தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியமும் வெளிநாட்டவர்களால் போற்றிப் புகழப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிய பொக்கிஷங்கள் அருங்காட்சியகங்கள் மூலம் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. பழம்பெரும் சிலைகள், தமிழர்களின் வாழ்வியல் முறையைப் பறைசாற்றும் பொருட்கள் போன்றவற்றை அருங்காட்சியகத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறவர்களில் பலர் கடமைக்காக அந்தப் பொருட்களை வேகமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
ஒவ்வொரு பொருளுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரியப் பெருமைகளை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி.
“400 ஆண்டு பழமையான கலைப் பொருள் தவறிக் கீழே விழும் நொடியில் பல தலைமுறையாக நம் முன்னோர் அவற்றைப் பாதுகாத்துவந்ததின் அருமையை உணர முடியும். பழங்கால அரிய பொங்கிஷங்களை வைத்துதான் நம் மூதாதையர்களின் வரலாறு, திறமை ஆகியவற்றை அறிய முடிகிறது. அதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளி, கல்லூரி மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன். பெண்களால் கலைப் பொருளையோ, பொக்கிஷங்களையோ சிறப்பாகப் பேணிப் பாதுகாக்க முடியும்.
கல் காவியங்களையும் மரச் சிற்பங்களின் அழகை மட்டும் ரசிக்காமல் அவற்றின் தொழில்நுட்பத்தையும் கலை நுட்பத்தையும் சேர்த்தே ரசித்து உணர வேண்டும். சிலை செதுக்குபவரின் கவனம், சற்றுச் சிதறினால்கூட அதன் வடிவம் மாறிவிடும். அதுபோல்தான் வாழ்க்கையும் தடம் மாறாமல் செல்ல வேண்டும் என்பதைப் பழந்தமிழர் இலக்கணத்திலிருந்தே சுட்டிக் காட்டுவேன்” என்கிறார் சிவ சத்தியவள்ளி.
ஆரோக்கியமான உணவுகளின் மகத்துவம் குறித்து இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை இவர் நடத்திவருகிறார். சிறுதானியங்கள் குறித்த கண்காட்சியையும் அருங்காட்சியகத்தில் அடிக்கடி நடத்திவருகிறார். குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களில் இரும்பு, புரதம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்திருப்பதையும் தினமும் ஒரு வேளையாவது இந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திவருகிறார்.
கடல் ஆமை, சுறா, முதலை, பாம்பு, போன்றவற்றின் எலும்புக் கூடுகளும் பதப்படுத்தப்பட்ட உடல்களும் கன்னியாகுமரி அருங்காட்சியகத்தை நோக்கிப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இந்த உயிரினங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரினங்கள் அழிவது குறித்தும், வருங்காலத்தில் அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் சிவ சத்தியவள்ளி.
- சிவ சத்தியவள்ளி
“சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, இந்தப் பணி எனக்குக் கிடைத்தது. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பது மட்டும்தான் என் வேலை. ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பவை வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல. ஒவ்வொன்றும் மனித வாழ்வின் அடிச்சுவடிகள். வாழ்க்கை முறையில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது? அதனால் அருங்காட்சியகத்துக்கு வருகிறவர்களிடம் வரலாற்றையும் பழம்பெருமையையும் எடுத்துச் சொல்வதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்” என்கிறார் வித்தியாசமான சிந்தனை கொண்ட சிவ சத்தியவள்ளி.