பெண் இன்று

களம் புதிது: குங்ஃபூ துறவிகள்

வீ.பா.கணேசன்

தொலைவிலிருந்து பார்க்கும்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயத்தைப் போலவேதான் அது இருந்தது. ஆனால் இமயமலைச் சரிவில் அபாயகரமான மலைச் சாலைகளில் கறுப்புக் கால்சட்டை, சிவப்பு மேலங்கி, வெண்ணிறத் தலைக்கவசம் அணிந்தபடி நூற்றுக்கணக்கான வீரர்கள் விரைந்துகொண்டிருந்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தை அடைந்தபோது, அவர்கள் புத்த பெண் துறவிகள் (பிக்குணிகள்) என்று தெரிந்தது. இந்தியா, நேபாளம், பூட்டான், திபெத் பகுதிகளைச் சேர்ந்த 500 பெண் துறவிகள் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியாவின் வடபகுதி உச்சியில் உள்ள லே வரை 4,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தைப் பரிசுக்காகவோ சாதனைக்காகவோ இவர்கள் மேற்கொள்ளவில்லை.

மிக முக்கியமான செய்தி குறித்து மக்களிடையே விழிப்புணர்வூட்டுவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். 2015-ம் ஆண்டு நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்களைத் தொடர்ந்த பேரழிவில் எண்ணற்றோர் உயிரிழந்தனர். பெற்றோரை, பெற்றோரில் ஒருவரை இழந்த சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பதின்பருவச் சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தனர். அப்போது ஆள்கடத்தல் கும்பல்கள் இவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, கடத்திச் சென்று விற்பதில் தீவிரமாக ஈடுபட்டுவந்தன.

விழிப்புணர்வு பயணம்

பொதுவாக இந்தப் பகுதிச் சமூகத்தில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு மதிப்பு குறைவு. அவர்களை விற்பதில் தவறில்லை என்ற மனப்போக்கு நிலவிவந்த சூழ்நிலையில், ஆள்கடத்தல் கும்பல்கள் சிறுவர், சிறுமிகளைக் கடத்திச் சென்று வீட்டு வேலை செய்யவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் முனைந்தன.

பேரழிவைத் தொடர்ந்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவந்த த்ருக்பா என்ற புத்த மதப் பிரிவைச் சேர்ந்த பெண் துறவிகள், ஆள்கடத்தலைப் பற்றிக் கேள்விப்பட்டனர். தாய்மையைப் போற்றுவதாக, பெண் தெய்வங்களைத் தொழுவதாகத் தெற்காசியப் பகுதியின் கலாச்சாரம் இருந்தபோதிலும், இளம்பெண்களின் உயிரைப் பறிப்பது, பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது, குழந்தைத் திருமணங்களை நிகழ்த்துவது போன்ற கொடுமைகளும் அரங்கேறிவருகின்றன.

பாலினச் சமத்துவம், அமைதியான சக வாழ்வு, சுற்றுச்சூழலைக் காப்பது போன்ற மனித இனத்தின் மேம்பாட்டுக்கான கருத்துகளைப் பரப்பவும், இந்தச் சமூக மனப்பாங்கை மாற்ற உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்த பெண் துறவிகள் மேற்கொண்ட நான்காவது சைக்கிள் பயணம் இது.

பாரம்பரிய புத்த மடாலயங்களில் பெண் துறவிகள், ஆண் துறவிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே நடத்தப்பட்டுவருகின்றனர். சமைக்கவும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சமய வழிபாட்டுக்கான பயிற்சிகளில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை. ஆண் துறவிகளுக்கு வழங்கப்படும் உடற்பயிற்சிகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் துறவிகளிடையே பாலினச் சமத்துவத்தை முன்வைத்த த்ருக்பா தலைவர் க்யால்வாங், ஆண் துறவிகளிடமிருந்து துன்புறுத்தல்களையும் வன்முறையையும் எதிர்நோக்க வேண்டியிருந்த சூழ்நிலையில் பெண் துறவிகளின் தற்காப்புக்காக குங்ஃபூ பயிற்சியும் அளிக்கத் தொடங்கினார்.

முப்பது என்ற அளவில் இருந்த பெண் துறவிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் 500 ஆக அதிகரித்திருக்கிறது. இத்தகைய பயணங்களின்போது விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமின்றி ஏழைகளுக்கு உணவளிப்பது, மருத்துவ உதவி செய்வது போன்றவற்றையும் மேற்கொள்ளும் இவர்களை, ‘குங்ஃபூ பிக்குணிகள்’என்று மக்கள் அழைக்கிறார்கள்.

இவர்கள் சைக்கிளில் வலம் வரும்போது பெரும்பாலோர் ஆண்கள் என்றே கருதிவிடுகின்றனர். பெண்களைப் பற்றிய மனப்போக்கை மாற்றவும் பெண்களும் சமமானவர்களே என்று உணர்ந்து அவர்களை மதிக்கவும் இந்தப் பயணம் உதவும் என்கிறார்கள் பெண் துறவிகள்.

“பெரும்பாலான மக்கள் நாங்கள் கோயில்களில் தங்கி, பிரார்த்தனை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால் பிரார்த்தனைகள் மட்டுமே போதுமானவையல்ல; மக்களின் நலனுக்காகச் செயலிலும் ஈடுபடவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்கள்.

SCROLL FOR NEXT