பெண் இன்று

வானவில் பெண்கள்: கயிற்றால் உயர்ந்த வாழ்க்கை

க.ரமேஷ்

சுய உதவிக் குழு ஆரம்பிப்பவர்களில் பலரும் தொழில் செய்வது இல்லை. அதேநேரம், கடலூர் அருகே வாழை நாரில் கயிறு திரிக்கும் தொழிலை ஒரு பெண்கள் குழு வெற்றிகரமாக நடத்திவருகிறது.

கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரம் கிராமத்தில் 10 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்றிணைந்து வாழை நாரில் இருந்து கயிறு திரித்து விற்பனை செய்துவருகின்றனர். இதன்மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிகொள்ள முடியும் என்கின்றனர். இது குறித்து அக்குழுவை சேர்ந்த தமிழ்ச்செல்வி, செல்வக்குமாரி, அஜிதா ஆகியோர் பகிர்ந்துகொண்டது:

தொழில் தொடங்க ஆர்வம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்துக்கு ரியல் தொண்டு நிறுவன பணியாளர் வந்து ஊரில் கூட்டம் போட்டு மகளிர் சுயஉதவிக் குழு ஆரம்பித்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள அறிவுறுத்தினார். அதன் பிறகு 12 பேர் கொண்ட ‘ரியல் ஆலயம் மகளிர் குழு’ என்ற பெயரில் குழுவை ஆரம்பித்தோம். இதற்கு முன்பு சுய உதவிக்குழு பற்றி எங்களுக்குத் தெரியாது. பிறகு குழுவாகச் செயல்படுவது, பணிபுரிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொண்டோம்.

எங்கள் குழுவின் மூலம் சிறுதொழில் நடத்தி வருமானம் ஈட்ட முடிவுசெய்தோம். எங்களில் ஆர்வமுள்ள பெண்கள் 10 பேர் ஒன்றிணைத்து வாழை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலைத் தொடங்க நினைத்தோம். ரியல் நிறுவனத்தினர் எங்கள் குழுவுக்கு மூன்று நாட்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்தார்கள். தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்தார்கள். அந்த நிறுவனமே வாழை நாரிலிருந்து கயிறு திரிக்கும் கருவிகளை இலவசமாக வழங்கியது.

விரிவுபடுத்தத் திட்டம்

இப்போது 10 பேரும் ஒன்றாகச் சேர்ந்து இத்தொழிலை செய்துவருகிறோம். எங்கள் குழுவில் உள்ள ஒருவர் கடலூர் சென்று கயிறு திரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வருவார். அதன் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கயிறு திரித்துக் கட்டுகட்டாக சேர்த்து பார்சல்செய்து, ஈரோட்டில் உள்ள கம்பெனிக்குப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கிறோம்.

இந்தத் தொழில் செய்வதற்கு எங்களுக்கு மாதம் ரூ. 4,100 முதலீடு தேவைப்படுகிறது. இந்த தொழில் மூலம் எங்கள் குழுவுக்கு மாதந்தோறும் ரூ.17,300 வருமானம் கிடைக்கிறது. செலவு போக ஒரு நபருக்கு ரூ.2,640 வருமானமாகக் கிடைக்கிறது. இந்தத் தொழில் எங்கள் குழுவுக்கு முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. இந்தத் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை ஒரு நபருக்கு மாத வருமானமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT