தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதக்கத்தை உதறியதன் மூலம் பாரபட்சமாக நடந்துகொள்ளும் நடுவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கும் சாட்டையடி கொடுத்திருக்கிறார் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி.
நடுவரின் பாரபட்சமான தீர்ப்பை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் அழுது அழுது தூக்கத்தைத் தொலைத்த அவருக்கு இந்திய அதிகாரிகளும் துணை நிற்கவில்லை. அநீதி இழைத்தவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த அவருக்கு இருந்த ஒரே வழி, பதக்கத்தை உதறுவது மட்டும்தான். பதக்கம் பெறுவதற்காக மேடையில் ஏறவே சரிதாவுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் ஏற்றினார்கள். வேறு வழியின்றி ஏறிய அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்குப் பதக்கத்தை அணிவிக்க முற்பட்டபோது அதைக் கழுத்தில் அணிய மறுத்த சரிதா, கையில் வாங்கினார். பின்னர் தன்னை அரையிறுதியில் (பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்ட போட்டி) எதிர்த்து விளையாடிய தென் கொரியாவின் ஜினா பார்க்கின் கழுத்திலேயே அணிவித்தார்.
சரிதாவின் அதிரடி முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும்கூட, அவருடைய இடத்தில் இருந்து பார்த்தால் அவர் எடுத்த முடிவு மிகமிக நியாயமானதுதான். அவர் தனது குழந்தைகளைக்கூடப் பார்க்காமல் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் அவருடைய தங்கப் பதக்கக் கனவு ஒரு தனிநபரால் (நடுவர்) அழிக்கப்பட்டது அவருக்கு எவ்வளவு பெரிய வலியைத் தந்திருக்கும்?
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பெரிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்கள் பாரபட்சமான தீர்ப்பு வழங்குவது ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வந்தாலும், அதைத் தடுப்பதற்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்புக்கு ஆளாகும் வீரரோ, வீராங்கனையோ அந்தத் தருணத்தில் போராடிவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். அதோடு அந்தப் பிரச்சினையும் ஓய்ந்துவிடும்.
உறுதியான எதிர்ப்பு
ஆனால் சரிதா தேவியோ பதக்கத்தை உதறியதன் மூலம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். ஏதோ ஒரு பதக்கம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிற வீரர்களுக்கு மத்தியில் வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்திருக்கும் சரிதா தேவியின் துணிச்சலான முடிவுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். கடந்த ஒலிம்பிக்கில்கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போது அதை எதிர்த்துப் போராட யாருக்கும் துணிவில்லை. ஆனால் இப்போது சரிதா தனது அதிரடி நடவடிக்கையால் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமல்ல, சக வீரர், வீராங்கனைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
இனிவரும் போட்டிகளில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்படுவதற்கு அஞ்சுவார்கள். ஒருவேளை அப்படிச் செயல்பட்டால் சம்பந்தபட்ட வீரர்கள் போராடத் தயங்க மாட்டார்கள் என நம்பலாம். மொத்தத்தில் சரிதாவின் முடிவு அதிரடியானதாக இருந்தாலும், தவறிழைத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சாட்டையடியாகவே பார்க்கப்படுகிறது!