குடும்பம், அலுவலகம் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது சவால் நிறைந்தது. இந்த இரண்டையும் சமாளித்துக்கொண்டு, தன் மனதுக்குப் பிடித்த ஓவியத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியிருக்கிறார் ரேவதி ராதாகிருஷ்ணன்.
சென்னையைச் சேர்ந்த ரேவதிக்குத் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை. “சின்ன வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஓவியம் வரைய நேரம் கிடைப்பதே இல்லை. வீடு, விட்டால் அலுவலகம், அலுவலகம் முடிந்தால் வீடு என்று நாட்கள் நகர்ந்தன. அப்போதுதான் எனக்கான ஒரு தனித்த அடையாளம் வேண்டும் என நினைத்தேன். விடுமுறை நாட்களில் ஓவியம் வரையத் தொடங்கினேன். பொதுவாக பென்சில், பேனாவில் தான் ஓவியம் வரைவேன்” என்று சொல்லும் ரேவதிக்கு ஓவியர்கள் பலர் குழுவாக இணைந்து செயல்படும் ‘சென்னை வார இறுதிக் குழுவின்’ தொடர்பு கிடைத்தது.
அவர்களுடன் இணைந்து வாட்டர் கலர் மூலம் ஓவியம் வரைய மூன்று ஆண்டுகள் பயிற்சியெடுத்தார். பின்னர், வார இறுதி நாட்களில் பொது வான இடங்களில் சந்தித்து, குழுவுடன் சேர்ந்து ஓவியம் வரையத் தொடங்கினார். ரேவதியின் ஓவியங்கள் பெரும்பாலும் கடற்கரையின் அழகையும் கிராமப்புற எளிமையையும் இயற்கையின் அதிசயத்தையும் வண்ணமயமாக வெளிப்படுத்துகின்றன.
“குடும்பம், அலுவலகம் என்று இருந்த என் வாழ்வில் தற்போது ஓவியமும் ஒரு அங்கமாகிவிட்டது. ஓவியம் வரைவது எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனிவரும் நாட்களில் அக்ரிலிக் ஓவியங்கள் வரையக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் நிறைவான குரலில்.