ஐந்தாவது சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் இயக்குநர் வைஷ்ணவி சுந்தர் ஒருங்கிணைத்திருந்த ‘பெண்கள் உருவாக்கும் திரைப்படங்கள்’ (Women Making Films) என்ற பிரிவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பிரபல ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் இயக்கிய ‘இன்வோகிங் ஜஸ்டிஸ்’(Invoking Justice) என்ற ஆவணப்படம் அவற்றில் ஒன்று. 2004-ம் ஆண்டு தென்னிந்தியாவில் உருவான முதல் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் உருவான பின்னணியை இந்தப் படம் அலசுகிறது.
பெண்கள் ஜமாத் உருவான கதை
புதுக்கோட்டையில் ஷரிஃபா கானம் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பால் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. பன்னிரண்டு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பில் பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
பொதுவாக இஸ்லாமிய ஆலோசனைக் குழுவான ஜமாத்தில் உறுப்பினர்களாக ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். குடும்ப வழக்குகளை விசாரிப்பதற்கு, குடும்பங்களுக்கும் காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் இந்த ஆலோசனைக் குழு பாலமாகச் செயல்படும். பெண்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த ஆலோசனைக் குழு நீண்ட காலமாகச் செயல்பட்டுவந்தது. இதனால் பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்புகள் பெண்களுக்கு எதிராகவே இருந்தன. இதை எதிர்த்து உருவானதுதான் தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் அமைப்பு.
இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை அழுத்தமாகத் தன் ஆவணப்படத்தில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் தீபா தன்ராஜ். இந்தப் படத்தில் பெண்கள் ஜமாத் அமைப்பினருடன் இரண்டு வழக்குகளைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் தீபா. குடும்ப வன்முறையால் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண், கணவரின் பாலியல் துன்புறுத்தலால் விவாகரத்து கோரும் ஒரு பெண் இவர்கள் இருவருக்கும் நீதியைப் பெற்றுத்தர இந்த அமைப்பு எடுக்கும் முயற்சிகளை உணர்வுபூர்வமாக விளக்கியிருக்கிறது இந்த ஆவணப்படம். அத்துடன், இந்த வழக்குகளை மனம் தளராமல் துணிச்சலுடன் பின்தொடர்ந்து செல்லும் பெண்கள் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களின் கருத்துகளையும் பதிவுசெய்திருக்கிறது. 1988-ம்
ஆண்டு, தான் கலந்துகொண்ட பெண்கள் மாநாடுதான் பெண்ணுரிமையைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தியது என்று சொல்லும் ஷரிஃபா, அதுதான் பெண்களின் உரிமைக்காகத் தன்னைப் போராடவைத்தது என்கிறார்.
இஸ்லாம் மதத்தில் செயல்படும் ஷரியா சட்டங்களைப் பற்றிய பெண்களின் பார்வையை இந்தப் படத்தின் மூலம் உலகத்துக்குப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் தீபா தன்ராஜ். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று சமூகத்தில் நிலவும் இரட்டை நீதிமுறையைக் கேள்வி கேட்கும் இந்தப் பெண்கள், நீதிக்கான ஒரு முடிவற்ற போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். 2011-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.
தற்போதைய நிலை
இந்தத் திரையிடலில் தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் அமைப்பை நிறுவிய ஷரிஃபா கானம் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார். “தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எங்கள் அமைப்பை அணுகும் பெண்கள், அதற்குப் பிறகு எங்களுடைய அமைப்பில் உறுப்பினர்களாகவும் மாறிவிடுகிறார்கள். ‘தலாக்’ மீதான விவாதம் 1986-ம் ஆண்டிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் தீர்மானமான முடிவு எட்டப்படவில்லை.
2004-2014-ம் ஆண்டுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ‘தலாக்’ பிரச்சினையால் இறந்திருக்கிறார்கள். அரசாங்கம் இஸ்லாமிய பெண்கள் மேம்பாட்டுக் குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும். இந்த அமைப்பை ஆரம்பித்து பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் அமைப்புக்குப் பாராட்டுகள் கிடைத்த அளவுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையான நிலை. இதனால் அமைப்பை முன்னெடுத்துச் செல்வது பெரும் சவாலாகவே இருக்கிறது” என்றார் ஷரிஃபா.