பெண் இன்று

களம் புதிது: பெண்கள் ஏன் ஓட வேண்டும்?

வா.ரவிக்குமார்

சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை வெளிநாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் பிடித்தார். இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஒரு பெண். இந்த நிகழ்வை ஒட்டி, பெண்கள் நடப்பது, ஓடுவதில் இருக்கும் நன்மைகளை விளக்கும் ‘லிமிட்லெஸ்’ என்னும் ஆவணப்படத்தை இந்தியா அமெச்சூர் ரன்னர்ஸ் அறக்கட்டளை திரையிட்டது.

“ஒரு பெண் கல்வி கற்பதால் குடும்பம் தொடங்கி சமூகம்வரை எப்படி நன்மை கிடைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதால் குடும்பத்தின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படும். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கான பயிற்சி நேரத்தில் தொந்தரவு அளிக்காமல் இருக்க வேண்டும்” என்று சொன்னார் ஆவணப் படத்தின் இயக்குநர் அசோக் நாத். இந்த ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

அனைவருக்கும் பொது

நடப்பது, ஓடுவது எல்லாம் மேட்டுக்குடிப் பெண்களுக்கு வேண்டுமானால் சரிப்பட்டுவரும்; நமக்கெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா என்று ஒதுங்கும் பெண்களும் இந்த ஆவணப்படத்தை ஒருமுறை பார்த்தால், ஓடுவதற்குத் தயாராகிவிடுவார்கள். காரணம் ஏழை, நடுத்தரவாசிகள், தினம் தினம் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுபவர்கள் என்று சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்களும் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் தங்களின் ஓட்டப் பயிற்சியை நிறுத்தாமல் தொடர்வதைப் பதிவுசெய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

இந்தியாவில் பல்வேறு வயது நிலைகளில் இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கும் எட்டுப் பெண்களின் வாழ்வில் ஓட்டம் எப்படிப் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது காட்சியாக நம் முன் திரையில் விரிகிறது. இந்த எட்டுப் பெண்களில் விஜி சுவாமிநாதன், சென்னையைச் சேர்ந்தவர். கார்பரேட் நிறுவன ஊழியர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவரும் விஜி, இரண்டு குழந்தைகளின் தாய்.

“ஒரு கட்டத்தில் உடல் பருமன் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டாக வேண்டும் என்று உறுதி செய்துகொண்டேன். மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். அதன் பின் சில வாரங்களுக்கு ஜாகிங் செய்தேன். சில மாதங்களில் படிப்படியாக இரண்டு கி.மீ. முதல் ஐந்து கி.மீ. வரை ஓட ஆரம்பித்தேன். என்னுடைய ஆர்வம் நாளடைவில் என்னுடைய குடும்பத்தினரையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வைத்தது. அதன்பின் மாரத்தான் பந்தயங்களில்கூட ஓடும் அளவுக்குத் தயாராகிவிட்டேன். இப்போது பலருக்கும் ஓட்டப் பயிற்சி அளித்துவருகிறேன்” என்று ஆவணப்படத்தில் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார் விஜி சுவாமிநாதன்.

ஆரோக்கியமான மாற்றம்

மும்பையைச் சேர்ந்த சீமா சர்மாவுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்பட்டன. கணவன் அவரைவிட்டு விலக, மகனைக் காப்பாற்றுவதற்காக வீட்டுப் பணியாளரானார். உடல் தசைப் பிடிப்பு பிரச்சினைக்காக நடைப் பயிற்சியும், ஓட்டப் பயிற்சியும் பெறத் தொடங்கி, மாரத்தான் ஓட்டப் பந்தய வீரராகவும் ஆனார்.

ஒட்டப் பயிற்சியைத் தொடங்கும்போது, அரைக்கால் சட்டை அணிந்தபடி ஓடும் அம்மாவை வித்தியாசமாக பார்க்கும் குழந்தை அவரிடமிருந்து முரண்படுவதும் பிறகு, தாயின் பயிற்சியை இயல்பாக எடுத்துக் கொள்வதும்கூட இந்த ஆவணப்படத்தில் உள்ளன.

பெங்களூரூவைச் சேர்ந்த சாரதா வெங்கட்ராமன், வீணைக் கலைஞர். அதோடு அவரின் 52-வது வயதில் நடைப் பயிற்சியிலும் ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டு, மாரத்தானிலும் பங்குபெறும் வீரராக ஜொலித்துக் கொண்டிருப்பதை ஆவணப்படத்தில் பார்க்க முடிந்தது.

எட்டு மாத கர்ப்பத்தில் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கிய கொல்கத்தாவின் மந்திரா சிங், மாற்றுத் திறனாளிகளுக்கான சிகிச்சையாகவே ஓட்டப் பயிற்சியை அளித்துவரும் அனுராதா தத் போன்றோரின் கதைகளும் ஒருமணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்தில் இருக்கின்றன.

படம் முடிந்ததும், பெண்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் எந்தப் பெரிய வசதிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை; எண்ணம் இருந்தால் போதும், குடும்பமே ஆரோக்கியமாக இருக்க முடியும் என்னும் உண்மை பொட்டில் அடித்தது போல் விளங்குகிறது.

SCROLL FOR NEXT