பெண் இன்று

பொற்சித்திரம்: காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு!

ம.சுசித்ரா

ஸ்டுடியோவுக்கு வெளியே யதார்த்தா பாணியில் ‘குழந்தை ஒளிப்படக்கலை’ என்கிற புதிய பாணியை அறிமுகப்படுத்தியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆனி கெடஸ் என்னும் பெண். ஆனி கெடஸ் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுக்க பிரபலம். ஆனி கெடஸை ஆத்மார்த்த ஆசிரியையாக வரித்துக்கொண்டவர் சங்கிரணி உதயகுமார். ஆனி கெடஸைப் போலவே இவர் எடுக்கும் ஒளிப்படங்கள் மவுனமாகக் கதை சொல்கின்றன, அமைதியாகக் கவிதை பாடுகின்றன.

தற்போது முழுநேர ஒளிப்படக்கலைஞராக மாறிவிட்ட இவர், 2011வரை பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர். ரெக்ரூட்மெண்ட் அதிகாரியாகப் பணிபுரிந்தார். “என்னுடைய முதல் மாதச் சம்பளத்தில் லோன் போட்டு கேமரா வாங்கினேன். வாரயிறுதி விடுமுறையில் குழந்தைகள் உள்ள வீடுகளைத் தேடி கேமராவுடன் ஆஜராகிவிடுவேன். இரண்டு, மூன்று வயதை எட்டிய சுட்டிகளைப் படம்பிடிப்பது பெரிய சவால். அவர்களோடு விளையாடி, அவர்கள் சுபாவத்தை நன்கு புரிந்துகொண்டு படங்களைச் சிறைப்பிடிக்க வேண்டும். இயற்கையைப் படமெடுப்பது போலவே இதற்கும் பொறுமையும் காத்திருப்பும் அவசியம்” என்கிறார் சங்கிரணி.

கும்பகோணம் தாராசுரம் கோயில் சிற்பங்கள் குறித்த ஆவணப்படத் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். சோழர் வரலாற்றைச் சிற்பங்கள் வாயிலாக ஆராயும் அந்தக் குழுவின் ஒரே பெண் ஒளிப்படக் கலைஞர் இவர்.

வலுப்படுத்தும் வாசிப்பு

ஒளிப்படக் கலைஞராக கேமரா லென்ஸில் பதிய வேண்டிய மனிதர்களையும் சூழலையும் மட்டும் இவர் படிப்பதில்லை. கவிதைகள், பாலோ கொய்லோ நாவல்கள், வரலாற்றுப் புத்தகங்கள் என வாசிப்பிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். “எல்லாரும் படம் எடுத்துவிடலாம். ஆனால், எல்லாரும் ஒளிப்படக் கலைஞர் ஆகிவிட முடியாது” என அழுத்தமாகச் சொல்கிறார் சங்கிரணி.

“கான்செப்ட் ஒளிப்படக்கலை (concept photography) எனக்கு ரொம்பப் பிடிக்கும். உதாரணமாக, தன்னம்பிக்கையான பெண்ணைக் காட்சிப்படுத்த அவர் கம்பீரமாக நிற்பதையும் பார்ப்பதையும் தாண்டி, ஒளி அமைப்பு, அவர் அணியும் உடையின் வண்ணம், அந்தச்

சூழலில் இருக்கும் பொருட்கள் எனப் பலவற்றையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்க வேண்டும். இதன் மூலம் பிரமிப்பான காட்சிப் படிமங்களை உருவாக்கலாம்” என்கிறார். கான்செப்ட் ஒளிப்படக்கலைக்கான பிரத்யேக வலைதளத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆண்களின் வேலையா?

இயற்கை ஒளி அமைப்பில் படமெடுப்பதைப் பெரிதும் விரும்பும் சங்கிரணி, தெருவோரங்களில் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்துக் கொண்டிருப்பதை எல்லோரும் இயல்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். “ஃபோட்டோ கிராஃபர் என்றாலே ஆண்கள்தான். அதை மீறி பெண் ஃபோட்டோகிராஃபராக இருந்தால் பேண்ட், சட்டைதான் போடுவார்கள் எனப் பல மூடநம்பிக்கைகள் இன்னும் மாறவில்லை. திருமணங்கள், பொதுநிகழ்ச்சிகளில் படமெடுக்கச் செல்லும்போது, நான்தான் ஃபோட்டோகிராஃபர் என்று நம்பவைக்கவே பாடுபடுவேன்” எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

மும்பையின் ஜொலிப்பு

மும்பையின் புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் எனப்படும் விக்டோரியா டெர்மினஸ். பரந்து விரிந்து நிற்கும் இந்தக் கம்பீரமான ஐரோப்பிய கட்டிடத்தை ஒரே ஃபிரேமுக்குள் அடக்குவது பெரும் சவால். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில், இரவில் சிவப்பு சிக்னல் போட்டபோது துரிதமாக ஃபிரேம் செய்து எடுத்தது.

ஷார்ஜாவின் கண்

துபாயில் பிரபலமான ‘ஷார்ஜா ஐ’. இது வழக்கமான ராட்சச ரங்கராட்டினம் அல்ல. சுற்றுலாப் பயணிகள் ஒட்டுமொத்த நகரத்தையும் பார்க்கும் விதமாக இதை மெதுவாகச் சுழலவிடுவார்களாம். அந்தப் பிரம்மாண்டத்தைச் சட்டகத்துக்குள் சிறைப்பிடிக்கக் கீழே படுத்தபடி கிக்ளிக்கியது!

நழுவவிடலாமா!

பெங்களூரு அருகில் உள்ள பால்முறி அருவி. வேகமாகப் பாய்ந்துவரும் அருவி நீரில் நெஞ்சுவரை மூழ்கியபடி நின்று பார்த்தால் இந்தக் காட்சி கிடைத்தது. ஒரு நொடி நழுவினாலும் ஆபத்து என்றாலும், நழுவவிடக் கூடாத காட்சி என கேமரா கண்கள் சொல்லின.

வானம் எவ்ளோ பெரிசு!

தன்னை மறந்து மழையை ரசித்துக் கொண்டிருக்கும் சிறுமி. வண்ணத்தைவிட, கறுப்பு வெள்ளையில் அவளுடைய அழகு மேலும் மெருகேறும் என மனம் சொன்னதை கேமரா உறுதிப்படுத்தியது.

உணர்வுகளின் கலவை

பனிமூட்டம் நிறைந்த நவம்பரில் டெல்லி ராஜ் பவனுக்கு அருகே குழுமியிருந்த பள்ளிச் சிறுமிகள். இவர்கள் மூவரும் நெருங்கிய தோழிகள் என்றாலும் ஆர்வம், துறுதுறுப்பு, வெட்கம் என வெவ்வேறு உணர்ச்சிகளை அவர்கள் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினார்கள்.

மழை மலர்

அந்தி மழையில் குடையின் மேல் உதிர்ந்த ஒற்றை மலர் இயற்கை ஒளியில் ஜொலிக்கிறது. 2011-ல் ஆன்லைன் ஒளிப்படப் போட்டியில் பரிசு வென்ற படம்.

கசியும் கண்களின் கதை

பெங்களூருவில் ஊரைச் சிரிக்க வைக்கும் பலூன் வியாபாரியின் மகன் அழுதபடி நிற்கிறான். அந்தக் குழந்தையின் கண்களுக்குப் பின்னால் கனமான கதை உள்ளது.

விழிப்புணர்வைப் பற்ற வைக்க!

புற்றுநோய் விழிப்புணர்வு நாளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்ற கான்செப்ட் பாணிப் படம். இந்தப் படத்துக்காக கடையில் தயக்கத்தோடு சிகரெட் வாங்கியதும், அதைப் பற்ற வைத்தபோது எதிர்த்த வீட்டு பாட்டி முறைத்ததும் தனிக் கதை!

SCROLL FOR NEXT