பெண் இன்று

காகிதத்துக்குள் ஒளிந்திருக்கும் கலை

க்ருஷ்ணி

நமக்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத இடத்தில் இருந்தும் நமக்கான பாதை உருவாகலாம் என்பதற்கு சாட்சி சிவகாசியைச் சேர்ந்த குணவதி. சின்ன சின்ன காகிதத் துண்டுகளை வைத்து வண்ண வண்ண கலைப்பொருட்களை உருவாக்கி விடுகிறார். கம்மல், நெக்லஸ், வாழ்த்து அட்டை, அலங்கார மணிகள், சாவிக்கொத்து என அனைத்தையும் காகிதங்களின் துணையுடன் செய்து முடிக்கிறார். தன் படைப்புகளைக் கண்காட்சிகளில் விற்பனைக்கும் வைக்கிறார். இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி, கல்லூரி படிக்கும் தன் மகள்தான் என்கிறார் குணவதி.

“நிறையப் பேருக்கு ஃபேமிலி டாக்டர் இருப்பாங்க. ஆனா என் பிறந்தவீட்டில் ஃபேமிலி முழுக்கவே டாக்டர்கள்தான். ஆனால் நான் பத்தாவது முடிச்சதுமே எனக்குக் கல்யாணம் நடந்தது. எனக்குப் போலியோ பாதிப்பு இருந்ததால் நல்ல வரன் வந்ததும் கல்யாணத்தை நடத்திட்டாங்க. கணவர், பிரிண்ட்டிங் அண்ட் பைண்டிங் தொழில் செய்துட்டு இருக்கார். எனக்குப் படிப்பு குறைவா இருந்தாலும், என் கணவரின் தொழிலுக்குத் துணையா இருக்கணும்னு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசறது, வெளிநாட்டில் அவர் செய்ய வேண்டிய வேலைகளை எப்படி ஒருங்கிணைப்பதுன்னு நிறைய விஷயங்கள் அவரும் சொல்லித் தந்தார். என்னோட ஆங்கில அறிவும் அதுக்குக் கைகொடுத்தது. அப்போதான் என் பெரிய பொண்ணு, காலேஜ் செமஸ்டர் விடுமுறையில் கிராஃப்ட் கத்துக்கணும்னு சொன்னா” என்று சொல்லும் குணவதி, தன் மகளின் விருப்பத்துக்குத் துணை நின்றிருக்கிறார்.

“காகிதத் துண்டுகளை வைத்து கலைப்பொருட்கள் செய்கிற ‘க்வில்லிங்’கைக் கத்துக்க அவ ஆசைப்பட்டா. அதனால அவ ஃப்ரெண்ட் வீட்டுக்கு அவளுக்குத் துணையா நானும் போனேன். அங்கே அந்தக் கலையைப் பார்த்ததும் எனக்கும் கத்துக்கணும்னு ஆசையா இருந்தது. உடனே அதை செயல்படுத்திட்டேன். அவங்க சொல்லித் தந்த அடிப்படையை மட்டும் வச்சுக்கிட்டு, அதனுடன் என் கற்பனையையும் சேர்த்து நானே புதுசு புதுசா நிறைய டிசைன்கள் செய்தேன். என் படைப்புகளை விற்பனை செய்ய முடிவுசெய்தேன். மத்திய அரசு நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் என் படைப்புகளும் இடம்பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி வாங்கினேன். மதுரையில் நடந்த கண்காட்சியில் என் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது தந்த உற்சாகம் என்னை நிறைய டிசைன்கள் செய்யத்

துண்டியது. இப்போ கோயம்புத்தூர்ல நடக்கப்போற கண்காட்சிக்காக முழுமூச்சா நிறைய மாடல்களை செய்துட்டு இருக்கேன்” என்கிறார்.

கணவரும் மகள்களும்தான் தன் படைப்புகளின் முதல் விமர்சகர்கள் என்கிறார் குணவதி.

“அவங்களோட ஒத்துழைப்பும் ஆலோசனையும்தான் என்னை உற்சாகப்படுத்துது. ஃபேஷன் நகைகளையும் செய்யத் தொடங்கியிருக்கேன். அதிலும் ஏதாவது புதுமை செய்யணும்” என்று சொல்லும் குணவதி, சாதிக்க வயதும் மாற்றுத்திறனும் தடையில்லை என்பதை நிரூபிக்கிறார்.

SCROLL FOR NEXT