பெண் இன்று

சீராகத் துடிக்கும் 69 இதயங்கள்!

வா.ரவிக்குமார்

இதயம் சீராக இயங்க, ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு செல்லும் நான்கு வால்வுகளும் முக்கியம். நான்கில் ஒரு வால்விலோ, இரண்டு வால்வுகளிலோ பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றனர் இப்படி உலகம் முழுவதும் இதயத்தில் பிரச்சினைகளோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு, இதயத்தில் துளை, புளூ பேபி போன்ற குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளும் உண்டு.

இப்படிப்பட்ட குழந்தைகளின் இதயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்தாலும் இதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்குப் பல மருத்துவமனைகளில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் 3லிருந்து 5 லட்சம் ரூபாய்வரை செலவிட வேண்டும்.

இப்படிப் பொருளாதார காரணங்களாலும் தகுந்த மருத்துவர்களின் முறையான ஆலோசனை இல்லாததாலும் இதயத்தில் பிரச்சினைகளோடே வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை ‘ஏகம்’ போன்ற பல தன்னார்வ அமைப்புகள் நடத்தும் மருத்துவ முகாம்களின் வழியாகக் கண்டெடுத்து அறுவை சிகிச்சைகளுக்கு உதவ, அவர்களின் பெற்றோர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பாலமாக இருந்து உதவுகின்றனர் டாக்டர் சௌமியாவும் டாக்டர் ஹரப்ரியாவும்.

சிகிச்சைக்குக் காத்திருக்கும் குழந்தைகள்

“மருந்து அட்டவணைப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் பலரைப் பல மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறோம். அவர்களின் உடல் நிலை, இதயத்தின் நிலை குறித்து சில மருத்துவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களில் சில குழந்தைகள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு உரிய முறையில் அந்த மருத்துவர்கள் பரிந்துரைக்க ஏன் தயங்குகிறார்கள் என்றே தெரியாது. இப்படிப்பட்ட குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய நினைத்தோம். இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் ஹரபிரியா, டாக்டர் சில்வியா ஆகியோருடன் இணைந்து மென்டிங் டைனி ஹார்ட்ஸ் என்னும் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கினேன்” என்றார் டாக்டர் சௌமியா.

மதுரை, வேலூர், கலசப்பாக்கம் எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட இதயம் சார்ந்த பிரச்சினை உள்ள 290 குழந்தைகளை அடையாளம் கண்டிருக்கின்றனர். இவர்களிலிருந்து கடந்த ஆண்டில் மட்டும் 48 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர்.

“நான் பணிபுரியும் ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையும் ஹரப்ரியா பணிபுரியும் மியாட் மருத்துவமனையும் எங்களின் சமூக சேவைக்குப் பெரிதும் துணையாக இருக்கின்றன. நாங்கள் பெரும்பாலும் ஒரே இடத்திலிருந்து பெரிய தொகையை எதிர்பார்ப்பதில்லை.

சமூகப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பல நிறுவனங்களிலிருந்து சிறிய தொகைகளைப் பெற்றுப் பயன்படுத்துகிறோம். இதுதவிர கலை நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அறுவை சிகிச்சைக்கான நிதியைத் திரட்டுகிறோம்” என்றார் டாக்டர் சௌமியா.

கை கொடுக்கும் ஆரோஹி

சார்ட்டட் அக்கவுண்டண்ட், வழக்கறிஞர், தொழிலதிபர், தகவல் தொழில்நுட்ப பொறியாளர், கைவினைக் கலைஞர், பெண் தொழில் முனைவோர் இப்படிப் பலரும் இசையால் இணைந்திருக்கும் குழு ஆரோஹி. புற்றுநோயால் பாதித்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பராமரிக்கும் கருணை இல்லம், மெட்ராஸ் கிட்னி டிரஸ்ட், செரோப்டிமிஸ்ட், சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஏகதக்ஷா, அருகிவரும் கலையான கட்டைக்கூத்தை பராமரிக்கும் அமைப்பு இப்படிப் பலவற்றுக்கும் தங்களின் இசை நிகழ்ச்சியால் நிதி திரட்டித் தரும் அமைப்பு, மெண்டிங் டைனி ஆர்ட்ஸுக்கும் நிதி திரட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி அவர்களுக்குக் கைகொடுக்கின்றனர்.

ஒரு கோடி நிதி

“தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள், கலை நிகழ்ச்சிகள் என மெண்டிங் டைனி ஆர்ட்ஸின் மூலமாக 1.38 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு, இதுவரை 69 (கடந்த ஆண்டில் 48, நடப்பு ஆண்டில் 21) குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடப்பதற்கு உதவியிருக்கிறோம். பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியவர்களுக்குத்தான் என்றில்லை, ஒரு காவலரின் குழந்தைக்கும் உதவி செய்திருக்கிறோம்.

மற்ற மாநிலங்களிலிருந்தும் துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்தும்கூட எங்களை அணுகி ஆலோசனை கேட்கின்றனர். பல பெரிய நிறுவனங்களில் சி.எஸ்.ஆர்.க்கு ஒதுக்கப்படும் தொகை கோடிகளில் இருக்கும். அதில் ஒரு சிறிய தொகையை அளித்தால்கூட, பல குழந்தைகளின் இதயம் சீராகத் துடிப்பதற்கு உதவியதாக இருக்கும்” என்றார் டாக்டர் சௌமியா.

SCROLL FOR NEXT