சென்னை வியாசர்பாடியில் உள்ள குடிசைவாழ் பகுதி குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுப்பதற்காக 2012-லிருந்து ‘அபிநயா நிருத்தியாலயா’ என்னும் நடனப் பள்ளியை நடத்திவருகிறார் திருநங்கை பொன்னி அபிநயா. திருநங்கை அஞ்சலி வரதனும் இந்த நடனப் பள்ளியை நடத்துவதற்கு உதவிசெய்துவருகிறார். ஆரம்பத்தில், நான்கு குழந்தைகளுடன் தொடங்கிய இந்த நடனப் பள்ளியில் தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நடனம் கற்றுக்கொள்கின்றனர். அத்துடன், திருநங்கைகளுக்காகவும் தொடர்ந்து நடன வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
பரத நாட்டியத்தில் முதுநிலைப் படிப்பைச் சமீபத்தில் முடித்திருக்கும் பொன்னி அபிநயாவுக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே நடனத்தின்மீது ஆர்வம் இருந்திருக்கிறது. “எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சியில் வரும் நடனங்களைப் பார்த்து அப்படியே வீட்டில் ஆடிப்பார்ப்பேன். எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. என்னுடைய பள்ளிக்கு அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு நடனப் பள்ளியில் பரதம் கற்றுக்கொள்ளச் சென்றேன். ஆனால், இரண்டு, மூன்று முறை நான் சென்று கேட்டும் நடன ஆசிரியர் என்னை வகுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் அந்தப் பரத நாட்டியப் பள்ளியை நடத்தும் நிர்வாகியின் காரை நிறுத்தி எனக்குப் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னை வகுப்பில் சேர்த்துவிடுங்கள் என்றேன். அவரும் சிரித்துக்கொண்டே, கமலஹாசன் மாதிரி நடனமாட வேண்டும் என்று ஆசையா எனக் கேட்டு, என்னை வகுப்பில் சேர்த்துவிட்டார்” என்கிறார் பொன்னி அபிநயா.
அதற்குப் பிறகு தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் பரத நாட்டியத்தில் மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படித்து முடித்திருக்கிறார். இதற்கிடையில், தன்னைத் திருநங்கையாக உணரத் தொடங்கியதால், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். மற்ற குடும்பங்களைப் போல இல்லாமல், பொன்னியின் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
“அதனால், நான் பெரிய மனவுளச்சல் இல்லாமல் நடனத்தில் என் கவனத்தைத் திருப்பமுடிந்தது. டிப்ளோமா படிப்பை முடித்ததும் தேனியில் இருக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இருபத்தைந்து திருநங்கைகளுக்குப் பதினைந்து நாட்களுக்கு நடனப் பயிற்சி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்தப் பயிற்சி வகுப்பில்தான் அஞ்சலியையும் சந்தித்தேன். அந்தப் பயிற்சியின்போது எனக்கும், என் கலைக்கும் கிடைத்த மரியாதை பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. என்னுடைய இந்தக் கலையால் திருநங்கைகளைச் சமூகம் பார்க்கும் பார்வையை மாற்றிவருகிறேன் என்பதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது” என்கிறார் அவர். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, திருநங்கை அஞ்சலி தொடர்ந்து பொன்னி அபிநயாவுடன் பயணித்துவருகிறார்.
“நான் பரத நாட்டிய வகுப்பில் சேர்வதற்குப் போராடியதுபோல திறமையுள்ள ஏழைக் குழந்தைகள் போராடக் கூடாது என்று நினைத்தேன். அப்படித்தான், இந்த ‘அபிநயா நிருத்தியாலயா’ உருவானது. ஆனால், தொடங்கிய உடனே எங்கள் பள்ளிக்குப் பெரிய வரவேற்பெல்லாம் கிடைக்கவில்லை. பக்கத்தில் ஒரு பெருமாள் கோயிலில் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து நடனமாடவைத்தேன்.
அதற்குப்பிறகு, எங்கள் நடனப் பள்ளிக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பினார்கள். இப்படி எங்களுடைய திறமையை நிரூபித்தால்தான் எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். பல தடைகளைத் தாண்டி, என்னுடைய நடனப் பயணத்தைத் தொடர்வதற்கு என் குரு ஷிவகலாலயம் ஷிவகுமார் முக்கியக் காரணம். குரு தட்சிணை எதுவும் வாங்காமல் எனக்கு நட்டுவாங்கம் கற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது பல்வேறு நடன வகுப்புகளை என்னை எடுக்கவைத்துத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கிவருகிறார்” என்கிறார் பொன்னி அபிநயா.
“இலவசமாக நடனக் கலையை கற்றுக்கொடுத்தால் அதைப் பெரிதாக மதிக்க மாட்டார்கள் என்பதால் ரூ.300 மட்டும் கட்டணம் நிர்ணயித்திருக்கிறோம். அதைக் கொடுக்க முடியாவிட்டாலும் பெரிதாக வலியுறுத்துவதில்லை. நடனத்தில் ஆர்வமிருக்கும் யார் வேண்டுமானாலும் எங்கள் பள்ளியைத் தொடர்பு கொள்ளலாம்” என்று சொல்கிறார் அஞ்சலி வரதன்.
தொடர்புக்கு: ponni241@gmail.com