“வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது, நாமாகத்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று சொல்லும் ஹேமலதா கார்த்திகேயன், ஈரோட்டில் பிருந்தா டிசைனர்ஸ் என்ற தனது தையல் நிறுவனம் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய்வரை சம்பாதித்துவருகிறார்! முக்கியப் பிரமுகர்களும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இவரது வாடிக்கையாளர்கள்.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர், சற்று இடைவேளை எடுத்துக்கொண்டு பேசினார்.
“எனக்குத் திருமணமாகும்வரை தையல் கலை பற்றி எதுவுமே தெரியாது. மாமனார், கணவர் இருவரும் தையல் கலைஞர்களாக இருந்ததால், அவர்களுக்கு உதவியாக இருக்கும்போது எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. பயிற்சி ஆரம்பமானது. கணவர் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கும் சிறப்புத் தையல் கலைஞராக இருந்ததால் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. காலப்போக்கில் நானும் தையல் கற்றுக்கொண்டேன். 18 ஆண்டு அனுபவத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறேன். இன்று பிரபல தையல் கடையின் உரிமையாளராகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதி உடையவளாகவும் மாறியிருக்கிறேன்!” என்று ஹேமலதா சொல்லும்போது, குரலில் அத்தனை மகிழ்ச்சி தெரிகிறது.
ஒரு குடும்பத்தில் பாட்டி, அம்மா, மகள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வகையில் ஆடை வடிவமைப்பது சிரமமானது. சாதாரண பிளவுஸில் தொடங்கி விதவிதமான பிளவுஸ், சுடிதார் வகைகள் என்று வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து தைத்துக் கொடுப்பதில்தான் ஹேமலதாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. காலத்துக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொண்டேவருகிறார். இணையம், தொலைக்காட்சி, ஆடை வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களைப் பார்த்து, புதிய டிசைன்களை அறிமுகப்படுத்துகிறார். இதனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்பொழுதும் மொய்த்துக்கொண்டிருக்கிறது.
“எனக்குத் திருப்தி இருந்தால்தான் வாடிக்கையாளருக்குக் கொடுப்பேன். நான் வடிவமைத்த ஆடைகளை அணிந்தவர்களிடம், ‘இதை நீங்கள் எங்கே தைத்தீர்கள்’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு வரும் வாடிக்கையாளர்களே அதிகம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு கடந்து வெளிநாடுகளிலும் வாடிக்கை யாளர்கள் உருவாகி விட்டார்கள். சுவிட்சர்லாந்து, கனடா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து துணிகளை அனுப்பி, தைத்துக்கொள்பவர்களும் இருக் கிறார்கள். என்னிடம் கட்டணம் கொஞ்சம் அதிகம். நான் செய்து கொடுக்கும் வேலையில் முழு திருப்திகொள்ளும் வாடிக்கையாளர்கள் கட்டணம் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதை எங்கள் திறமைக்குக் கிடைக்கும் மரியாதையாகப் பார்க்கிறேன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார் ஹேமலதா.
நினைத்ததைப் படிக்க முடிவதில்லை. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அது விரும்பிய இடத்தில் கிடைப்பதில்லை. அந்தப் பணியிலும் பாதுகாப்பாக உணரமுடிவதில்லை என்பது இன்றைய பெரும்பாலான பெண்களின் நிலை. அப்படிப்பட்டவர்கள் தையல் கலையை முறையாகக் கற்று, நிறைவாகச் செய்தால் நம்மைத் தொழில்முனைவோராக உயர்த்தும் என்கிறார் ஹேமலதா.
“தையல் வகுப்பு முடித்தவுடன் பிரபல கலைஞராக மாறிவிட முடியாது. தையல் வகுப்புகள் அடிப்படையோடு நின்றுவிடும். அதற்கு மேல் அனுபவம் பெற்றவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டுத் துணிகளை மட்டும் தைக்கும் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். நான் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். இது போட்டிகளும் சவால்களும் நிறைந்த உலகம் என்பதைப் புரிந்துகொண்டு களம் இறங்கியதால், இந்த உயரத்தை அடைந்துள்ளேன். இந்தச் சூத்திரத்தைத் தெரிந்துகொண்டால் நீங்களும் வெற்றிபெறலாம்!” என்கிறார் ஹேமலதா கார்த்திகேயன்.
படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்