பெண் இன்று

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: வீடியோக்கள் வருமானம் தருமா?

காம்கேர் கே.புவனேஸ்வரி

வெப் டிவி குறித்து நான் கடந்த இதழில் எழுதியைத் தொடர்ந்து பலரும் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்கள். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலை இந்த இதழில் பார்க்கலாம்.

யூடியூப் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?

யூடியூபில் நாம் உருவாக்கி, பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். தனிநபர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யூடியூப் சேனலில் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் வசதியை இயக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு Monitize என்று பெயர். உங்கள் யூடியூப் சேனலில் லாகின் செய்துகொண்ட பிறகு, Creative Studio > Channel > Status and Features > Monitization என்பதில் உள்ள Enable பட்டனை க்ளிக் செய்யவேண்டும்.

யூடியூப் வீடியோ மேனேஜர் பகுதியில் எந்தெந்த வீடியோ மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களோ, அந்த வீடியோக்களில் உள்ள டாலர் ($) குறியீட்டை க்ளிக் செய்து Monitize செய்துகொள்ள வேண்டும்.

கூகுள் ஆட்சென்ஸ் உங்கள் வீடியோக்களின் கீழே எழுத்துகள், படங்கள், சிறிய வீடியோ காட்சிகள் மூலம் உங்கள் பதிவுகளுக்கு ஏற்ப விளம்பர லிங்க்குகளை அளிக்கும். பார்வையாளர்கள் அவற்றை க்ளிக் செய்து பார்க்கும்போது, ஆட்சென்ஸ் மூலம் வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு முறை அந்த விளம்பர வீடியோக்கள் க்ளிக் செய்யப்படும்போதும் உங்கள் அக்கவுண்ட்டில் பணம் சேரும்.

நீங்களே அதிக முறை உங்கள் வீடியோக்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்துகொண்டே இருந்தால், கூகுள் ஆட்சென்ஸ் உங்கள் யூடியூப் சேனலிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும். கட்டணத்திலும் விதிமுறைகளிலும் ஆட்சென்ஸும் யூடியூப் நிர்வாகமும் எடுக்கும் முடிவே இறுதியானது. இப்போது Monitization திரை கிடைக்கும். இதில் Getting Started என்ற பட்டனை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் சேனலை யூடியூப் பார்ட்னராக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) அக்கவுன்ட்டில் உறுப்பினராக விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். உங்கள் யூடியூப் சேனல் முகவரியை கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுன்ட்டோடு இணைத்துக்கொண்டால்தான் யூடியூப் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, கூகுளில் அனுமதி கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும். உங்கள் யூடியூப் வீடியோவில் உள்ள காட்சிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் கூகுள் ஆட்சென்ஸ் மற்றும் உங்கள் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முறையான அனுமதி கிடைக்கும்.

யூடியூப் மூலம் லைவ் வீடியோக்களை வெளியிட முடியுமா?

திருமணம், பிறந்தநாள், புத்தக வெளியீட்டுவிழா போன்றவற்றை லைவ் ஆக யூடியூபில் வெளியிட முடியும். இதற்கு, உங்கள் யூடியூப் சேனலில் லாகின் செய்துகொண்ட பிறகு, Creative Studio > Live Streaming > Stream Now என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது திரையில் Set Up Encoding Software என்பதை க்ளிக் செய்து, தேவையான என்கோடிங் சாஃப்ட்வேரைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.

என்கோடர் சாஃப்ட்வேரை இயக்கிக்கொண்டால் யூடியூபில் ‘Live’ வெளிவரும். பிறகு உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் உள்ள வெப்கேமரா மூலம் நீங்கள் காட்சிப்படுத்துகிற நிகழ்ச்சிகள் லைவ் ஆக ரெகார்ட் ஆகத் தொடங்கி, உங்கள் சேனலில் ஒளிபரப்பாகும். ரெகார்டிங்கை நிறுத்த விரும்பினால் என்கோடர் சாஃப்ட்வேரை இயக்கத்திலிருந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யூடியூப் சேனல் வீடியோக்களில் லோகோ வைக்க முடியுமா?

தொலைக்காட்சி சேனல்களின் லோகோக்கள் அவற்றின் பெயரில் வெளிவருவதைப்போல உங்கள் யூடியூப் வீடியோக்களில், உங்கள் சேனல் லோகோவை வெளியிட முடியும்.

இதற்கு இமேஜ் ஃபைலாக உங்களுக்கான சேனல் லோகோவை போட்டோஷாப், கோரல்டிரா போன்று ஏதேனும் ஒரு சாஃப்ட்வேர் மூலம் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

உங்கள் யூடியூப் சேனலில் லாகின் இன் செய்துகொண்ட பிறகு, Creative Studio > Channel > Branding மூலம் உங்கள் சேனல் லோகோவைத் தேர்ந்தெடுத்து, பொருத்திக்கொள்ளலாம். இனி உங்கள் யூடியூப் சேனல்களில் நீங்கள் பதிவேற்றும் எல்லா வீடியோக்களிலும் அந்த லோகோ நிரந்தரமாக இருக்கும். உங்களுக்கான அடையாளமாக இருக்கும்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

SCROLL FOR NEXT