பெண் இன்று

பணியிடங்களில் பாலியல் வன்முறை: நெருங்கி வரும் ஆபத்து

எம்.ஆர்.ஷோபனா

சமூகத்தில் பெண்களின் கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சிக்கேற்ப அவற்றைத் தடுக்கும் முட்டுக்கட்டைகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதற்குச் சிறந்த உதாரணம்.

தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்த இதழின் பெண் நிருபர் தெரிவித்திருப்பதும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பெண் பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருப்பதும் பெண்கள் மீதான வன்முறை எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இத்தனைக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டு காலமாகத்தான் பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் கால்பதித்தித்துள்ளனர். எனினும் ஆரம்ப காலத்திலிருந்தே உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களாலோ அல்லது மேலதிகாரிகளாலோ பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகித்தான்வருகின்றனர். 1997ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய விசாகா தீர்ப்பின் வழிகாட்டுதல்படி இத்தகைய கொடுமையான செயலைத் தடுக்க சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடத்தில் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது முதல் பாலியல் பலாத்காரம் செய்வது வரையிலான பணியிட குற்றங்களுக்கு இச்சட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புகார் கமிட்டிகள் அமைப்பது, அக்கமிட்டியில் பெண் ஒருவரை தலைவராக நியமிப்பது என இச்சட்டம் வலியுறுத்துக்கிறது.

அரசுத்துறையும் விதிவிலக்கல்ல

பணியிடம் என்பது தனியார் துறை, அரசுத்துறை இரண்டையும் உள்ளடக்கியது. சுமார் 300 ஆண்டு கால அரசு இயந்திரத்தைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா. இன்று அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இடஒதுக்கீடு போன்றவை அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களைத் தவிர்க்க முடியாத அங்கமாக ஆக்கியுள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அரசு அலுவலகங்களும் விதிவிலக்காக இல்லை என்கிறார் அரசுத்துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் கவிதா.

“இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் புகார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தும். பெரும்பாலான பெண் ஊழியர்கள் வாய்மொழியாகத் தங்கள் பிரச்சனையைக் கூறுகின்றனர். ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, எழுத்து மூலமாகப் புகார் அளிக்க முன்வரத் தயங்குகின்றனர்” என்கிறார் இவர்.

அலைக்கழிப்புதான் மிச்சம்

அரசு அலுவலகங்களில் இத்தகைய நிகழ்வுகளின் இன்னொரு பக்கத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சாந்தி. “நான் புகார் அளித்த பின், பல முறை மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் அலைக்கழிக்கப்பட்டேன். நிறைய பண விரயமும் கால விரயமும் மன உளைச்சலும் ஏற்பட்டது. ஓரளவு விழிப்புணர்வு கொண்ட குடும்பச்சூழலால் என்னால் இந்த வழக்கில் போராட முடிகிறது. முதல் தலைமுறை பெண்களுக்கு இவ்விதமான பிரச்சனைகளை சோர்வடையாமல் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை” என யதார்த்த நிலையை எடுத்துரைக்கிறார் சாந்தி.

இதே போன்ற கருத்தை, முன்னாள் நீதிபதிக்கு எதிராக புகார் கொடுத்த பெண் பயிற்சி வழக்கறிஞர் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார். “நான் மிகவும் தாமதமாக புகார் அளித்ததற்குக் காரணம் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீண்ட காலமாகும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை உணர்வுபூர்மாகக் கையாளுவதற்கு இந்தியச் சட்ட அமைப்பில் போதிய இடமில்லை என்று நினைக்கிறேன். ஒரு வழக்குரைஞராக இதை கூறுவது முரணாக இருக்கலாம். எனக்கு நிகழ்ந்தது குற்றம் என்றாலும், அதை பெரிதுப்படுத்தாமல் இருக்கவே என் பாட்டியும் அம்மாவும் விரும்பினர். அதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை”, என்று வேதனையோடு தெரிவிக்கிறார்.

பாதுகாப்பு சாத்தியமா?

பொதுத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பணியிடங்களில் பாலியல் கொடுமை இழைக்கப்படும் நிலையில், ஆயுத்த ஆடை, தோல்தொழிற்சாலை இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் விவசாய நிலங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் எத்தகைய பாதுகாப்பு இருக்கும் என விளக்கத் தேவையில்லை. பெரும்பாலும் உழைக்கும் மகளிர் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களாகவே பணிபுரிக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் பணியிட பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படுவதில்லை. எனவே, தற்போதுள்ள சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை இவர்களிடம் கொண்டு செல்ல அதிக முனைப்பு காட்டப்படவேண்டும்.

பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவதா?

இந்திய அரசியல் தலைவர்கள் பலரின் முகத்திரையை கிழிக்கும் புலனாய்வு கட்டுரைகளுக்கு பெயர்போன தெஹல்கா போன்ற பத்திரிக்கையிலேயே பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருந்தாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் எல்லா துறைகளிலும் இத்தகைய பிரச்சினைகள் காலகாலமாக இருந்து வருகிறது என்று கூறுகிறார் பத்திரிக்கையாளர் ப்ரேமா ரேவதி. “பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது ஆண்கள் அவர்களுக்கு எதிராகக் கையாளும் ஆயுதம். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலை பொது சமூகத்தில் பரவலாக உள்ளது. இதற்கு பெண் உடலைப் பற்றி தவறாகச் சித்தரிக்கும் ஊடகங்களும் சினிமாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த மேம்போக்கான பார்வையை மாற்ற வேண்டும்” என்கிறார் இவர்.

சிக்கலைச் சமாளித்தேன்

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

கல்லூரி முடித்ததுமே எனக்குத் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. சென்னையிலேயே பிறந்து, வளர்ந்ததால் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பழகுவது என் இயல்பு. ஆனால் என் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே அலுவலச் சூழல் எனக்குப் புதிதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் எனக்கு நேரடி மேலதிகாரியாக இருந்தவர் மற்றவர்கள் எதிரில் பக்கா ஜெண்டில்மேன். ஆனால் நான் அவருடன் தனித்து இருக்கும் சமயங்களில் அவரது இன்னொரு முகம் வெளிப்படும். பைல் தரும் சாக்கில் என் கையைத் தொடுவது, இயல்பாகக் கூப்பிடுவது போல தோளைத் தட்டுவது என ஒவ்வொரு நாளும் தொல்லை தரத் தொடங்கினார். சில சமயம் அவரது பேச்சும் எல்லை மீறும். இவரைப் பற்றி அலுவலகத்தில் யாரிடமும் புகார் செய்யமுடியாத நிலை. காரணம் அவர் போன்ற உத்தமர் இருக்கமுடியாது என்றுதான் அனைவரும் நம்பினர். நிறுவனத்துக்கு அவர் மிக முக்கியமானவரும்கூட. அதுவும் தவிர, இந்தத் தொல்லைக்காக நல்ல சம்பளத்தில் இருக்கும் வேலையையும் விட முடியாது.

என்ன செய்வது என யோசித்தேன். அவருடன் தனியே இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்தேன். அப்படியும் மீறி அவர் என்னைத் தொடுகிற நேரத்தில், அனைவர் காதுக்கும் கேட்கும்படி, ‘இப்போ என்னத்தட்டிக் கூப்பிட்டீங்களே? என்ன சார் விஷயம்?’ என்று கேட்பேன். அவரது முகம் சட்டென மாறியது, எனக்குக் கிடைத்த வெற்றி. அவரிடம் கற்க வேண்டிய வேலைகளை அடுத்தவர்களிடம் நானே வலியப் போய் கற்றுக்கொண்டேன். எனது இந்த மறைமுக எதிர்ப்பும், விலகலும் அவரை எல்லையோடு நிறுத்தியது. நானும் என் பணியைச் சிக்கலின்றித் தொடர்ந்தேன்.

பாதிக்கப்படுபவர்களின் போராட்டத்தின் காரணமாகவும், சமூக அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகவும் நீதித்துறையின் தலையீட்டினாலும் ஆட்சியாளர்கள் அவ்வப்போது உரிய சட்டங்களை இயற்றத்தான் செய்கிறார்கள். ஆனால், அதைவிடவும் முக்கியம் அச்சட்டங்களை உண்மையான பொறுப்புணர்வோடும் கடமை உணர்ச்சியோடும் அமல்படுத்துவது. இச்சட்டங்கள் யாரைப் பாதுகாப்பதற்காக இயற்றப்படுக்கின்றனவோ அவர்களிடம் சட்ட விழிப்புணர்வை உருவாக்குவது மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவரும்.

SCROLL FOR NEXT