மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நோய் கண்டறியும் ஆய்வகம் சமீபத்தில் இந்தியா முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 பெண்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் இரண்டு பெண்களில் ஒருவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்துள்ளது. இரும்புச் சத்து குறைபாடு மட்டுமின்றி தாலசீமியா போன்றவையும் பெண்களிடம் காணப்படுவது தெரியவந்துள்ளது. உலக அளவில் ரத்தசோகை அதிகம் உள்ள பெண்கள் இருக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. பஞ்சாப் மாநில அரசும் டெல்லி மாநில அரசும் பெண்களுக்கும் பள்ளி மாணவிகளுக்கும் இரும்புச் சத்து மாத்திரைகளைக் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
ரத்தசோகையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கொடுக்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளை 17 சதவீதம் பெண்களே பயன்படுத்துவதாக சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இரும்புச் சத்து மாத்திரைகளைக் கொடுப்பதைவிடப் போதிய சத்துகள் கொண்ட சமச்சீர் உணவூட்டத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் உறுதிசெய்ய வேண்டும் என்று மகளிர் நல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிப் போராட்டத்துக்கு வெற்றி
2002-ல் குஜராத் கலவரங்களில் இந்து மதவெறிக் கும்பலால் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு தன் கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை இழந்த பில்கிஸ் பானுவின் வழக்கு 15 ஆண்டுகள் நீதிப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீது பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை குற்றங்களுக்காகவும் ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் மே 4-ம் தேதி உறுதிப்படுத்தியது. சாட்சியங்களை அழிக்க முயன்றதாக இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஐந்து போலீசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பில்கிஸ் பானுவும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் கலவரக் கும்பலிடமிருந்து ஒரு டிரக் வண்டியில் தப்பிக்க முயன்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது.
ஓர் ஆயுதக் கும்பலால் தடுக்கப்பட்டு பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் கண்ணெதிரிலேயே அவரது இரண்டு வயது மகள் கொல்லப்பட்டார். அத்துடன் 13 குடும்ப உறுப்பினர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானுவுக்கு அப்போது 19 வயது. காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தொடங்கி இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் குஜராத் அரசு சார்ந்து பல தடைகளைச் சந்தித்த பில்கிஸ் பானுவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
சேலை அணிந்த ஃப்ரீடா காலோ
மெக்சிகோவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரீடோ காலோ சேலை அணிந்திருக்கும் அபூர்வப் புகைப்படம் அவர் மறைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. ஓவியராக மட்டுமின்றி அவரது வாழ்க்கை முறையும் அவர் தன்னையே ஊடகமாக வைத்து செய்த ஆடை வடிவமைப்புகளும் இன்று அவரை ஃபேஷன் உலகிலும் பிரபலமாக வைத்துள்ளது. உடைகள், வாசனை திரவியங்கள், நகப்பூச்சுகள், குளிர்கண்ணாடிகள், பூக்கிரீடங்கள், உதட்டுச் சாயங்கள்வரை ஃப்ரீடா காலோவின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. இரண்டு பெண்களுடன் சேலையணிந்து நடுவில் காணப்படுபவர் ஃப்ரீடா காலோ.