பெண் இன்று

வானவில் பெண்கள்: ஷெவாலியே விருதுக்கு ஒரு படி மேலே!

செய்திப்பிரிவு

“நடிகர் கமலுக்கு ஷெவாலியே விருது கிடைத்த பிறகு மீண்டும் என்னைப் பலரும் நினைத்துப் பார்க்கிறார்கள்” என்று புன்னகைக்கிறார் பேராசிரியர் மதனகல்யாணி. புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியரான இவர் ஷெவாலியே விருது மட்டுமல்ல, அதைவிட உயரிய விருதான ஒஃபீஸியே (Officier) விருதும் பெற்றிருக்கிறார். இந்தியாவில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் இவர்தான்!

“இந்த மாதிரி விருது எல்லாம் எனக்குக் கிடைக்கும்னு எதிர்பார்த்ததில்லை. கமல் கலைத்துறையில் விருது பெறவுள்ளார். நான் பெற்றது இலக்கியத் துறையில்” என்கிறார் 78 வயதாகும் மதனகல்யாணி.

புதுச்சேரியில் பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். மூப்பின் காரணமாகப் பழைய தகவல்களை இவரால் தொடர்ச்சியாக நினைவுகூர முடியவில்லை. “என் நினைவில் நிற்கிற விஷயங்களை மட்டும் சொல்கிறேன்” என்றபடி பேசுகிறார் மதனகல்யாணி.

“அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே பெரிய விஷயம். ஆனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. என் தந்தையின் ஊக்கத்தால்தான் என்னால் படிக்க முடிந்தது” என்று சொல்லும் மதனகல்யாணிக்குத் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளும் அத்துப்படி. அதனால் பிரெஞ்சு கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மொழிபெயர்ப்புப் பயணம்

“பிரெஞ்சு மாணவர்கள், நம் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றி நிறைய கேட்பார்கள். பல மாணவர்கள் தமிழை ஆர்வத்துடன் படித்திருக்கிறார்கள். மொழிக்கும் இலக்கியத்துக்கும் என் விருப்பப் பட்டியலில் எப்போதும் முதலிடம் உண்டு. தமிழுடன் பிரெஞ்சு இலக்கியமும் பிடிக்கும்” என்று சொல்லும் மதனகல்யாணி நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் ஆல்பெர் காம்யு எழுதிய ‘லா பெஸ்த்’ நாவலை ‘கொள்ளை நோய்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரெஞ்சு நாவலாசிரியர் பல்சாக் படைப்பான ‘லு பெர் கொர்யோ’ என்ற நாவலை ‘தந்தை கொரியோ’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

“சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கும் அந்த நூல், பிரான்ஸ் நாட்டை நம் கண் முன் நிறுத்தும்” என்று சொல்லும் மதனகல்யாணி, எழுத்தாளர் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார். புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் 200 பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்ச் ஆகிய இருமொழிகளிலும் வெளியிட்டிருக்கிறார். இவரது ‘புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை பிரான்ஸின் புகழ்வாய்ந்த பதிப்பகமான கர்த்தாலா வெளியிட்டது.

“பிரெஞ்சு அறிந்த சிறுவர்களுக்காக சிலப்பதிகார நூலின் சுருக்கத்தைப் படங்களுடன் வெளியிட்டோம்.

கோதலூப், மொரீசியஸ், ரீயூனியன் தீவுகளில் பிரெஞ்சு பேசும் தமிழ்மொழி அறியாத தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மாரியம்மன் தாலாட்டு, மதுரைவீரன் அலங்காரச் சிந்து முதலியவற்றை இசையோடு ஆனால் பொருள் தெரியாமல் பாடினார்கள். அவர்களுக்காக பிரெஞ்சு மொழியில் இரண்டு நூல்களை எழுதினேன். பிரெஞ்சு கவிதைகளைத் தமிழில் ‘தூறல்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன்” என்று பட்டியலிடுகிறார் பேராசிரியர் மதனகல்யாணி. இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 2009-ல் புதுச்சேரி அரசு கலைமாமணி விருது வழங்கி இவரை கவுரவித்தது. 2002-ல் ஷெவாலியே விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒஃபிஸியே விருது 2011-ல் கிடைத்தது.

“முன்பு பிரான்ஸ் அரசு இந்த விருதுகளை போரில் பங்கேற்றோருக்குதான் தந்தது. ஷெவாலியே என்பது குதிரை வீரன் விருது. அதற்கும் மேல் நிலை ஒஃபிஸியே விருது. இதற்கு மேல் கமாண்டர் என்ற பொருள்படும் கொமாந்தான் விருதும் உள்ளது” என்று விருதுக்கு விளக்கம் தருகிறார் மதனகல்யாணி.

“ஒருவர் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கலாம். அவர்களுடைய விருப்பம்தான் முக்கியம்” என்று சொல்லும் மதனகல்யாணியின் மொழி மீதான விருப்பம்தான் அவரை விருதுக்கு உரியவராக உயர்த்தியிருக்கிறது.

படங்கள்: எம். சாம்ராஜ்

SCROLL FOR NEXT