எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தால் அவை அழகான பொருட்களாக மாறும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் பபிபென் ராபேரி (pabiben rabari) . இவர் குஜராத் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் செய்யும் பைகளும் பணப்பைகளும் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
கட்ச் மாவட்டத்தில் உள்ள கக்கட்சர் கிராமத்தில் பிறந்தவர் பபிபென் ராபேரி. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாததால், தன் அம்மாவுடன் சேர்ந்து ஆடைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யக் கற்றுக்கொண்டார். தெபரியா என்ற பெண்கள் சுயதொழில் குழுவில் சேர்ந்த பபிபென், விரைவிலேயே குழுவின் கைதேர்ந்த கைவினைக் கலைஞர் என்று பெயர்பெற்றார்.
அந்தக் குழுவினர் ஒரே மாதிரியான டிசைன்களில் ஆடைகளை வடிவமைத்துவந்தனர். இதனால் விற்பனை பாதிக்கப்பட்டது. இயந்திரங்கள் மூலம் ஆயத்த ஆடைகளில் எம்ப்ராய்டரி செய்து பார்க்கலாம் என்ற யோசனை பபிபெனுக்குத் தோன்றியது. உடனே அதைச் செயல்படுத்தினார். பபிபென் வடிவமைத்த டிசைன்கள் பலருக்குப் பிடித்ததால், அங்குள்ள தொழிலாளர்கள் ‘பபி ஜரி’என்று அவருடைய பெயரிலேயே அந்த டிசைன்களை அழைக்கத் தொடங்கினர்.
- பபிபென் ராபேரி
ஆடைகளில் மட்டும் செய்துவந்த எம்ப்ராய்டரி டிசைன்களை, பைகளிலும் போட ஆரம்பித்தார் பபிபென். இது அவருக்குப் பிரமாதமான வெற்றியைத் தேடித்தந்தது. ‘பபி பேக்’ என்று அவர் பெயரிலியே பைகள் பிரபலமாகின. பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில்கூட பபி பைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
வியாபாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்ததை உணர்ந்த பபிபென், pabiben.com என்ற இணையதளத்தை ஆரம்பித்தார். பணப் பைகள், கைப் பைகள், கோப்புப் பைகள் போன்றவற்றை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்துவருகிறார். வெளிநாட்டுத் தன்னார்வலர்கள் சிலர் இவருடன் தொழில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
பெண் கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே பபிபென் ராபேரியின் லட்சியம். பள்ளியில் கால் வைக்க முடியாத பபிபென் ராபேரி, இன்று ஏராளமான பெண்களுக்கு ஆசிரியராக இருந்து, கைவினைக் கலைகளைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திவருகிறார்!