எனக்கு 19 வயது. எடை நாற்பது கிலோ. நன்றாகச் சாப்பிட்டும் எடை அதிகரிக்கவில்லை. என்னைக் கேலி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
- பெயர் சொல்ல விரும்பாத வாசகி, திருவாரூர்.
ரகுநந்தன், மருத்துவத் துறை பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி.
பொதுவாக ஒருவரின் உடல் எடை அவருடைய உயரத்தின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. உங்களின் உயரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொருத்துதான் உடல் எடை எவ்வளவு இருந்தால் நல்லது என்று கூறமுடியும். அதேபோல் நிறைய உணவு எடுத்துக் கொண்ட பிறகும் உடல் எடை அதிகரிக்காமல் உள்ளது என்று கூறி இருக்கிறீர்கள். ஒரு சிலருக்கு தைராய்டு, சர்க்கரை நோய், நாள்பட்ட தொற்று போன்று ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கூட நிறைய உணவு எடுத்துக் கொண்ட பிறகும் உடல் எடை அதிகரிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பிரச்சினைகள் ஏதாவது உள்ளதா என்பதை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
எனக்கு 22 வயது. உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. இடது கையில் ரத்த ஓட்டம் இல்லாதது போன்ற ஓர் உணர்வு. இதன் காரணமாக எந்தப் பொருளையும் என்னால் தூக்க முடியவில்லை. சிலசமயம் தோள்பட்டை வரை வலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியும் உள்ளது. ஆலோசனை வழங்குங்கள்.
- சுப்ரதா, மதுரை.
சரியான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் சிலருக்கு உடலின் ஏதாவது ஒரு பகுதியில் இது போன்ற உணர்வு ஏற்படலாம். ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் கை, கால் பகுதிகளில் உள்ள மூட்டு, தசை, நரம்பு போன்ற இடங்களில் வலி உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க Doppler scan செய்து பார்க்க வேண்டும். ரத்த நாளங்கள் சுருங்கி, விரிவடையும் போது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. 15 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. இதனை வாஸ்குலர் தலைவலி என மருத்துவத்தில் அழைக்கிறோம். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்தால்தான் அவருக்கு என்ன பிரச்சினை என்பதை முழுமையாகக் கூற முடியும். இதுபோன்ற பிரச்சினை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படும்.
49 வயது. எனக்கு ஆண்களைப் போல் தலையில் வழுக்கை விழத் தொடங்கியுள்ளது. முதலில் வலது பக்கம் முடி கொட்ட ஆரம்பித்தது, பின்னர் இடது பக்கம் இருக்கும் முடிகளும் கொட்ட ஆரம்பித்துவிட்டன. இதற்காகச் சிகிச்சைக்குச் சென்றபோது ஹார்மோன் பிரச்சினை என்றார்கள். எனக்குத் தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சரோஜா.
தன்யா, டிரைகாலஜிஸ்ட்
தலையில் வழுக்கை விழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக உணவுப் பழக்கம், ஹார்மோன் பிரச்சினை, மரபுவழி பிரச்சினை, காற்று மாசு போன்ற காரணங்களாலும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உச்சந்தலையில் பி.எச் எனப்படும் அடைப்புகள் ஏற்படும். இந்த அடைப்புகள் காரணமாகத் தலையில் புதிய முடிகள் வளர்வது தடுக்கப்படும். தலையில் வழுக்கை விழுவது என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்காகச் சம்பந்தப்பட்டவரைப் பரிசோதனை செய்த பிறகுதான் அவர்களுக்கான சிகிச்சையளிக்க முடியும்.
உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in |