பெண் இன்று

கிராமப் பெண்களுக்கும் வேண்டும் பெண் கல்வி

என்.சரவணன்

இந்தியாவில் பெண்கள் எழுத்தறிவு பெற உதவும் திட்டங்களை 1974இலேயே உருவாக்கினார்கள். இருந்தபோதிலும் இந்திய இளம் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் இன்னும் எழுத்தறிவு பெறவில்லை. இந்திய இளைஞர்களில் எழுத்தறிவு பெறாதவர்கள் 28.7 கோடிப் பேர். இது உலக அளவில் 37%. எழுத்தறிவு பெறாதவர்களில் பெண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தியாவில் பெண்கள் எழுத்தறிவை மையப்படுத்தும் தற்போதைய திட்டங்கள் அனைத்தும் நகரப் பகுதியில் வசிக்கும், வசதி படைத்த பெண்களை மட்டுமே கவனப்படுத்துகின்றன. இதனால் கிராமப் பகுதியில் வசிக்கும், ஏழைப் பெண்களின் எழுத்தறிவு தேக்கமடைந்துள்ளது. இவர்கள் அனைவரும் எழுத்தறிவு பெற இன்னும் 56 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா.வின் கல்வி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் பெண்கள் எழுத்தறிவு தொடர்பாக இன்னும் அதிக முனைப்பு காட்டப்பட்டால் மட்டுமே உலக ரீதியாகச் சுட்டப்படும் எழுத்தறிவு அளவை இந்தியப் பெண்களால் எட்ட முடியும்.

“பெண்களின் கல்வி புறக்கணிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்கிறார் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா பொகோவா. ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற உதவும் முக்கியமான கருவி கல்வி என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா விரைவில் இத்தகைய பெண்களின் எழுத்தறிவுக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் கிராமப்புற ஏழைப் பெண்களின் வாழ்வில் இருள் விலக வாய்ப்பில்லாமல் போய்விடும்.

SCROLL FOR NEXT