பெண் இன்று

பின் புத்தி அல்ல

செய்திப்பிரிவு

ஒருவர் பேசுவதைக் கூர்மையாகக் கவனிப்பதில் ஆண்களைவிடப் பெண்கள் இயல்பாகவே திறன் மிகுந்தவர்கள் என்று பொதுநம்பிக்கை உள்ளது. பென்சில்வேனியாவில் பெரல்மென் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வும் இதைக் கிட்டத்தட்ட மெய்ப்பித்துள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் நரம்பியல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு வழிகாட்டியுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூளை ஒளிப்படங்களைப் பயன்படுத்தி ஆய்வுசெய்ததில் ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு விதமான நரம்பிழைப் பின்னலைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெண்களின் பெருமூளை அரைக்கோளத்தில் உள்ள நரம்பிழைகள் நேர்த்தியான தொடர்பிணைப்பைக் கொண்டுள்ளன.

பெருமூளை பற்றி ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் பின்னணியில், உள்ளுணர்வுத் திறனுக்குப் பொறுப்பான வலதுபக்கமும், இடதுபக்கம் உள்ள காரண-காரிய அறிவும் பெண்களுக்கு ஆண்களை விட சிறப்பாக செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த சிறப்பியல்பே அவர்களைக் கூர்ந்து கவனிப்பவர்களாக ஆக்குகிறது.

ஆண்களின் சிறுமூளைக்குள் உள்ள நரம்பிழைத் தொடர்புகள் சிறப்பாக அமைந்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு விஷயத்தையோ, நிகழ்ச்சியையோ உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இந்த தொடர்பிணைப்பு உதவுகிறது. ஆண்களின் மூளைகளை ஆய்வுசெய்ததில் சிறுமூளையில் உள்ள தொடர்பிணைப்பும், பெண்களின் மூளைகளை ஆய்வுசெய்ததில் பெருமூளை தொடர்பிணைப்பும் சிறப்பாக உள்ளது.

“பெண்களின் மூளையும், ஆண்களின் மூளையும் பரஸ்பரம் ஈடுசெய்துகொள்வதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது” என்கிறார் விஞ்ஞானி ரூபேன் குர்.

டிஃப்யூசன்-டென்சர் இமேஜிங் முறையில் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியை மருத்துவர் ராகிணி வர்மா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

521 ஆண்கள் மற்றும் 428 பெண்களின் மூளைகளில் இயங்கும் நியூரான் செயல்பாடு அவதானிக்கப்பட்டது. 8 முதல் 22 வயது வரையிலானவர்கள் இந்த ஆய்வில் பங்குபெற்றனர்.

ஒரு நேரத்தில் ஒரு பணியைச் செய்வதிலும், கற்றுக்கொள்வதிலும் பெண்களை விட ஆண்கள் சிறப்பானவர்கள் என்றும் இதில் தெரியவந்துள்ளது. இடம், வெளி தொடர்பான தகவல்களை உள்வாங்குவதிலும், புலன்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் சிறந்தவர்களாக உள்ளனர். பெண்களோ, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதிலும், சூழல் குறித்த உணர்விலும் மேலானவர்களாக இருக்கிறார்கள். பேச்சு மற்றும் முகங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதிலும் பெண்களின் மூளை அபரிமிதமான திறனுள்ளது என்று ரோகிணி வர்மா தெரிவிக்கிறார்.

எந்தெந்த நரம்பிணைப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்துவமாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதை நோக்கி இந்த ஆய்வு முன் நகர உள்ளது.

தமிழில்: ஷங்கர்

SCROLL FOR NEXT