பெண் இன்று

சேனல் சிப்ஸ்: பயங்கரமாகக் கலாய்ப்போம்!

மகராசன் மோகன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘கிச்சன் கேபினெட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நிவேதா, “என்னைத் தெரியாத அரசியல்வாதிகளே இல்லை! தினசரி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை ஜாலியாகத் தொகுத்து வழங்குவதுதான் என் வேலை. ‘படம் எப்படி இருக்கு!’, ‘ஏதோ தோணுச்சு!’, ‘இடிதாங்கி’ என்று வெவ்வேறு விதமான களத்தில் இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம். குறிப்பாக அரசியல் நிகழ்வுகளைப் பார்வையாளர்களிடம் ஜாலியாகக் கொண்டுசேர்ப்பதுதான் இதோட ஹைலைட். விஜயகாந்த் சார் எங்க நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, ‘பயங்கரமா கலாய்க்கிறாங்க!’ என்றார். அதேமாதிரி தமிழகத்தில் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எங்க நிகழ்ச்சி பற்றித் தெரியும். மீடியாவுக்குள்ள வருகிற வரைக்கும் நான் அதிகம் பேசினதே இல்லை. இந்த நிகழ்ச்சிக்குள்ள வந்த பிறகு எல்லாரும் ஆச்சரியப்படறாங்க. அந்த அளவுக்கு என்னை மாத்தின ஷோ இது!’’ என்கிறார் நிவேதா.

மலையாளத்தில் ரீ என்ட்ரி

சன் தொலைக்காட்சி ‘பாசமலர்’ தொடரில் நடித்துவரும் சந்திரா, மலையாளத் தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார். ‘‘பாசமலர் தொடர் எனக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்துக்கிட்டிருக்கு. 1000 அத்தியாயங்களை நெருங்கப்போறோம். மலையாளத் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு நிறைய வருது. ஏழு வருஷத்துக்கு முன்னால சூர்யா டிவியில் ‘மழையறியாதே’ என்ற தொடரில் நடித்ததோடு, தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது மீண்டும் கதைகள் வந்திருக்கு. ரீ என்ட்ரி ஆகும்போது ரொம்பக் கவனமாகக் கதையைத் தேர்வு செய்யணும். அதுக்காகத்தான் காத்திருக்கேன்!’’ என்கிறார் சந்திரா.

எழுத்து, இயக்கம் சுபத்ரா

ஜெயா தொலைக்காட்சியில் ‘கைராசிக் குடும்பம்’ தொடரில் அண்ணியாகப் பாராட்டை அள்ளிவரும் சுபத்ரா, விரைவில் ஒரு தொடருக்குக் கதை எழுதப் போகிறார். ‘‘உங்களோட ஃபேஷன் நடிப்பா, எழுத்தா என்று கேட்டால், முதலில் எழுத்துன்னுதான் சொல்வேன். விபத்து மாதிரி எதிர்பாராமல் நடிப்புக்கு வந்தேன். இப்பொழுது எழுத்து, இயக்கம் என்று சின்னத்திரையில் வேறொரு துறைக்குள் நுழைவதற்காக முழு ஈடுபாட்டோடு வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். விரைவில் எந்த சேனல், என்ன தொடர் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன்!’’ என்கிறார் சுபத்ரா.

SCROLL FOR NEXT