இங்கிலாந்தில் வாழும் ஓவியர்பல்ஜிந்தர் கவுர், முதிய பெண் மணிகளின் வெவ்வேறு தருணங் களைத் தொடர் ஓவியங்களாக வரைந்துள்ளார். அந்தப் பெண்களின் அடையாளம் சீக்கியப் பெண்களின் அடையாளமாக இருக்கிறது. வயதான வர்களின் முகங்களைத் தீவிரமாக வேடிக்கை பார்க்கத் தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார் பல்ஜிந்தர் கவுர். இவர் ஏற்கனவே ‘தி கவுர் ப்ராஜக்ட்’ என்ற பெயரில் உலகம் முழுக்க வாழும் கவுர் சமூகத்தைச் சேர்ந்த வெவ்வேறு பெண்களின் கதைகளை அவர்களின் மொழியிலேயே சொல்லவைத்து, அவற்றைப் புகைப்படங்களோடு பதிவு செய்திருக்கிறார்.
பிரசவ மரணங்களைத் தவிர்க்கும் மருந்து
இந்தியாவில் 2015-ல் பிரசவங்களின்போது இறந்த தாய்மார்களின் எண்ணிக்கை மட்டும் 45 ஆயிரம். பிரசவ மரணங்களில் பெரும்பாலானவை, குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குள் அதிக ரத்தப் போக்கால் ஏற்படும் மரணங்கள். இது தொடர்பாக உலகம் முழுவதுமுள்ள 21 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பெண்களிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகப் பிரவசத்தின் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்கைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான இறுதிக் கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
இந்த மருந்தைக் குறைந்த விலையில் தருவதற்கான முயற்சியும் நடந்துவருகிறது. டிரான்எக்சமிக் (Tranexamic) அமிலத்தில் தயாரிக்கப்படும் மருந்து ரத்தப் போக்கைத் தடுப்பதற்கு உதவும் என்று தெரியவந்துள்ளது. இந்த மருந்து அறுவை சிகிச்சையின் தேவையையும் குறைக்கும் என்கின்றனர். இதன் மூலம் உலகம் முழுவதும் 30 ஆயிரம் பெண்களைக் காப்பாற்ற முடியும். இந்த மருந்தை 1960-களிலேயே கண்டுபிடித்தவர் பெண் விஞ்ஞானி ஊதாகோ ஒகாமோதோ. ஆனால் அவரது கண்டுபிடிப்பு முறையான அங்கீகாரத்தைப் பெறவில்லை. அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவரது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.
முதலிடத்துக்கு வந்த மன்பிரீத்
ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் முதல் சுற்றில், குண்டு எறியும் போட்டியில் மன்பிரீத் கவுர் தங்கப் பதக்கம் வென்று உலகத் தரப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சீனாவில் உள்ள ஜின்ஹுவா நகரில் நடந்த போட்டியில் 18.86 மீட்டர் தூரத்துக்குக் குண்டு எறிந்து முந்தைய சாதனைகளை முறியடித்தார். மன்பிரீத் இதற்கு முன்பு 17.96 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்திருக்கிறார்.
சோனல் மான்சிங்கின் வாழ்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற செவ்வியல் நடனக் கலைஞர் சோனல் மான்சிங்கின் வாழ்க்கைச் சரிதம், ‘சோனல் மான்சிங்: எ லைஃப் லைக் நோ அதர்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் சுஜாதா பிரசாத், சோனல் மான்சிங்கிடம் பேசும் பாணியில் இந்தப் புத்தகத்தை வடிமைத்துள்ளார். சோனல் மான்சிங்கின் இசை ரசனை, அரசியல் முதல் அவரது சிறு வயது சாகசங்கள்வரை இந்நூலில் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. பரத நாட்டியம், ஒடிஸி இரண்டிலும் புலமை பெற்றவர் சோனல் மான்சிங்.
இந்தியத் தூதரக உயர் அதிகாரி லலித் மான்சிங்கை மணந்த அவர், வீட்டு உரிமையாளர் பெண்ணோடு ஜெனிவா நகரத்தில் நடைபெற்ற சுவாரசியங்களையும் விவரிக்கிறார். அந்தக் காலகட்டதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களுடன் சோசலிஷக் கருத்தியலில் ஈடுபாடு கொண்டிருந்த தன்னை, இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார். அக்காலகட்டத்தில் அரசு விழாக்களில் நடனமாட மறுத்ததையும் இப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். செவ்வியல் நடனம் போன்ற வடிவங்களை யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொள்வது சாத்தியமல்ல என்றும் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.