சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொல் கத்தாவைச் சேர்ந்த இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் ராஜஸ்தானைச் சேர்ந்த காந்தகுமாரி பட்நாகர். 1992-ம் ஆண்டு பதவியேற்ற அவர் ஐந்து மாதங்கள் பதவி வகித்துள்ளார். அவருக்குப் பிறகு சுமார் 25 ஆண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிபதியாக இந்திரா பானர்ஜி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1957 செப்டம்பர் 24-ம் தேதி பிறந்த இவர், கொல்கத்தாவில் உள்ள லோரெட்டோ ஹவுஸில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு இளங்கலைப் படிப்பை அங்குள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், சட்டப் படிப்பை கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும் முடித்தார். 1985 ஜூலை 5-ம் தேதி முறைப்படி பார் கவுன்சிலில் பதிவுசெய்து வழக்கறிஞர் தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார். சுமார் 17 ஆண்டுகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிரபல குற்றவியல் வழக்கறிஞராக வலம் வந்தார். பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாலினச் சமத்துவத்துக்காகவும் ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் ஆஜராகிப் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெறக் காரணமாக இருந்துள்ளார். அந்த அளவுக்கு வழக்கறிஞர் தொழில் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.
உழைப்புக்கு அங்கீகாரம்
இவரது நேர்மையான, துடிப்பான பணி்க்கு அங்கீகாரம் தரும் வகையில் கடந்த 2002 பிப்ரவரி 5-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து 2016 ஆகஸ்ட் 8-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதவி மூப்பு அடிப்படையில் இரண்டாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிவந்த இவர், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆளுநர் வித்யாசாகர் ராவால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 39-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள இந்திரா பானர்ஜி, பதவியேற்றபோது தமிழில் வணக்கம் என்று சொல்லி தன் உரையைத் தொடங்கிப் பின் ஆங்கிலத்தி்ல் பேசினார். ‘‘டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொன்விழா ஆண்டில் அங்கு எட்டு மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றியது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றால், பாரம்பரியம் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பது எனக்குக் கிடைத்த பேரதிர்ஷ்டம். சென்னை எனக்கு அளித்த வரவேற்பில் புளகாங்கிதம் அடைந்துவிட்டேன். இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த உயர் நீதிமன்றத்தின் மாண்பு உயர என்னால் முடிந்தவரை பாடுபடுவேன்.
தமிழ் ஒரு பழமையான, தொன்மையான கலாச்சாரமும் பண்பாடும் மிக்க செம்மொழி. தமிழ்தான் இன்று பல நாடுகளை ஆட்சி செய்கிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில் இப்படியொரு மிகப் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டையும் எனது சொந்த வீடு போலத்தான் நினைக்கிறேன். எனக்குத் தமிழ் மொழி மீது தீராத ஆர்வமும் மோகமும் உண்டு. தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற என் எண்ணத்துக்குத் தற்போது அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. நேரத்தைத் துளியும் வீணடிக்காமல் விரைவிலேயே தமிழ் கற்பேன்” என்று சொல்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
நீதிமன்ற வரலாறு
சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை என மூன்று இடங்களில் நீதிமன்றங்களை பிரிட்டன் அரசு நிறுவியது. அப்படி 1801-ல் சென்னையி்ல் ‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ உருவாக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1862-ம் ஆண்டு ஜுன் 26-ம் தேதி விக்டோரியா பேரரசியின் காப்புரிமைப்படி சென்னையில் உயர் நீதிமன்றம் ஜார்ஜ் டவுன் பகுதியி்ல் நிறுவப்பட்டது. 1862-ம் ஆண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பிரிட்டிஷ் நீதிபதி சர் ஹாலி ஹார்மன் ஸ்காட்லாந்தின் கோரிக்கையை ஏற்று 1892-ல்
விக்டோரியா பேரரசியின் ஒப்புதலோடு இந்தோ-சாரசெனிக் முறையில் கட்டப்பட்ட பிரம்மாண்டக் கட்டிடம்தான் வானுயர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகம். லண்டனில் உள்ள பெய்லி நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது. ஆரம்பகால கட்டிடங்களில் இங்குதான் கலங்கரை விளக்கமும் இருந்துள்ளது.