பெண் இன்று

பக்கத்து வீடு: 117 வயது எலிசபெத்!

அன்பு

பாட்டி எலிசபெத்தின் 117வது பிறந்தநாளைக் கொண்டாடிய உற்சாகத்தில் இருக்கிறார் கொள்ளுப் பேத்தி பிரிசில்லா! லண்டனில் பிபிசி செய்தியாளராகப் பணியாற்றும் பிரிசில்லாவின் ரோல் மாடல் பாட்டி எலிசபெத்தான்.

“நான் பள்ளியில் படிக்கும்போது என் பாட்டிக்கு 103 வயது என்று சொன்னால் சக மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். 14 வருடங்களுக்குப் பிறகு பிபிசியில் செய்தியாளராகச் சேர்ந்தேன். புதிய விஷயங்களைச் செய்தியாக உருவாக்குவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் என் பாட்டியைப் பற்றிக் கூறினேன். உடனே எல்லோருக்கும் ஆர்வமாகிவிட்டது. பாட்டியை வைத்து ஆவணப்படம் எடுக்கச் சொன்னார்கள். எனக்கு மட்டுமின்றி என் பாட்டிக்கும் இது உற்சாகத்தையும் பெருமிதத்தையும் தந்தது” என்கிறார் பிரிசில்லா.

எலிசபெத் கதோனி கோயிநாங்கே (Elizabeth Gathoni Koinange) உலகத்தில் நடந்த மிக மோசமான இரண்டு உலகப் போர்களுக்கிடையே வாழ்ந்திருக்கிறார். கென்யா அடிமைப்பட்டிருந்ததையும் சுதந்திரம் அடைந்ததையும் தன் கண்களால் பார்த்திருக்கிறார். கென்யா நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய கோயிநாங்காவின் ஐந்தாவது மனைவி என்பதால் நாடு முழுவதும் அறியப்பட்ட பிரமுகராக இருக்கிறார் எலிசபெத்.

“என் பாட்டியின் வாழ்க்கை முறையை என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமானவளாக உணர்கிறோன். இருபத்தி மூன்று வயதில் எனக்குக் கிடைத்த படிப்பும் வாய்ப்பும் என் பாட்டியின் இளமைக் காலத்தில் கிடைக்கவில்லை. அவர் இருபத்தி மூன்று வயதில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருடைய பலமே அவர் தன் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும்தான். நீ விரும்பும் விஷயங்களை அடைய அதிலேயே கவனமாக இரு என்று எப்போதும் சொல்வார். எல்லோர் மீதும் அன்பு செலுத்தவும் தவறு செய்பவர்களை மன்னித்துவிடவும் அறிவுறுத்துவார். இந்தக் காரணங்களால்தான் அவர் என்னுடைய ரோல் மாடலாக இருக்கிறார்” என்கிறார் பிரிசில்லா.

எலிசபெத் பாட்டியிடம் வரலாற்றுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவையெல்லாம் கென்ய சுதந்திரத்துக்கு நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றியவை. உலகில் வெவ்வேறு கலாச்சாரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிடம் தன் பாட்டியின் ஆவணப்படத்தைக் கொண்டு செல்வதில் உற்சாகமாக இருக்கிறார் பிரிசில்லா.

SCROLL FOR NEXT