பெண் இன்று

என் பாதையில்: கூட்டத்தில் மறைந்த தோழி

செய்திப்பிரிவு

நான் ஒரு பள்ளி ஆசிரியை. மாணவச் செல்வங்கள் செய்யும் சிறு சிறு சேட்டைகளைப் பார்க்கும்போது மனம் என் கடந்த காலப் பள்ளி வாழ்க்கையை அசைபோடுவது வழக்கம். அப்படிச் சமீபத்தில் என் மனம் அசைபோட்ட கடந்த கால அனுபவத்தில் இருந்து ஒரு சிறு துளியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி தமிழ்ப் பேரவை மன்ற விழாவன்று என்னை அவசரமாகத் தேடினாள் என் தோழி. பேச்சுப் போட்டிக்கு ஒரு முன்னுரை வேண்டும் என என்னிடம் கேட்டு நின்றாள். நானும் தலைவர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் என அனைவருக்கும் அடைமொழி வணக்கத்துக்கான குறிப்புகளைச் சொன்னேன். ‘நக்கீரன் பரம்பரையில் வந்த நடுவர் பெருமக்களே’ எனச் சொல்லி உரையை ஆரம்பிக்கும்படியும் சொன்னேன்.

பேச்சுப் போட்டி ஆரம்பமானது. மாணவக் கண்மணிகள் அனைவரும் பேச்சு மழையை ரசிக்கப் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தோம். என் தோழியின் முறை வந்தது. அனைவருக்கும் வணக்கம் எனச் சொன்னவள், நடுவர்களை அழைக்கும் போது நக்கீரன் பரம்பரை என்பதற்கு பதில் நக்கீகள் பரம்பரையில் வந்த நடுவர் பெருமக்களே என்று சொல்லிவிட்டாள். அவளின் இந்தப் பேச்சைக் கேட்டதும் எங்களுக்குத் திக்கென்று ஆனது. பள்ளிக்கூடம் மொத்தமும் கொல் என்ற சிரிப்பொலியால் நிறைந்தது. சிரிப்பொலி நிற்கக் கொஞ்ச நேரம் ஆனது. அதற்குள் தன் தவறை உணர்ந்த என் தோழி கூட்டத்தில் ஓடி மறைந்தாள். அந்தச் சம்பவம் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக ஒலியெழுப்பி வசந்த கால கீதம் பாடும் அந்த நாளை நினைவுபடுத்தும். இப்போதும் காதுக்குள் கேட்கிறது அந்த நாளின் சிரிப்பொலி!

- ஐடா ஜோவல், கன்னியாகுமரி.

SCROLL FOR NEXT