பெண் இன்று

என் பாதையில்: அத்தை பேசுகிறேன்

செய்திப்பிரிவு

வாழ்க்கையில் நடந்திருக்கவே கூடாத நிகழ்வுகளில் ஒன்று நிகழ்ந்து விட்டது. என் தோழி ஒருவரின் பதின்ம வயது மகன் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுவிட்டான். ஏன்? தெரியாது. மிகவும் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். பள்ளித் தரப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி. எந்தவிதமான தோல்வியையும் சிக்கலையும் இயல்பாகக் கையாளக்கூடியவன். எந்தக் காரணமும் தெரியாத நிலையில் அவன் மரணத்தைச் சுற்றி ஆயிரம் காரணங்கள் புனையப்பட்டன.

பெற்றோரிடையே ஒற்றுமை இல்லை, அது அவனை பாதித்துவிட்டது. இல்லை, இன்டர்நெட்டில் அடலசன்ட் படம் பார்த்துக் கொண்டிருந்தான். அதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்துவிட்டார்கள். அதனால் அவமானம் தாங்காமல் இந்த முடிவை எடுத்துவிட்டான். அட அதுவெல்லாம் இல்லைங்க. ஏதோ ஹேக்கிங் சமாச்சாரம். ஏதோ ஒரு வெப்சைட்டை ஹேக் செய்யப் போய் மாட்டிக்கொண்டான். ஆன்ட்டி சோஷியல் ஆக்ட்டிவிட்டி என்று பயந்துபோய், இப்படிச் செய்து விட்டான் என்று ஏராளமான ஊகங்களும் கற்பனைகளும் அவன் இறப்பைப் பின்தொடர்ந்தன. ஆனால் எதற்காக அவன் தன்னையே மாய்த்துக்கொண்டான் என்பது இன்றுவரை தெரியாது.

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் குழந்தை தன்னுடைய பயங்களையும், தோல்விகளையும், அவமானங்களையும் சொல்லி அழவோ வெளிப்படுத்தவோ ஒரு தோள்கூட கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை! நம்பிக்கையான உறவினரோ, ஆசிரியரோ, குடும்ப நண்பரோ ஒருவரது முகம்கூட அவனுக்குக் கடைசி நொடியில் தோன்றவில்லையா?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இத்தனை இறுக்கமாக இருந்ததில்லை. பதின்ம வயது ஆண்பிள்ளைகள் குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டால் மாமா வீட்டுக்கோ, பாட்டி வீட்டுக்கோ, சமயத்தில் தூரத்து உறவினர் வீட்டிற்கோ சென்றுவிடுவார்கள். ஒரு வாரம், பத்து நாள் கழித்து குடும்பப் பெரியவர்கள் அவர்களை குடும்பத்துடன் சேர்த்துவைப்பார்கள். இதுவே பெண் பிள்ளைகள் என்றால் அவர்களது உண்ணாவிரதத்தை முடித்து வைக்க ஆச்சியோ, பெரியம்மாவோ வருவார்கள்.

ஆனால் இன்று குழந்தைகளுக்கு ரத்த சம்பந்த உறவுகளே ஆன்ட்டி, அங்கிள் ஆன பிறகு, அவர்கள்தான் நம் குழந்தைகளோடு மனம்விட்டு எப்படி உரையாட, உறவாட முடியும்? வீட்டுக்கு யாராவது உறவினர் வந்தால் சில வளர்ந்த குழந்தைகள் மொபைலில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்து, ஓர் அரை புன்னகையைக் கொடுப்பார்கள். அல்லது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்வார்கள். இதுதான் நாகரிகம் என்று சொல்லி வளர்க்கப்படும்போது குழந்தைகளைக் குறைசொல்லி என்ன பயன்? வீட்டுக்கு அடிக்கடி உறவினர்கள் வந்தபடி இருந்தால், தங்களுடைய தனிமை பாதிக்கப்படும் என குழந்தைகளைவிட நாம்தான் அதிகம் நினைக்கிறோம்.

இன்றைய பெற்றோர்களின் தாரக மந்திரம் ‘நான் பட்ட கஷ்டங்களை அவன் படக் கூடாது, எனக்குக் கிடைக்காததெல்லாம் அவனுக்கு கிடைக்க வேண்டும்’. இதற்குப் பெயர்தான் பாசம் என்று பல பெற்றோர் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைத்த அத்தனையையும் நாம் நம் குழந்தைகளுக்குத் தர மறந்துவிடுகிறோம்; மறுத்துவிடுகிறோம். உறவினர் அரவணைப்பு, ஆரோக்கியமான உணவு, காற்றோட்டமான பரந்தவெளியில் விளையாட்டு - இவை எதுவும் நம் குழந்தைகளுக்குத் தேவையில்லை என பல பெற்றோர் முடிவு செய்துவிடுகிறார்கள்.

நம் இன்றைய தேவையெல்லாம் அத்தை, சித்தி, மாமா, பாட்டி போன்ற உறவுமுறைதான். வாருங்கள் அத்தையாக, சித்தியாக, பாட்டியாக மாறுவோம். நமது குழந்தைகளை அரவணைப்போம். பெற்றோர்களே, நீங்களும் எங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள். பதின்பருவ குழந்தைகள் உங்களிடம் சொல்லத் தயங்குவதைக் கேட்டு, நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். என்ன இருந்தாலும் அவர்கள் எங்கள் ரத்தமும்தானே. இழப்புகள் எங்களுக்கும் வலிக்கிறது.

இப்படிக்கு
பெரியம்மாவால் அரவணைக்கப்பட்டு ஆளாக்கப்பட்ட அத்தை சஞ்சலா ராஜன்.

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள், தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.

SCROLL FOR NEXT