ஆண்கள் மட்டுமே செய்துகொண்டிருந்த பல வேலைகளை இன்று பெண்களும் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆட்டோ, டிராக்டர், பேருந்து ஓட்டும் பெண்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் குப்பை லாரி ஓட்டும் தூத்துக்குடி ஜெயலட்சுமி. குப்பை லாரி ஓட்டுவது என்றாலே பலரும் இழிவாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதுபோன்ற மனத்தடைகளை உடைத்திருப்பதில்தான் தனித்துத் தெரிகிறார் ஜெயலட்சுமி.
மாநகராட்சியில் வேலை செய்துவரும் ஜெயலட்சுமி, மனதில் உறுதி இருந்தால் எந்த வேலையும் கஷ்டமில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.
திசை மாறிய ஆர்வம்
ஆசிரியர் பயிற்சி பெற்ற ஜெயலட்சுமிக்கு லாரி ஓட்டுநர் ஆசை வந்தது ஏன்? தன் பெற்றோர் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சி முடித்தார். அவர்களுடைய வீட்டில் அம்பாசிடர் கார் இருந்ததால் தன் அப்பாவின் உதவியோடு கார் ஓட்டக் கற்றுக்கொண்டார். ஜெயலட்சுமியின் தந்தையின் நண்பர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வைத்திருந்தார். அதில் பெண்களுக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொடுக்குமாறு ஜெயலட்சுமியை அழைத்தார்.
“நானும் அந்த வேலையைச் செய்துவந்தேன். மத்தவங்களுக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்துக்கிட்டே நான் கனரக வாகனங்களை ஓட்டப் பழகிக்கொண்டேன். 1996-ம் ஆண்டு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். ஆசிரியை வேலைக்கு முன்பாக டிரைவர் வேலை தேடி வந்தது. அதை மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டேன்” என்று புன்னகைக்கிறார் ஜெயலட்சுமி.
இவர் முதலில் திருநெல்வேலி மாநகராட்சியில் வேலை செய்தார். சில காலம் தண்ணீர் லாரி, டிராக்டர் போன்றவற்றை ஓட்டினார். பிறகு குப்பை லாரி ஓட்டும் பணி வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பை லாரி ஓட்டிவருகிறார்.
“இடையிடையே மேயர், ஆணையரின் கார்களை ஓட்டியிருக்கேன். எனக்குக் கல்வித் தகுதி இருப்பதால், அலுவலகப் பணிக்கு மாறிவிடும்படி அதிகாரிகள் பல முறை சொல்லியிருக்காங்க. நான் அதை மறுத்துட்டேன். குப்பை லாரியை ஓட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது. காலை ஆறு மணிக்கு வந்துட்டு சாயந்திரம் ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். இதனால் குடும்பத்தையும் கவனிக்க முடியும். மத்த வேலையா இருந்தா என்னால குறிப்பிட்ட நேரத்துக்குப் போக முடியாது” என்று சொல்லும் ஜெயலட்சுமி, பேக்கரி வைத்திருக்கும் கணவர் ராமமூர்த்திக்கு ஓய்வு நேரத்தில் உதவி செய்துவருகிறார்.
சுத்தம் செய்வது உயர்ந்த பணி
“குப்பை லாரி ஓட்டுறோமேங்கற எண்ணம் எனக்கு ஒருநாளும் ஏற்பட்டதில்லை.
ஒருநாளைக்குக் குப்பையை எடுக்கலைன்னா நகர் நாறிப் போய்விடும். அப்படின்னா நகரைச் சுத்தம் செய்யற உயர்ந்த பணியைத்தானே நான் செய்றேன்! இந்த வேலை எனக்கு மன நிறைவைத் தருது. எந்த வேலையா இருந்தாலும் இஷ்டப்பட்டுச் செய்தால் எந்தக் கஷ்டமும் தெரியாது” என்கிறார் ஜெயலட்சுமி.
சக ஓட்டுநர்கள், சக பணியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைவரும் கஷ்டமான பணியை ஒரு பெண் செய்கிறாரே என்று ஜெயலட்சுமியை மிகவும் மதிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய குடும்பத்தினர், பின்னர் ஜெயலட்சுமியைப் புரிந்துகொண்டனர். கஷ்டமாக இருந்தால் வேலையை விட்டுவிடும்படி பலமுறை கணவர் சொல்லியும், ஜெயலட்சுமிக்கு இந்த வேலையை விடும் எண்ணம் வந்ததில்லையாம்.
தைரிய லட்சுமி
“எந்த வேலையில் கஷ்டம் இல்லை? கனரக வாகனம் ஓட்டுவதில் ஒரு பெண்ணா எனக்குப் பல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் இந்த வேலையை நான் விரும்பித்தான் செய்யறேன். மனதில் உறுதி இருந்தால் பெண்களால் எந்தக் கஷ்டமான வேலையையும் எளிதாகச் செய்துவிட முடியும். தூத்துக்குடி போன்ற நகரத்தில் வாகனம் ஓட்டுவது சவால்தான். ஆனாலும் எப்பேர்பட்ட போக்குவரத்து நெரிசலையும் என்னால் சமாளிக்க முடியும்” என்று தைரியமாகச் சொல்லும் ஜெயலட்சுமி, வாகனத்தில் ஏற்படும் சின்னச் சின்ன பழுதுகளைச் சரிசெய்யும் நுட்பங்களையும் கற்றுவைத்திருக்கிறார். சில விபத்துகளையும் சந்தித்திருக்கிறார்.
“ஒருமுறை டிராக்டர் ஓட்டும்போது டயர் தனியாகக் கழன்று ஓடிடுச்சு. அப்போ கொஞ்சம் பதற்றம் வந்ததே தவிர, பயப்படலை” என்கிறார் ஜெயலட்சுமி.
“நேரம் கிடைக்கும்போது பெண்களுக்குக் கனரக வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கணும், ஓய்வுக்குப் பிறகு டிரைவிங் ஸ்கூல் நடத்தணும்னு நிறைய திட்டங்களை வைத்திருக்கிறேன், பார்க்கலாம்” என்று சொல்லும் ஜெயலட்சுமி, “குப்பை எடுக்க நேரமாச்சு” என்று சொல்லியபடி லாரியைக் கிளப்பினார்.