தமிழ் ஸ்டூடியோவின் லெனின் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆவணப்பட இயக்குநருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான லெனின் விருதைப் பெறவிருக்கிறார் தீபா தன்ராஜ். ஹைதராபாதில் பிறந்த இவர், சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரியிலும், உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் படித்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படத் துறையில் அனுபவம் பெற்றிருக்கும் தீபா, இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து…
ஊடகத்தைப் போராட்டத்துக்கான கருவியாகத் தேர்ந்தெடுத்தது எப்படி நிகழ்ந்தது?
1980-களில் பெண்ணிய இயக்கங்கள் பலவற்றோடு இணைந்து செயலாற்றினேன். வரதட்சணைக்காக நடக்கும் கொலைகள், வீட்டில் பெண்களுக்கெதிராக நடக்கும் பிற வன்முறைகள், அமைப்புசாராப் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெண் சீண்டல் போன்றவற்றுக்கு எதிராகப் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளோம். இதுதான் பெண்ணியச் சிந்தனைகளுடன் கூடிய படைப்பாளியாக என்னை உருவாக்கிக் கொண்டதற்கான ஆரம்பம் என நினைக்கிறேன்.
மத்திய ரிசர்வ் போலீஸாலும் துணை ராணுவத்தினர் சிலராலும் தலித் பெண்கள், பழங்குடி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், சிறைக்கு உள்ளே நடந்த பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றுக்காக நாங்களே ஒரு குழுவை ஏற்படுத்தி, அதன் மூலமாக விசாரணை செய்து, இந்த அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறோம்.
ஆவணப் படங்களின் வழியாக நீங்கள் என்னென்ன பிரச்சினைகளைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்? அதற்கான எதிர்வினை அல்லது தீர்வாக அமைந்தவை என்னென்ன?
நாங்கள் யுகாந்தர் திரைப்படக் கூட்டு முயற்சியைத் தொடங்கியபோது, நாட்டின் பல பகுதிகளிலும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண்கள் தொழிற்சங்கங்களை ஆரம்பித்துத் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்கள். பணிச்சூழல்கள், ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு, பணியிடங்களில் பாலியல் ரீதியான கொடுமைகள் போன்றவற்றுக்கு எதிராக முக்கியமான கேள்விகளை அவர்கள் எழுப்பினார்கள். இதைப் போன்றவர்களின் குரல்களைப் பதிவுசெய்யும் விதத்தில் படங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பினோம். இந்தப் படங்களின் மூலம் பெண்களுக்கு உத்வேகம் அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக எல்லாப் பெண்களும் முன்வர வேண்டும் என்று விரும்பினோம். போதனை செய்வதுதான் நோக்கம். ஆனால், படங்களைக் கொண்டு மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப முடியுமா என்பதுதான் கேள்வி.
யுகாந்தர் திரைப்படக் கூட்டு முயற்சி விளைவாக எடுத்த படங்கள் என்னென்ன?
யுகாந்தர் வாயிலாக நான்கு படங்கள் எடுக்கப்பட்டன. மொல்கரின் (1981), இது பூனேவில் வீட்டு வேலை செய்பவர்கள் அமைத்த தொழிற்சங்க முயற்சியைப் பற்றியது. டம்பகு கி ஆக் (1982), இது நிபானியில் புகையிலை சார்ந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் போராட்டத்தைப் பதிவு செய்தது. இதி கதா மாத்ரமெனா (1983), இது திருமண வாழ்க்கையில் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளைப் பற்றியது. சுதேச்ஷா (1983), இது சிப்கோ இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு போராளியின் வாழ்க்கைக் கதை. இது நான்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நான்கு மாநிலங்களின் பெண்ணியப் போராட்டக் குழுக்கள், தொழிற்சங்கங்கள், கல்லூரிகள், திரைப்படச் சங்கங்கள் என பல இடங்களில் திரையிடப்பட்டன.
பெண்கள், அவர்களுக்கான கருத்தரிக்கும் உரிமை, பெண்களின் அரசியல் நிலை, முறை சாரா அமைப்புகளின் அணுகுமுறை, குடும்ப அமைப்பில் பெண்களுக்கு இருக்கும் உரிமை, பெண் கல்வி போன்றவை என் முக்கியமான பேசுபொருட்களில் சில. மேலும், மனித உரிமை மீறல்கள், வகுப்புவாத அரசியல் போன்ற விஷயங்கள் குறித்தும் சில பணிகளைச் செய்திருக்கிறேன்.
ஒரு ஆவணப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, எந்த விஷயம் என்னை ஒரு ஆவணப்படத்தை எடுப்பதற்குத் தூண்டுகிறது என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை மிகவும் கவனத்துடன் ஆராய்வேன். எனக்கென்று சில பரீட்சைகளை வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட விஷயத்தோடு நான் எப்படி என்னை அடையாளம் கண்டுகொள்கிறேன்? அதை மறுசித்தரிப்பு செய்ய முடியுமா? ஆச்சாரத்துக்கு எதிரான செயல்பாடாக இருக்குமா? எனக்குக் கிடைத்திருக்கும் தரவுகளைக் கொண்டு முன்பைவிட மாறுபட்ட வகையிலும் அழகியல் ரீதியாகவும் படத்தை எடுக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளை எனக்கு நான் கேட்டுக்கொள்வேன். அதற்குப் பிறகுதான் ஆவணப் படம் எடுக்கத் தொடங்குவேன்.
எனது ஆவணப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. மக்கள் மனதில் தொந்தரவையும் உத்வேகத்தையும் சம அளவில் எனது படங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.
அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுள் ‘சம்திங் லைக் எ வார்’ என்னும் ஆவணப் படமும் ஒன்று. அந்தப் படத்தின் எழுத்து வடிவம் ஒரு வழக்குக்காக உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு அவர்களின் சம்மதமில்லாமலேயே சில மருந்துகள் அளிக்கப்படுவது குறித்த வழக்கில்தான், இந்தத் திரைப்படத்தின் எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து சில காட்சிகளை இந்திய பெண்ணியவாதிகளும் கனடா நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதிகளும் தங்கள் போராட்டத்துக்குப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் மூலம் கனடாவின் இண்டர்நேஷனல் டெவலப்மென்ட் ரிசர்ச் சென்டர் இத்தகைய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்காக வழங்கிய நிதியை நிறுத்தியது. இந்த ஆவணப்படம் உலகின் பல நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் சார்ந்து காண்பிக்கப்படுகிறது.
உலகத் திரைப்பட விழாக்களில் உங்களின் எந்தெந்தப் படங்கள் பங்கெடுத்திருக்கின்றன?
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் சுதேஷா, சம்திங் லைக் எ வார், தி லெகஸி ஆஃப் மால்தஸ், க்யா உவா இஸ் ஷாஹர் கோ (What has happened to this city?) நாரி அதாலத் (Women’s courts), இன்வோக்கிங் ஜஸ்டிஸ் ஆகிய படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன.
உங்களுக்குக் கிடைத்திருக்கும் லெனின் விருதை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களின் அடுத்த முயற்சி என்ன?
லெனின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். தற்போது, ரோஹித் வெமூலா ஏற்படுத்திய அலையைப் பற்றியும் அதற்கு எதிராகப் பரப்பப்பட்ட கருத்துகளையும் குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.