திருமணத்துக்காகப் பல பெண்கள் வேலையை விட்டுவிட்டது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இப்படிப் பலரது கனவுகள் புதைக்கப்பட்டிருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்.
சிவகாசி அருகே உள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் பிரியதர்ஷினி. நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த இவர் எலக்ட்ரானிக் - கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் டிப்ளமா முடித்துள்ளார். சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று கனவுடன் இருந்த இவர், சில காரணங்களால் பணியாற்றிய வேலையைத் துறக்க வேண்டியிருந்தது. 2012-ல்
பேராப்பட்டியைச் சேர்ந்த சங்கரை மணந்தார். பின்னர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். இவருடைய கணவர் குடும்பத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தது, தானும் ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனதில் தூண்டியது.
நெருக்கடி இல்லாத வேலை
தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பேராப்பட்டியில் பிரியதர்ஷினி வசித்துவருகிறார். மிகச் சிறிய ஊரான அங்கு ஒரேயொரு தொடக்கப்பள்ளிதான் உள்ளது. அதனால் மாணவர்கள் சிவகாசிக்குச் சென்று நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பது வழக்கம். பள்ளி மாணவர்கள் பாடம் தொடர்பாக இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை அதிகரித்திருக்கிறது. ஆனால் நகல் எடுப்பதற்குக்கூட பேராப்பட்டியில் இருந்து பக்கத்து நகரத்துக்குப் போக வேண்டிய நிலை. அதனால் தங்கள் ஊரிலேயே ஒரு நகலகத்தையும் பிரவுசிங் மையத்தையும் தொடங்க முடிவெடுத்தார்.
“என் குழந்தைகள் ரெண்டு பேரும் ஓரளவு வளர்ந்ததும் சுயதொழில் செய்யணும்ங்கற ஆசை அதிகமாச்சு. பிரவுசிங், நகல் எடுக்கும் வசதி கொண்ட இந்தக் கடையைத் திறந்தேன். நெருக்கடி அதிகமில்லாத வேலைங்கறதால குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்க நேரம் கிடைக்குது” என்கிறார் பிரியதர்ஷினி.
இரட்டை லாபம்
இவர் நடத்துகிற பிரவுசிங் செண்டர் மூலம் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் என சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வேலைகளை எளிதாக முடித்துக்கொள்கிறார்கள். மாலையில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். மாணவர்களின் புராஜெக்ட்களுக்கு உதவுதல், ஊர் மக்களுக்காக ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, விண்ணப்பங்களை நிரப்புவது போன்ற வேலைகளையும் பிரியதர்ஷினி செய்து தருகிறார்.
தன் அனைத்து முயற்சிக்கும் தன் கணவர் சங்கர் உறுதுணையாக இருப்பதாகச் சொல்கிறார் பிரியதர்ஷினி. இப்படி அந்தந்த ஊரின் தேவைக்கு ஏற்பப் பெண்கள் சுயதொழில் தொடங்குவது சுய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாமல், கிராமத்துக்கும் உதவும் வகையில் இரட்டை லாபமாக அமையும்.
- பாரதி. வி