சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செந்தமிழ் பெண்ணே’ நிகழ்ச்சி தொகுப்பாளினி நிவேதிதா, நடிப்பைவிட சினிமா இயக்கத்தில்தான் அதிகம் ஆர்வம் இருக்கிறது என்கிறார்.
“சின்னத்திரை தொகுப்பாளினியாக பொறுப்பேற்று அஞ்சு வருஷம் ஆயிடுச்சு. அதிலும் இப்போ ஒளிபரப்பாகிவரும் ‘செந்தமிழ் பெண்ணே’ நிகழ்ச்சிக்குள்ளே நான் வந்து ஒரு வருஷம் ஓடிப்போச்சு. அந்த மகிழ்ச்சியை நானும் என்னோடு சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிவரும் சங்கீதாவும் ஒரு பெரிய திருவிழாவா கொண்டாடித் தீர்த்தோம். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அடுத்து நடிப்புதானேன்னு ஃபிரெண்ட்ஸ் கேட்குறாங்க. சுட்டுப்போட்டாலும் எனக்கு நடிப்பு வராது. ஆனால், சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்துவேன். தமிழ், இந்தி, கொரியன் படங்களை எக்கச்சக்கமா பார்ப்பேன். அந்த ஆர்வமே இப்போ டைரக்ஷன்ல கொண்டுவந்து விட்டிருக்கு!’’ என்கிறார் நிவேதிதா.
செல்லப் பிராணிகளின் பிரியை
சன் தொலைக்காட்சியில் ‘மரகத வீணை’ தொடரில் நடித்துவரும் திவ்யா, ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பில் இலங்கை சக்தி சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘யாழினி’ தொடரிலும் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்துவருகிறார்.
“சின்னத்திரைக்குள்ள வந்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஓடிப்போச்சு. பாசம், கோபம், காமெடி இப்படி எந்தக் கதாபாத்திரத்துல நான் நடிச்சாலும் பார்வையாளர்கள் காட்டுற அன்பு பிரமிக்க வைக்குது. அதனாலேயே சினிமா மேல பெருசா ஆர்வம் இல்லை. சீரியல் நடிப்பைத் தவிர செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். இப்பவும் வீட்ல மூணு நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். அதோடு எங்க ஏரியாவுல இருக்கற 15 நாய்க்குட்டிகளுக்கும் தினமும் எங்க வீட்லதான் சாப்பாடு!’’ என்கிறார் திவ்யா.