பொதுவாக ஃபேஷன் ஷோ என்றாலே நமக்கு நினைவில் வருவது ஒல்லியான, உயரமான பெண்கள் அணிவகுத்து செல்வதுதான். ஆனால் இந்தப் பிம்பத்தை உடைத்திருக்கிறார் கொலன் தெரியால்ட் (collen theriault). அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசித்துவரும் அவர் ‘உடல் வளர்ச்சி குன்றியவர்களுக்காக சர்வதேச ஃபேஷன் ஷோ’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். மேலும் உடல் வளர்ச்சி குன்றியவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைத்து வருகிறார்.
சமீபத்தில் கொலன் தெரியால்ட் துபாயில் ஏற்பாடு செய்திருந்த ஃபேஷன் ஷோ சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதில் வளர்ச்சி குன்றிய பெண்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தியான உடையாலும் தன்னம்பிக்கையாலும் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
இந்த ஃபேஷன் ஷோவின் முக்கிய நோக்கம் இந்தத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகுபாட்டைக் களைவதே என்று கொலன் கூறியிருக்கிறார். துபாயில் வசித்துவரும் வளர்ச்சிகுன்றியவரான ஸாரா முஃப்பதல் கும்ரி தன்னைப் போலவே வளர்ச்சி குறைந்தவரைத் திருமணம் செய்துகொண்டவர்.
“நாங்கள் பொருளாதார ரீதியில் மேம்பட்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கான ஆடைகளைத் தேர்வு செய்யும் போது பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. எங்களின் உடல் அளவுக்கு ஏற்ற உடைகளைத் தேடியெடுப்பது சவாலாக இருக்கிறது. பல நேரங்களில் குழந்தைகளுக்கான ஆடைகளை எங்களுக்காகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம், இல்லையென்றால் ஆடைகளை எங்களின் உயரத்துக்கு ஏற்ற அளவில் வெட்டித் தைத்து அணிந்துகொள்கிறோம். குறிப்பாக எங்களுக்கு மிகவும் பிடித்த இந்தியப் பாரம்பரிய ஆடைகளை இப்படி ஆல்டர் செய்து அணிய வேண்டியதாக உள்ளது” என்கிறார். இது போன்ற நெருக்கடிகளைக் களைய கொலனின் ஃபோஷன் ஷோ பாதையமைக்கும்.