது. ஆனாலும் தற்போது அவரின் மூளைத் திறனைக் குறித்த சான்றிதழை மீண்டும் புதிதாகச் சமர்ப்பிக்க மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பல கட்ட வாதங்களுக்குப் பின், தற்போது மகிளா நீதிமன்றம், இந்தக் குழந்தைக்குச் சான்றிதழ் அளித்த மருத்துவரையே விசாரித்துக்கொள்ளலாம் என சமீபத்தில் அறிவித்துள்ளது.

மெத்தனமான விசாரணை

“சென்னையில் ஒரு பால்வாடி பள்ளியில் ஆறு வயதுக் குழந்தையை அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆயாவின் 15 வயது பேரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தன்னோடு சேர்ந்து மேலும் இரண்டு பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறான். ஆனால் அவர்களைக் காவலர்கள் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் நாங்கள் நேரடியாக அந்தப் பள்ளி இருக்கும் இடத்தைத் தொடர்ந்து கண்காணித்ததில், 15 வயதில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து நடமாடுவதைக் கண்டுபிடித்தோம். இந்தத் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் போலீஸார் இரண்டு சிறுவர்களைக் கைது செய்தார்கள்” என்றனர் நக்ஷத்ரா தொண்டு நிறுவனத்தினர்.

பாக்ஸோ சட்டத்தின் கீழ் பணியின் போது கடமை தவறிய பால்வாடி பள்ளியின் ஆசிரியை, ஆயா குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் ஆகியோர் மீது வழக்கு பதியும்படி இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

“நீதி மன்றங்களில் விசாரணைகளைத் துரிதமாக நடத்தி இதுபோன்ற வழக்குகளில் சீக்கிரமாக நீதியை வழங்க வேண்டும். ஏனென்றால் தாமதிக்கும் நீதி, குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்கே உதவும்” என்கிறார் ஷெரீன்.

- ஷெரீன்

SCROLL FOR NEXT