ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீது மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களுக்கு முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் (1991-1995) மிகப் பெரிய ஏமாற்றம்தான் கிடைத்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. தொடர்ந்து நில அபகரிப்பு, சொத்துக் குவிப்பு, ஊழல் என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.
சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி பாலியல் பலாத்காரச் சம்பவம், வாச்சாத்தி மலைப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளும் அவற்றின் மீது அரசின் பாராமுகமும் தொடர்ந்தது. இதன் விளைவாக ஏற்கெனவே அவர் வென்ற பர்கூர் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். ஆவேசமுற்ற மக்கள், அவரது ஆட்சியையும் பறித்தனர்.
அதன் பிறகான கைது, சிறை, பெண் என்ற அனுதாபம், சில வழக்குகளிலிருந்து பெற்ற விடுதலை இவை யாவும் 2001-ல் மீண்டும் அவரை ஆட்சிக்கு அனுப்பியது. ‘இடியை விழுங்கி மின்னலைத் துப்பிய மனிதரில் புனிதர்’ என்று அப்போது ஓர் உறுப்பினர் ஜெயலலிதாவை வர்ணித்தார். ‘நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் என் தாய்’ என்றார் இன்னோர் உறுப்பினர்.
தமிழகத்தின் அனைத்துப் பெண் தெய்வங்களோடும் அவரை ஒப்பிட்டு ஆளும் கட்சியினர் வணங்கினர். இது ஆதிகால தாய்வழிச் சமுதாயமோ என நினைக்கும் அளவுக்குக் காலில் விழுவதும் எங்கள் குலசாமியே என உணர்ச்சிப் பெருக்கில் புகழாரம் சூட்டுவதுமாகச் சட்ட மன்றம் அன்று காட்சியளித்தது.
பறிபோன ஆட்சி
இந்த முறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைத் தமிழகத்தில் உருவாக்கியது. மீண்டும் ஆட்சியை இழந்தார். இவ்வாறான ஏற்றமும் இறக்கமுமான காலகட்டத்தில் அதற்கேற்ற வகையில் தம்மையும் தமது அமைப்பையும் போராட்டங்களில் ஈடுபடுத்திக்கொள்வதற்கு அவர் தவறியதில்லை.அதுவரை வீராங்கனை வேலுநாச்சியார், தங்கத் தாரகை, டாக்டர் புரட்சித்தலைவி என அழைக்கப்பட்டுக் கொண்டிருந்ததற்கு மாறாக ‘அம்மா’ என்று அழைக்கப்படுவதையே தான் விரும்புவதாக மூன்றாவது முறை வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்தபோது சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்தார்.
அம்மா என்ற சொல் பின்னர் அரசியல் சொல்லாகவே மாறியது. அரசின் லேப்டாப் கருவியை இலவசமாகப் பெற்றுக்கொண்ட மாணவி, அம்மாவுக்கு நன்றி என்று சொல்லும் அளவுக்குத் தாக்கத்தைப் பெற்றிருந்தது.
‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’, ‘உங்களைத் தவிர எனக்கு யாருமே இல்லை’ என்பன போன்ற அவரது முழக்கங்கள் ஏழைகளின் செவிகளில் விழுந்தன. 37 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது எதிர்க்கட்சியாக அமர்ந்ததும் நான்காவது முறை ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட தும் ஒரு பெண் என்ற முறையில் அவரது தனித்த சாதனை என்றே கருதப்படுகின்றன.
வலுவான எதிர்ப்பு
சொத்துக் குவிப்பு குற்றங்களில் நீதிபதியின் தீர்ப்பு, சிறைவாசம் இவற்றுக்குப் பின்னால் அவர் ஒரு பெண்ணாக என்ன உணர்ந்திருப்பார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாத அளவுக்கு இரும்புப் பெண்மணி என்ற பிம்பமே மறைத்து நின்றது.
அரசியலாக அவர் கடைப்பிடித்த கொள்கைகளின் மீது நிறைய கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனாலும் மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசின் சில நிர்பந்தங்களைப் புறக்கணிப்பதில் அவரது செயல்பாடு உறுதி மிக்கதாகவே இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியமான மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்தது, நீட் தேர்வைப் புறக்கணித்தது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது, கெய்ல் நிறுவனத்தை வெளியேற்றியது உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.
இரும்புப் பெண்ணின் இறுதிப் பயணம்
தொடர்ந்து இதுபோன்ற எதிர்ப்பை முன்னெடுத்திருக்க வேண்டிய காலகட்டத்தில் திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அவரைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த இரும்புக் கோட்டை மருத்துவமனையிலும் தொடர்ந்தது. அங்கு அவர் சுகவீனமடைந்த இயல்பான பெண்ணாகத்தான் இருந்திருப்பார். ஆகவேதான் ஒருபெண் என்பதால் அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட முடியவில்லை என அரசே சொன்னது. அதிர்ச்சிகரமான அவரது மரணம் பெண்களிடத்தில் பெரும் அனுதாபத்தையும் துக்கத்தையும் உண்டாக்கியது. அரசியலில் சர்ச்சைகளும் உருவாகத் தொடங்கின. இருந்தாலும் ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தலைவர்களின் வரிசையில் முதல் பெண் என்ற புகழைச் சுமந்தபடி அவருடைய இறுதிப் பயணம் மாலையில் மெரினா நோக்கிக் கிளம்பியது. சொத்துக் குவிப்பு, ஊழல், நீதிமன்றத்தின் சிறை தண்டனை போன்றவை அவரது அரசியல் வாழ்க்கையின் மறுக்க முடியாத கறுப்புப் பக்கங்களாகப் பின்தொடர்கின்றன.
ஒரு தலைவரோ தலைவியோ மறைந்த பிறகு அந்த இடம் வெற்றிடமாக மாறிவிடாது.
நதி, தான் செல்ல வேண்டிய பாதையைத் தேடிக் கொண்டிருப்பதில்லை.
இயற்கையைப் போலவே பணம், பதவி, புகழை எதிர்பாராத மக்களின் சேவையை முன்னெடுக்கும் அரசியலை நோக்கிப் பெண்களும் முன்னேறுவார்கள்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com