பெண் இன்று

சேனல் சிப்ஸ்: மீடியாதான் பிடிக்கும்!

மகராசன் மோகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல்வரை’ தொடரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ஜீவிதா, அடுத்து அதே தொலைக்காட்சியில் விரைவில் வரவுள்ள புதிய தொடருக்கான ஆடிஷனில் தேர்வாகிய உற்சாகத்தோடு இருக்கிறார்.

“நடிப்போ, நிகழ்ச்சித் தொகுப்போ மீடியாதான் என் உலகம். இந்தக் காலத்துப் பசங்க அவங்களுக்குப் பிடிச்ச துறையில் மட்டும்தான் வேலை செய்றாங்க. எங்க வீட்ல கூட, அடுத்த கட்டத்துக்குப் போலாமேன்னு வேற ஏதாவது துறை பற்றி யோசனை சொல்வாங்க. காதுல வாங்கிக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு மீடியா மேல காதல். விஜய் தொலைக்காட்சியில் ‘கல்யாணம் முதல் காதல்வரை’ தொடர் முடிந்ததும் சின்ன இடைவேளை கிடைத்தது. உடனே பெப்பர்ஸ் டிவியில் ‘டயல் பண்ணி சிரி கண்ணு’, ‘நாங்க சொல்லல’ என்று தொகுப்பாளினியாக மாறிட்டேன். அதுக்குள்ள புது தொடரோட வாய்ப்பும் வந்தாச்சு!’’ என்கிறார் ஜீவிதா.

நல்ல நேரம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தாமரை’ தொடரில் நிரோஷா மகளாக வரும் ஸ்வேதாவின் யதார்த்தமான நடிப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

“எப்போதுமே வித்தியாசமான தொடர்தான் என் தேர்வு. பாசம், வில்லத்தனம், திகில், நகைச்சுவை என்று பல அவதாரங்களில் சின்னத்திரைத் தொடர்களில் முகம் காட்டிட்டேன். அடுத்து சினிமா பயணம் என்று ஓடிக்கொண்டிருந்த நாட்களில் ரேடான் கம்பெனியோட ‘தாமரை’ தொடர் அமைந்தது. த்ரில், வெகுளித்தனம், அம்மா, மகள் பாசம் என்று கதை சுவாரஸ்யமாக நகருது. இந்தத் தொடர் அமைந்த நேரத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கவண்’, சுந்தர்.சி தயாரிக்கிற ‘மீசையை முறுக்கு’, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் படம்னு பரபரப்பா நடிச்சு முடிச்சாச்சு. டப்பிங் போகுற வேலையிலதான் இப்போ இருக்கேன்’’ என்று பூரிப்போடு சொல்கிறார் ஸ்வேதா.

SCROLL FOR NEXT