சென்னையைச் சேர்ந்த பெண்கள் தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும்கூட பல துறைகளில் முதல் பெண்களாகவும் முன்னோடிகளாகவும் வழிகாட்டியிருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் வரலாறு முழுமை அடையாது. இவர்களில் சிலர் சென்னையில் பிறக்கவில்லை என்றாலும், இவர்கள் சாதனை புரிந்த இடம் இது என்பதால், இவர்களோடு சேர்ந்து சென்னையும் பெருமையைப் பெறுகிறது. பெண்ணினம் இன்று மேலும் பல உச்சங்களைத் தொட்டிருப்பதற்கு அச்சாரம் இட்ட, அதிகம் அறியப்படாத பத்துப் பெண்கள் இவர்கள்…
பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர்
பிரிட்டன், அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவப் படிப்பில் பெண்கள் சேர்க்கப்படாத காலத்தில், முதன்முதலில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 1875-ல் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஷார்லீபுக்குப் பிறகு மிசஸ் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் படித்த பிறகு ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை (கோஷா ஆஸ்பத்திரி) நிறுவியவர் இவரே.
முதல் பெண்கள் ஆங்கில இதழ் ஆசிரியர்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர் கமலா சத்தியநாதன் என்கிற கிருஷ்ணம்மா. மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில மகளிர் இதழை (The Indian Ladies Magazine) 1901-ம் ஆண்டில் அவர் தொடங்கியது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் சென்னை, ஆந்திர பல்கலைக்கழகங்களின் செனட் உறுப்பினராகவும் கமலா செயல்பட்டுள்ளார்.
முதல் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்
தென்னிந்தியத் திரை முன்னோடிகளில் ஒருவரான ஜெனரல் பிக்சர்ஸ் கார்பரேஷனின் நாராயணன், அதிக எண்ணிக்கையில் மௌனப் படங்களை எடுத்தவர். அவருடைய மனைவி மீனாட்சி, இந்தியாவின் முதல் பெண் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞராகக் கருதப்படுகிறார். 1930-களில் ஒலிப்பதிவுக் கலைஞராக அவர் செயல்பட்டார். ஜெனரல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் இருந்த ஜெர்மன் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவருக்குப் பயிற்சியளித்தனர். அந்தக் காலத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே ஒலிப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்பதால் சவால் நிறைந்த பணி அது.
முதல் பெண் ஆடிட்டர்
இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர், சென்னையைச் சேர்ந்த சிவபோகம். ராணி மேரி கல்லூரியில் படித்த இவர், ‘சகோதரி’ ஆர்.எஸ். சுப்புலட்சுமியால் உத்வேகம் பெற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1931-ல் சிறை சென்றார். விடுதலையாகி 1933-ல் கணக்கர் பட்டயப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம், இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் என்ற பெருமையைப் பெற்றார். சிறை சென்றவர்கள் கணக்கராகப் பதிவு செய்து கொண்டு செயல்பட முடியாது என்ற சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து, வெற்றியும் பெற்றார். 1937-ல் இருந்து முதல் பெண் கணக்கராகச் செயல்பட ஆரம்பித்தார். பல்வேறு சமூகப் பணி அமைப்புகளுக்குக் கணக்குத் தணிக்கை செய்வதைத் தன்னுடைய வாழ்க்கையாகக் கொண்டார்.
முதல் பெண் ஆட்சியர்
கேரளத்தைச் சேர்ந்த அன்னா ராஜம் மல்ஹோத்ரா, இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவர் முதலில் பணிபுரிந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, தமிழக ஐ.ஏ.எஸ். பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டார். அவருக்குத் துணை ஆட்சியர் பதவி அளிப்பதற்குப் பதிலாக, தலைமைச் செயலகத்தில் பதவியளிக்க ராஜாஜி முன்வந்தார். அதை அன்னா ராஜம் நிராகரிக்கவே, அன்றைய திருப்பத்தூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
முதல் கால்நடை மருத்துவர்
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி 1948-ல் பெண்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்பில் முதலில் சேர்ந்து 1952-ல் படிப்பை நிறைவு செய்து, இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார் கேரளத்தைச் சேர்ந்த சக்குபாய் ராமச்சந்திரன். பல்வேறு முக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய அவர், பெங்களூரு இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியாக 1971-ல் ஓய்வு பெற்றார்.
முதல் பெண் மேயர்
தாரா செரியன், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர். நாட்டுக்கே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த அவர், ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார். 1957-ல் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாகாணத்தின் முதல் வழக்கறிஞர்
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் அடங்கிய பழைய மதராஸ் மாகாண சட்டத் துறையில் முதன் முதலில் பட்டம் பெற்றவர் ஆனந்தா பாய். சென்னை பல்கலைக்கழகத்தில் 1928-ல் அவர் பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 1929-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். சென்னையில் பயிற்சி பெற்ற முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கர்நாடகத்தில் உள்ள தெற்கு கனரா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா பாய். அவருடைய அப்பா கிருஷ்ண ராவ் பெண்கள் கல்வி பெற வேண்டுமென்பதில் உறுதி கொண்டவர்.
மாகாணத்தின் முதல் முனைவர்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கடம்பி மீனாட்சி. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் முறையே இளங்கலை, முதுகலை வரலாற்றில் பட்டங்களைப் பெற்றவர். பல்லவ மன்னர்களின் நிர்வாக, சமூக வாழ்க்கை தொடர்பாக ஆராய்ச்சி செய்து, 1936-ம் ஆண்டில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பெங்களூர் மகாராணி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றிய அவர், சிறு வயதிலேயே 1940-ல் இறந்து போனார்.
மாகாணத்தின் முதல் பொறியாளர்
சென்னை மாகாணத்தின் முதல் பெண் பொறியாளர் மே ஜார்ஜ். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து 1945-ல் பொறியாளர் ஆனார். மாநில வீட்டு வசதி வாரியத்தின் முதல் தொழில்நுட்ப அலுவலராகச் செயல்பட்ட அவர், பின்னர் தலைமைப் பொறியாளராகவும் உயர்ந்தார். சி.ஐ.டி. நகர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், மணலி போன்ற சென்னையின் முக்கியப் பகுதிகளில் இவரது பதவிக் காலத்தில்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. மாநிலத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான முதல் பாலிடெக்னிக்கின் முதல் முதல்வராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சமூகப் பணியாளராகவும் பெண்ணுரிமைச் செயல்பாட்டாளராகவும் இருந்தார்.