கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் அமெரிக்கப் பெண்கள் மூவருக்கு நடந்த அனுபவங்களை வெளியிட்டு, ‘பெண் என்பவள் வெறும் பிண்டம்தானா?’ என்று கேட்டிருந்தோம். கடிதம் மூலமும் மின்னஞ்சல் வழியாகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு…
மருத்துவமனைக்கு வந்திருந்த எண்பது வயது முதியவர் ஒருவர் எழுபது வயது மதிக்கத்தக்க தன் மனைவியை பொது இடம் என்றும் பார்க்காமல் தான் ஊன்றியிருந்த கோலால் அடித்துக் கீழே தள்ளினார். இத்தனை வருட இல்லற வாழ்வு அந்த முதியவருக்கு எதைக் கற்றுக்கொடுத்திருக்கும்?
இந்த வயதிலும் தன் மனைவியை இப்படிக் கீழ்த்தரமாக நடத்துகிறவருக்கு இதற்கு மேலா பெண் என்றால் என்ன என்று புரிந்துவிடப் போகிறது? வீட்டுக்குள்ளேயே இப்படி என்றால் பொது இடங்களில் நடமாடும் பெண்களை மட்டும் இந்த ஆண் சமூகம் நல்லவிதமாகவா நடத்தும்? ஆண்களாகப் பார்த்து திருந்தாதவரை பெண்கள் வெறும் பண்டப் பொருளாகத்தான் பார்க்கப்படுவார்கள்.
- ஆர். ஹேமா, வேலூர்.
நான் ஹைதராபாத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நேரம். பிரபல மார்கெட்டிங் நிறுவனத்தின் ஃபீல்டு மேனேஜருக்கான நேர்முகத் தேர்வில் கடைசியில் மிஞ்சியது நான்தான். நான் ஒரு பெண் என்ற ஒரே காரணத்துக்காக எனக்கு அந்தப் பதவியைத் தரக் கூடாது என்று வாதிட்டார் கர்நாடகா குழுவைச் சேர்ந்த தமிழர் ஒருவர். “இரண்டு குழந்தைகள், குடும்ப பாரம். இதில் இந்த வேலையை எப்படி அவரால் சிறப்பாகச் செய்ய முடியும்?” என்று அவர் அடுக்க, முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று என்னை அனுப்பிவிட்டார்கள்.
நான் வெளியேறும்போது கர்நாடகா குழுவைச் சேர்ந்த அவர், “நான் மனது வைத்தால் உனக்கு உடனே வேலை கிடைத்துவிடும்” என்று சொன்னதோடு தான் தங்கியிருந்த ஹோட்டலின் முகவரியைச் சொல்லி மாலை ஏழு மணிக்கு மேல் வந்து சந்திக்கச் சொன்னார். உடனே நான், “பரவாயில்லை சார். நாளைக்குக் காலையிலேயே முடிவைத் தெரிந்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தேன். நாங்கள் பேசுவதைக் கேட்டபடியே வந்த மும்பையைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவர், என் செயலைப் பாராட்டினார். அவருக்குத் தமிழ் தெரியும் என்று அப்போதுதான் தெரிந்தது.
மறுநாள் எனக்கு கூரியரில் வேலை நியமனக் கடிதம் வந்தது. அதன் பிறகு அந்த அதிகாரி சென்னையில் இதே போல வேறொரு பெண்ணிடம் முறைகேடாக நடக்க, வேலையிலிருந்தே தூக்கபட்டார் என்பதை அறிந்தேன். எந்த மட்டத்தில் பணி புரிந்தாலும் பெண் என்பவள் இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை சதைப் பிண்டம்தான்.
- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை.
அமெரிக்கப் பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் படித்ததும் உலகம் முழுவதுமே பெண்கள் வெறும் சதைப் பிண்டமாகத்தான் நடத்தப்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்தது. என் தோழி ஒருத்தி நன்கு படித்து, நல்ல வேலையில் இருந்தாள். அவளுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் அவளைப் பார்க்கும் பார்வையிலேயே அசடு வழியும் என்று சொல்வாள்.
