பெண் இன்று

களம் புதிது: அரசியலும் பெண்களுக்குச் சொந்தம்

எல்.ரேணுகா தேவி

தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் குவிந்திருக்கிறது. ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் எட்டுப் பெண்கள் போட்டியிடுகிறார்கள். அரசியல் ஆண்களுக்கானது என்ற நினைப்பு மாறிவரும் சூழலில் இவர்களைப் போன்றவர்களின் வருகை, நம்பிக்கை தருகிறது. வீட்டு ஆண்களின் கைப்பாவையாக இருந்து கையெழுத்து மட்டுமே போடுகிறார்கள் பெண்கள் என்பது போன்ற விமர்சனங்களுக்கு நடுவே உறுதியோடும் தைரியத்தோடும் எதையும் எதிர்கொள்ளும் பெண்களாலேயே அரசியலில் காலூன்றி நிற்க முடிகிறது.

ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள தெலுங்கு மக்களின் ஆதரவு தனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சுயேச்சை வேட்பாளராக 58 வயதில் சுறுசுறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார் லலிதா மோகன். தனியார் பள்ளியின் தாளாளராக இருப்பவர், முதல் முறை நேரடி அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். ஆர்.கே. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நலத்திட்ட உதவிகள் வழங்கியதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் லலிதா.

“நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலுக்கு முக்கியக் காரணம், துப்புரவுத் தொழிலாளர்கள் நடத்திய மாநாடுதான். துப்புரவுத் தொழில் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள். தாங்கள் படும் பாட்டை அவர்கள் மேடையேறிப் பேசியபோது எந்த அளவுக்குத் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். இந்த மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற காரணத்தால் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தெலுங்கு இன மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும்” என்று சொல்லும் லலிதா, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களைச் சீராக்குவது, சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றுவது போன்றவை தன் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை என்று சொல்கிறார்.

அரசியல் அறிமுகத்துக்கு முன்பே மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் அறிமுகம் பெற்றவர் சகுந்தலா. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் தலித் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும் பல போராட்டங்களில் பங்கேற்றவர். பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் நடத்தியதற்காக 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் ஒரு மாதம் இருந்தவர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தேர்தல் பரப்புரைக்காக ஆர். கே. நகர் முழுவதும் சுற்றிவருகிறார்.

தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த சகுந்தலா, “இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இத்தனை ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன. நான் தேர்தலில் ஜெயித்தால் மக்களுக்கு நல்ல குடிநீர், இருப்பிடம், சுகாதாரமான சூழ்நிலை, மருத்துவமனைகள் போன்றவற்றை அமைத்துக் கொடுக்கப் பாடுபடுவேன். காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளுக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுப்பேன்.

தண்ணீர்ப் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை ஜி.பி.எஸ். கருவி கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை தேர்தல் முடிவு எனக்குச் சாதகமாக இல்லாதபட்சத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்று இறுதிவரை போராடுவேன்” என்கிறார் சகுந்தலா.

மருத்துவராகவும் வழக்கறிஞராகவும் உள்ள பிரவீணா, எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாதவர். சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி, இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். “கடந்த இடைத்தேர்தலிலும் நான் போட்டியிட்டேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை உறுதியாக வெற்றி பெறுவேன். ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேக முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்ற ஒரே தேர்தல் வாக்குறுதியோடு களம் இறங்கியிருக்கிறேன்” என்கிறார் பிரவீணா.

SCROLL FOR NEXT