# வெண் பொங்கல் மீந்துவிட்டால் கவலை வேண்டாம். அதனுடன் மிளகுத் தூள், உப்பு, சீரகம் போட்டுக் குழைய வேகவைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் நறுக்கிய கறிவேப்பிலை போட்டு நன்கு கலந்து கோலி உருண்டை அளவுக்கு உருட்டி வெயிலில் நன்றாகக் காயவைத்தால் சுவையான வடகம் தயார். எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும்.
# சில சமயம் நாம் கடையில் வாங்கும் பருப்பு மற்றும் பயறு வகை எவ்வளவு நேரமானாலும் வேகாது. அதே போல் கோழிக்கறி, ஆட்டுக்கறியும் சில சமயம் வேகாது. தேங்காய் ஓட்டைச் சிறு துண்டாக உடைத்து, மூன்று அல்லது நான்கு துண்டுகளை இவற்றுடன் சேர்த்து வேகவைத்தால் கறி, பயறு, பருப்பு போன்றவை பதமாக வெந்துவிடும்.
# டால்டாவுடன் இரண்டு சிட்டிகை சோடா உப்பைக் கலந்து நன்றாக நுரை வரும் அளவுக்குக் கலந்துகொள்ளுங்கள். எந்தப் பலகாரம் செய்வதாக இருந்தாலும் இதை மாவுடன் நன்கு கலந்து, பிறகு தண்ணீர் விட்டுப் பிசைந்து செய்தால் பலகாரம் மொறுமொறுப்பாக இருக்கும்.
# போண்டா செய்யும்போது மாவில் டால்டா, சோடா உப்பு கலந்த பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பிறகு இஞ்சி-கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அதன் பிறகு மாவில் உப்பு கலந்த நீர்விட்டுப் பிசைந்து போண்டா செய்தால் சுவையும் மணமும் ஊரையே கூட்டும்.
# இஞ்சியைத் தோல் சீவி, வட்டமாக அரிந்து வேகவையுங்கள். அவற்றைத் தேனில் ஊறப்போட்டால் அஜீரணம், வாயுத் தொல்லை போன்றவற்றால் அவதிப்படும்போது சாப்பிட்டால் பிரச்சினை அகலும்.
# பாகற்காயில் சிலர் விதையை எடுத்துவிடுவார்கள். விதையுடன் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சி தொல்லை வராமல் இருக்கும்.
# பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை வெறும் வாணலியில் சிறிது உப்புத் தூள் போட்டு நன்றாக வதக்கினால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு போய்விடும். பிறகு வழக்கம்போலத் தாளித்துப் பொரியல் செய்யலாம்.
# சாம்பார் செய்யும்போது முதலிலேயே சிறிது வெந்தயம் போட்டுத் தாளித்து சாம்பாரைக் கொதிக்கவிட்டால் சாம்பார் வாசனையாக இருக்கும்.
- பி. ருக்மணி, சேலம்.