இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்பட்ட மண் சட்டி, கல் சட்டி, பத்தமடைப் பாய், பனையோலை குடை, முறம் போன்றவற்றுக்கு மாற்றாகத் தற்போது நவீன உபகரணங்கள் வந்துவிட்டன. சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைப்பதே இன்று அரிதாகிவிட்டது.
சென்னை கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் கமலா விற்பனை அங்காடியில், ‘மறுமலர்ச்சி’என்ற தலைப்பில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் நவீன காலத்துக்கு ஏற்ப மறு அறிமுகம் செய்துள்ளனர். அமைப்பின் தலைவர் கீதா ராம், “எங்கள் அமைப்பு மூலம் மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, வடசேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞர்களைத் தொடர்புகொண்டோம்.
பத்தமடைப் பாய், கல் சட்டி, மண் சட்டி, சுடு மண் பொம்மைகள், தஞ்சை சிக்கலநாயகன்பேட்டையில் கைகளால் வரையப்படும் சேலைகள், மதுரை சுங்குடிச் சேலைகள், தோடா பழங்குடியினரின் துணி பர்ஸ், குஷன் தலையணை, வடசேரி கோயில் நகைகள் ஆகியவற்றைப் பழமை மாறாமல் புதிய கோணத்தில் அறிமுகம் செய்துள்ளோம். நம் கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த இந்தப் பொருட்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவருவதன் மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள கைவினைக் கலைஞர்களுக்கு உதவ முடிகிறது. அதேசமயம் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் முடிகிறது” என்றார்.