பெண் இன்று

பெண்ணும் ஆணும் ஒண்ணு 02 - சம உடைமை அல்ல சம உரிமையே தேவை!

ஓவியா

சம உரிமை, சம வாய்ப்பு இந்த இரண்டும்தான் சமத்துவத்துக்கான பயணத்தில் எப்போதுமே மைல்கற்களாக இருக்கின்றன. உடைமைகளைச் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டால் எல்லோரையும் சமப்படுத்திவிட முடியுமா என்ற கேள்விக்குப் பெரியார், “முடியாது. சமஉரிமை இல்லாத இடத்தில் தோன்றும் சமஉடைமை வெகு விரைவில் அதிக உரிமை உள்ளவர்கள் கைகளில் தானாகச் சென்று சேர்ந்துவிடும். அது நிலைக்காது. எனவே சமஉடைமைக்கான குரல் முக்கியமில்லை, சமஉரிமைக்கான குரலே முக்கியம்” என்றார்.

அவர் காங்கிரசிலிருந்தபோது காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு வெட்ட நிதி அனுப்பினார். “அவர்களுக்குப் பொதுக் கிணற்றில் நீர் எடுக்கும் உரிமைதான் முக்கியமே தவிர, தனிக் கிணறு தேவையில்லை. அது அவர்கள் உரிமையை நிலைநாட்டாது” என்று திருப்பி அனுப்பினார் பெரியார். அவர் சொன்னதை மெய்ப்பிப்பது போலவே நாட்டில் தனிக் கிணறு தோண்டப்பட்ட பல இடங்களில் அதுவரை பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதித்துக் கொண்டிருந்த மக்கள்கூட, அவர்களுக்கென்று வெட்டப்பட்ட தனிக் கிணற்றுக்குப் போகச் சொன்னதாக வரலாறு பதிவாகியுள்ளது.

எனவே சமஉரிமை, சமவாய்ப்பு, பொதுஉரிமை, பொதுநிலைகளில் சம பங்கு ஆகிய சொற்களை சமத்துவம் பற்றிய நமது புரிதலுக்கான அடிப்படைகளாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த இடத்திலிருந்து பாலினச் சமத்துவம் என்ற தலைப்புக்குள் நாம் செல்லலாம்.

பாலினச் சமத்துவத்தின் முதல் சவால் அதன் மீதான பொது மனிதரின் நம்பிக்கையின்மை. ஆணுக்குப் பெண் எப்படிச் சமமாக முடியும் என்ற கேள்வி தவிர்க்கவே இயலாமல் அனைவர் மனதிலும் படிந்துபோயிருக்கிறது. ‘பெண் எப்போதும் பிறரைச் சார்ந்து வாழ்பவளாகத்தான் இயற்கை படைத்திருக்கிறது. ஓர் ஆண், பெண்ணைப் பாதுகாக்க வேண்டியவனாக இருக்கிறான்’ என்கிற சிந்தனை நமது மனங்களில் இருக்கிறது என்பதைவிட, இந்தச் சிந்தனையே நமது மனமாக இருக்கிறது. இதன் நீட்சியாக ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்றும் படிமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

குடும்பம், மதம், ஊர், அரசு, வர்த்தக உலகம் இவை அனைத்தும் அந்தப் படிமானங்களுக்கு மீண்டும் மீண்டும் உயிரூட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆண் உடல், பெண் உடல் பற்றிய நமது புரிதல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த அளவுக்கு இது சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்றால் தரம் மிகுந்ததாக நம்பப்படும் சி.பி.எஸ்.சி. (மத்திய இடைநிலைக் கல்விக் குழுமம்) பாடத்திட்டத்தில் பெண்ணின் அழகான உடல் 36-26-36 என்ற அளவுகளோடு இருக்க வேண்டும் என்றும் ஆணின் அழகான உடல் `வி’ வடிவத்தில் இருக்க வேண்டும் என்றும் உளறுகிற அளவுக்கு இருக்கிறது.

ஆண்மை, பெண்மை

நாம் இரண்டு சொற்களை இணைந்த பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்துகிறோம். ஆண் - ஆண்மை, பெண் - பெண்மை. பிறந்த குழந்தையின் உடலமைப்பை அல்லது உடற்கூறை வைத்து அந்தக் குழந்தை பெண்ணா, ஆணா என்பதை மருத்துவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். அது வெறும் பால் (sex) சார்ந்த பிரிவினைதான். ஆனால் அந்த நொடியிலேயே அதன் பாலினம் (gender) சார்ந்த தன்மைகள் குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் முன்முடிவு செய்யப்படுகின்றன. அறிவியல்படி XY குரோமோசோம்கள் நமது உடற்கூறையும் மனித இன மறு உற்பத்தி சார்ந்த வேலையையும் மட்டும்தான் தீமானிக்கின்றன. ஆனால், ஆண்மை என்றும் பெண்மை என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும் பண்புத் தொகுதிகள் இயற்கையால் தீர்மானிக்கப்பட்டவை அல்ல. மனித இன வரலாற்றால் தீர்மானிக்கப்பட்டவை.

ஒரு குழந்தையைத் தனது உடலுக்குள் வளர்த்து உலகுக்குத் தரும் ஆற்றல் பெண் உடலின் சிறப்பம்சம். அது இயற்கையின் ஆக்கம்தான். ஆனால் பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண் உடல் என்று எழுதியது இயற்கையல்ல. இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தப் பண்புத் தொகுதிகளைப் பற்றிப் பேசினோமில்லையா? ‘ஆண்மை’ ‘பெண்மை’, இத்துடன் இன்னொரு ‘மை’யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘தாய்மை’. ஆக, பெண்ணுக்கு மட்டும் இரண்டு ‘மை’ கள்.

‘பாலினம்’என்ற சொல் ‘பால்’அடிப்படையில் குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்றப்படும் இந்தக் கருத்தாக்கங்களை உள்ளடக்கியே ஒலிக்கிறது. தாய்மடியிலேயே இந்தப் பேதங்கள் தொடங்கிவிடும். பால் கொடுக்கும் பெண்ணிடம், “ஆம்பிளைப் பிள்ளை கூடுதலா பால் குடிக்கும்; நிறைய கொடு” என்ற அறிவுரை இன்னும்கூட பல வீடுகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் பெண்களின் வாயிலிருந்து, அவர்கள் குரலாகவே ஒலிக்கிறது.

(இன்னும் தெறிவோம்)
கட்டுரையாளர்: பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

SCROLL FOR NEXT