ஒரு நாள் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவரிடம், “ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள். அனைத்துப் பெண்களையும் உங்கள் உடன் பிறந்த சகோதரியாக நினைக்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறாள். உடனே அவர், “ஐயோ… அப்படி நான் நினைத்தால் என் அப்பாவின் நடத்தையில் எல்லோரும் சந்தேகப்பட மாட்டார்களா?” என்று ஏதோ பெரிய ஜோக் சொன்னது போல பெரிதாகச் சிரித்தாராம். இதுபோன்ற கீழ்த்தரமான எண்ணமுடைய ஆண்கள் வாழும் சமுதாயத்தில் பெண்களை உணர்வுள்ள ஒரு உயிராகப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்று புரிந்தது.
- உஷா முத்துராமன், திருநகர்.
சமீபத்தில் நான் பயணம் செய்த பேருந்தில் நடந்த சம்பவம் இது. பேருந்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தும், வேண்டுமென்றே ஒரு இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் போய் அமர்ந்தான் ஓர் இளைஞன். உடனே அந்தப் பெண் எழுந்து, “சார் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று நினைக்கிறேன். பாவம், நீங்க நல்லா உட்காருங்க. நான் வேறு இடத்துக்குப் போகிறேன்” என்று சொல்லி வேறு இருக்கையில் அமர்ந்து விட்டாள். அந்த இளைஞன் ஏதும் வம்பு செய்யாமல் இருக்கவும், சுற்றி இருந்தவர்களின் உதவியையும் எதிர்பார்க்காமல், அந்தப் பெண் சாதுர்யமாக நடந்து கொண்டவிதம் ஆச்சரியப்படவைத்தது. பெண்களுக்கு வேகத்துடன் விவேகமும் அவசியம்.
- என்.உஷாதேவி, மதுரை.
பெண்ணுடல் சார்ந்த வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. என் தோழிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இது. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவள். இரு குழந்தைகள். ஒரு பெண், ஒரு ஆண். தன் கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்ததும் தன் குழந்தைகளுடன் தனியே வந்துவிட்டாள். வாழ்வின் அத்தனை துயரங்களுடனும் முட்டி மோதி, பிள்ளைகளை வளர்த்தாள். இருந்தாலும் அவ்வப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தாள்.
பெண் 9-ம் வகுப்பு செல்லும் நிலையில் ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை. ஊரில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் பண உதவி கேட்டாள். அவரோ பெண்ணுடன் வந்தால் பணம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். தோழியும் தன் பெண்ணுடன் சென்றாள்.
அழகும் இளமையும் நிறைந்த பெண்ணைப் பார்த்ததும் அந்தப் பிரபலத்தின் போலி முகம் கிழிந்துவிட்டது. “பெண்ணைத் தனியே கொஞ்சநேரம் அனுப்பு” எனப் பல்லைக் காட்டியிருக்கிறான். அந்தக் கயவனின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட தோழி கோபத்துடன், “சரிதான் போய்யா... உன் உதவியே வேண்டாம்” என்று பெண்ணை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
பிறகு வேறு நல்ல உள்ளங்களின் உதவியுடன் அந்தப் பெண் படித்து முடித்தாலும் இன்றும் என் தோழி இந்த அனுபவம் குறித்து என்னிடம் கண்ணீருடன் சொன்னதை மறக்க முடியவில்லை. தன் மகள் வயதுடைய சிறுமி என்றும் பாராமல் அவளை வெறும் சதைப் பிண்டமாக எண்ணி தன் இச்சைக்குப் பணியுமாறு மிரட்டிய அந்தக் கயவனைப் போன்ற போன்ற போலி பிரபலங்கள் இருக்கும்வரை இது போன்ற பாலியல் வக்கிரங்களும் தொடர்ந்ந்துகொண்டுதான் இருக்கும்.
- சுபா, சேலம்.