கணவர் தாயுமாகலாம், தந்தையுமாகலாம் ஏன் சகோதரன் இடத்தையும் நிரப்பலாம். ஆனால் எனக்குக் காலும் அவரே, கையும் அவரே. நான் 14 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அத்துடன் முதுகுத் தண்டுவடத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. வாக்கர், வீல் சேர் இரண்டும் என்னுடைய வாழ்க்கையாகிப்போயின. அதன் விளைவால் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எழுத்தில் கொண்டுவர முடியாது, வார்த்தைகளாலும் விளக்க முடியாது. அந்தத் துயரத்துக்குள் நான் கரைந்துபோகாமல் காத்தவர் என் கணவர்.
ஒவ்வொரு நாளும் வலியோடு தொடங்கி வலியோடுதான் முடியும். ஒரு நாளின் பெரும்பாலான நேரம் கால், முதுகு வலியல் துடித்துப் போவேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று என்னால் சும்மா இருக்கவும் என்னால் முடியாது. எம்ப்ராய்டரி, கைவினைக் கலை, பத்திரிகைகளுக்கு எழுதுவது போன்றவை என் பொழுதுபோக்காக இல்லாமல் முழு நேர வேலையாகவே மாறின. அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தந்து என்னை உற்சாகப்படுத்தி உறுதுணையாக இருந்தவர் அவரே.
அன்று தொடங்கி, கடந்த 14 ஆண்டுகளாக அந்த அன்பில் துளியும் மாற்றமில்லை. இத்தனை ஆண்டுகளில் நான் உதவிக்குக் கூப்பிட்டபோது அவர் ஒருமுறைகூட முகம் சுளித்ததே இல்லை. அவருக்குத் தற்போது 68 வயது. அவருக்கு உதவவே ஒருவர் தேவைப்படுகிற வயது. ஆனால், என் மீது கொண்ட அன்பிலும் எனக்கு உதவிசெய்வதிலும் எந்தக் குறையும் வைத்ததில்லை. தொட்டதெற்கெல்லாம் மனைவியைத் திட்டிக்கொண்டும், அவர்களுடைய திறமைகளைக் குறைத்துப் பேசிக்கொண்டும் இருக்கிறவர்களுக்கு மத்தியில் என் கணவர் எனக்குப் பத்தரை மாற்றுத் தங்கமாகவே தெரிகிறார்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |